அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை தம் தெய்வீக ஜீவனால் நிரப்புவதற்கு விரும்புகிறார். இன்று அவர் தம் ஜீவத்தண்ணீரை உங்கள் ஆவிக்குள், சரீரத்திற்குள், உங்கள் குடும்பத்துக்குள் பொழிகிறார். அவர் ஜீவத்தண்ணீருள்ள நதியாயிருக்கிறார். உங்களுக்குள் வறண்டு, விடாய்த்திருக்கும் எல்லா இடங்களுக்கும் புத்துயிர் அளிக்க அவர் வாஞ்சிக்கிறார். ஒருவேளை, "என் பெலனை இழந்துபோனேன். ஆவிக்குரியவிதத்தில் வறண்டுபோனதாக நினைக்கிறேன்," என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கலாம். அப்படியானால், திடன்கொள்ளுங்கள். இப்போதே தேவ ஜீவன் உங்களை நோக்கிப் பாய்கிறது. அவரது கிருபை உங்களைப் பெலப்படுத்துவதற்கு, புத்துயிர் அளிப்பதற்கு, அவர் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற இடத்துக்கு உயர்த்துவதற்கு பொழியப்படுகிறது. கர்த்தர், "கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்" (ஏசாயா 27:3) என்ற அருமையான வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். இது எவ்வளவு நிச்சயத்தை அளிக்கிறது. எப்பொழுதெல்லாம் உங்கள் ஆத்துமா விடாய்த்துப்போகிறதோ, எப்பொழுதெல்லாம் உங்கள் இருதயம் வெறுமையாய் காணப்படுகிறதோ, எந்தச் சூழ்நிலைகள் உங்கள் பெலனை வற்றிப்போக பண்ணுகிறதோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்குப் புத்துயிர் அளிப்பதாக ஆண்டவர்தாமே வாக்குப்பண்ணுகிறார். அவர் தம் ஜீவனை உங்கள்மேல் தொடர்ந்து பொழிகிறார்; உங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் இரவும் பகலும் உண்மையாய் கண்ணோக்குகிறார்.

இந்த வாக்குத்தத்தம், கிராமத்து விவசாயி ஒருவரை எனக்கு நினைவுப்படுத்தியது. அரசுப் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக இருந்த என் உறவினர் ஒருவர் இரவு 9 மணிக்கு வீடு திரும்புவார். ஒருநாள் இரவு, அவர் தன் வயலை நோக்கிப் போய்க்கொண்டிருந்த ஒரு விவசாயியைக் கண்டு, "இரவு இவ்வளவு தாமதமாக ஏன் வயலுக்குப் போகிறீர்கள்?" என்று கேட்டார். அந்த விவசாயி, "என் வேலை இரவுதான் ஆரம்பிக்கும். அப்போதுதான் மின்சாரம் வரும். உரிய மின்சாரம் இருக்கும்போதுதான் நான் மோட்டாரை இயக்கி கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க முடியும். இரவு முழுவதும் தண்ணீர் பாய்கிறதா என்று பார்ப்பேன். களைகள், அடைப்புகளை அகற்றி எல்லா பயிருக்கும் போதுமான தண்ணீர் பாயும்படி செய்வேன். என் பிள்ளைகளைப் போல இந்தப் பயிர்களைப் பராமரிக்கிறேன். வயலுக்குத் தண்ணீர் பாய்ந்தால்தான், என் குடும்பத்துக்கு சாப்பாடு கிடைக்கும்; அறுவடை காலத்தில் அநேக குடும்பங்களுக்குப் பலன் கிடைக்கும்," என்று கூறினாராம். உண்மையுள்ள அக்கறைக்கு எவ்வளவு நேர்த்தியான சித்திரமாக இது உள்ளது! பூமிக்குரிய ஒரு விவசாயி, இரவெல்லாம் உறங்காமல் விழித்து தன் பயிரைக் காப்பாரென்றால், நம் பரம தகப்பன் தம் பிள்ளைகளைக் கண்காணிப்பது எவ்வளவும் நிச்சயம்! கர்த்தர், "நான் உறங்குவதுமில்லை; தூங்குவதுமில்லை. எப்போதும் உன்னை கண்ணோக்கிக் கொண்டிருக்கிறேன். நான் உன்னை பாதுகாப்பேன்; உனக்குண்டான யாவற்றையும் காப்பேன்; என் ஜீவத்தண்ணீரால் உன்னை புதுப்பிப்பேன்; இரவும் பகலும் உன்னை பத்திரமாகக் காப்பேன்," என்று கூறுகிறார். சோராமல் கண்ணோக்குவதற்காக ஆண்டவரை ஸ்தோத்திரித்து, "கர்த்தாவே, என்னை கண்ணோக்குவதற்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கைக்குப் புத்துயிரூட்டுவதற்காகவும், இரவும் பகலும் என்னை காப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்," என்று சொல்லுங்கள்.

