அன்பானவர்களே, தேவனுடைய பாதத்தில் அமர்ந்து, அவருக்குச் செவிகொடுப்பது எவ்வளவு இன்பமானது! இன்றும், அவர், "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோத்தேயு 1:7) என்ற வசனத்தின் வாயிலாக நம்மோடு பேசுகிறார். தேவ ஆவியானவர் உங்கள்மேல் இருப்பாராக; பயத்தின் எல்லா செய்கையையும் வாழ்விலிருந்து அகற்றுவாராக. ஆவியாகிய, பரிசுத்த ஆவியானவர், மூன்று விதங்களில் கிரியை செய்கிறார் என்று இந்த வசனம் கூறுகிறது. அவர் பலத்தைத் தருகிறார். வேதம், ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், அற்புதங்களைச் செய்யும் வரம், குணமாக்கும் வரம், தீர்க்கதரிசன வரம் ஆகிய பரிசுத்த ஆவியின் வரங்களைக் குறித்து உரைக்கிறது (1 கொரிந்தியர் 12:8-10). இவை நம் அன்றாட வாழ்வில் தேவ வல்லமையை விளங்கப்பண்ணுகின்றன.

பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களில் அன்பை ஊற்றுகிறார். வேதாகமத்தில் இயேசு, உன் தேவன்பேரிலும் அயலான்பேரிலும் அன்கூருவதே பிரதான கற்பனைகள் என்று கூறியிருக்கிறார். நாம் அன்புகூரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். பரிசுத்த ஆவியானவர், மக்களை, நமக்குத் தீங்கு செய்தவர்களையும் நேசிப்பதற்கு உதவுகிறார். அவர்கள் அனைவரையும் தேவ ஜனங்களாக காணும்படி செய்து, நாம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி பண்ணுவார். நிறைவாக, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இச்சையடக்கத்தை உருவாக்குகிறார். அவர் தேவ நீதியை மட்டுமல்ல; நாம் சோதனைகளை, தவறான எண்ணங்களை கடக்கும்போதும், குறுக்குவழிகளில் செல்லும்படி சோதிக்கப்படும்போது தேவ வார்த்தையையும் நினைவுப்படுத்துகிறார். அவர் நமக்குள் தேவ பயத்தை கொண்டு வந்து, அவருக்கு முன்பாக பரிசுத்தமாக நடப்பதற்கு நினைவுப்படுத்துவார்.

கல்லூரியில் என் நண்பன் ஒருவன் மிகவும் முரட்டாட்டமானவனாக, சண்டையிடுகிறவனாக இருந்தான். எப்போதும் ஒரு கூட்டத்திற்கு, அவன் தலைமையேற்று நடத்துவான். ஒருவரும் அவனை எதிர்க்க மாட்டார்கள். பயங்கரமானவனாக இருந்தான். ஆனால், எப்படியோ யாரோ அவனிடம் பேசியதால், அவன் தன் இருதயத்தை தேவனுக்கு அர்ப்பணித்தான். பரிசுத்த ஆவியானவர் அவனை நிறைத்தார். அதன்பிறகு அவன் புதிய மனுஷனாக மாறினான். அதே கல்லூரியின் வளாகத்தில் அவன் ஐக்கிய கூட்டங்களை நடத்தி, மக்களைக் கொண்டு வருவான். எல்லோரும் வந்துவிட்டனரா? கூட்டத்திற்கு எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டதா என்பதை கவனித்ததோடு, தன் சகோதர சகோதரிகளையும் பராமரித்தான். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் எப்படிப்பட்ட மறுரூபம் ஏற்பட்டது பார்த்தீர்களா? நாமும் அவரைப் பெற்றுக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு பரிசுத்த ஆவியை அருளியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னிலிருந்து எல்லா பயத்தையும் அகற்றி, உம் வல்லமையாலும் அன்பாலும் இச்சையடக்கத்தாலும் என்னை நிரப்பும். பரிசுத்தத்தில் நடக்கவும், அனுதினமும் உம் வார்த்தைக்குக் கீழ்ப்படியவும் எனக்கு உதவி செய்யும். புண்படுத்துகிறவர்களையும் நேசிப்பதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். பிறருக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்யும். சோதனையை மேற்கொள்ளும்படியும், வாழ்வில் ஒருபோதும் குறுக்கு வழிகளில் செல்லாமலும் இருக்கும்படியும் என்னை பெலப்படுத்தும். என் இருதயத்தை முற்றிலும் மறுரூபப்படுத்தி, உம் மகிமைக்காக பயன்படுத்தியருளும். உம் ஈவுகளும், உம் சமுகமும் என் வாழ்வில் நிறைவாய் காணப்படுவதாக. செல்லுமிடமெங்கும் நான் உம் வல்லமைக்கு சாட்சியாக விளங்கப்பண்ணவேண்டுமென இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.