ஜீவத்தண்ணீருள்ள நதி உங்களுக்குள் பாய்வதால், இரட்சிப்பின் நதியும் உங்கள் உள்ளத்தை நிரப்பும். சோதனைகள், பாவ ஆசைகள், பாவத்தின் விளைவுகள் நம்மைச் சுற்றியிருக்கும் உலகில் வாழ்கிறோம். ஆனாலும் ஆண்டவர் தம் சுத்திகரிக்கும் நதியை நம்மேல் தொடர்ந்து பொழிகிறார். வேதம், "நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்," (ஏசாயா 12:3) என்று கூறுகிறது. கர்த்தர், "நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்," (எசேக்கியேல் 36:25) என்று வாக்குப்பண்ணுகிறார். அவரது ஜீவத்தண்ணீர் பாவத்தின் எல்லா கறைகளையும் சுத்திகரித்து, மீண்டும் சுத்தமாக்கி, நம் உள்ளங்களைப் புதுப்பிக்கும். எல்லா பாவ வழக்கமும், பாவ ஆசையும், குற்ற மனச்சாட்சியும், எல்லா கட்டுகளும் அவரது சுத்திகரிக்கும் தண்ணீரின் நதியால் கழுவப்படும். இயேசு கிறிஸ்துவால் நாம் மன்னிப்பை, விடுதலையை, புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்கிறோம். ஒருவேளை நீங்கள் அநியாயத்தை அனுபவித்திருக்கலாம் அல்லது தவறாய் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். ஆண்டவர் உங்களை மறந்துபோகவில்லை. வேதம், "நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது," (ஆமோஸ் 5:24) என்று கூறுகிறது. தம் நியாயம் பலத்த நதியாக உங்கள் வாழ்வில் பாயும் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். தேவன், தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிற தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நிச்சயமாய் நீதி செய்வார் என்று இயேசுதாமே கூறியிருக்கிறார் (லூக்கா 18:7,8). அவரது வேளை, உங்கள் பொறுமையை சோதித்தாலும், அவர் தம் பிள்ளைகளுக்காக வழக்காட ஒருபோதும் தவறுவதில்லை.

நிறைவாக, இயேசு பரிசுத்த ஆவியின் நதி என்னும் இன்னொரு நதியைக் குறித்தும் கூறுகிறார். அவர், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7:37-39) என்று கூறுகிறார். பரிசுத்த ஆவி உங்களை வாழ்க்கையை நிரப்பும்போது, அவரது சமுகம் உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்கள்மேலும் பாயும். உங்கள் வார்த்தைகள், சலிப்பின், கோபத்தின் வார்த்தைகளாகாமல், ஜீவனின் வார்த்தைகளாகும். உங்கள் குடும்பம் தேவ சமாதானத்தை அனுபவிக்கும். ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் வாயிலாக செயல்பட்டு அநேகரை ஆசீர்வதிப்பார்; நீங்கள் அவரது ஜீவ வார்த்தைகளை உரைத்ததும் அற்புதங்கள் நடக்கும். இயேசு, "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்," (யோவான் 4:14) என்று அருமையான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார். மனுஷீக இருதயத்தின் ஆழ்ந்த தாகத்தை இயேசுவால் மாத்திரமே தணிக்க முடியும். அனுதினமும் அவரது ஜீவத்தண்ணீரை பருகும்போது நீங்கள் ஒருபோதும் வறண்டுபோகமாட்டீர்கள். மாறாக, நீங்கள் உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு ஆசீர்வாதத்தை, ஜீவனை, நம்பிக்கையை, புத்துயிரை அளிக்கிறவராக மாறுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஒருபோதும் வற்றாத ஜீவ நதியாய் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆவிக்குள், சரீரத்துக்குள், குடும்பத்துக்குள் உம் ஜீவத்தண்ணீரை தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருப்பீராக. என் வாழ்வில் விடாய்த்திருக்கும் எல்லா பகுதிக்கும் புத்துயிர் அளித்து, உம் கிருபையால் பெலப்படுத்தியருளும். எல்லா பாவமும் நீங்கும்படி என்னை சுத்திகரித்தருளும்; குற்றத்தின் பாரங்கள் அனைத்தையும் அகற்றிடும்; பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும். என் வாழ்க்கை முழுவதையும் உம் நியாயம் ஆளுகை செய்யட்டும்; இக்கட்டான வேளைகளிலும் உம்மை நம்புவதற்கு உதவும். ஜீவத்தண்ணீருள்ள நதிகள் என்னிலிருந்து பாய்ந்து என் குடும்பத்தையும் என்னை சுற்றிலுமிருக்கிறவர்களையும் ஆசீர்வதிக்கட்டும். இரவும் பகலும் என்னைக் கண்ணோக்கி, உம் பரிபூரண சித்தத்தின்படி வழிநடத்தி, என் வாழ்க்கை எப்போதும் உமக்கு மகிமையைக் கொண்டு வருவதாக அமையச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.