அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தமும், ஆண்டவரின் உச்சிதமான ஆசீர்வாதமும் உங்கள்மேல் இறங்குகிறது. வேதம், "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது" (ஏசாயா 60:1) என்று கூறுகிறது. கர்த்தர் உரைத்தால், அப்படியே ஆகும். இயேசுவின் நாமத்தினாலே, எழும்பிப் பிரகாசியுங்கள்; உங்கள் வெளிச்சம் வந்தது என்று கூறுகிறேன். வெளிச்சம் எங்கிருந்து வருகிறது? இயேசு, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்," என்று அறிவிக்கிறார் (யோவான் 8:12). அவரே ஜீவ வெளிச்சமாக இருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை. அவரைப் பின்பற்றுகிறவர்கள் இருளில் நடக்கமாட்டார்கள்; ஜீவ வெளிச்சத்தைப் பெற்றிருப்பார்கள். அவரது வெளிச்சம், ஜீவனை, பாதுகாப்பை, வழிகாட்டலை அளிக்கிறது. இயேசுவை உங்கள் உள்ளத்துக்குள் அழைக்கும்போது, நீங்களும் உலகிற்கு ஒளியாக மாறுகிறீர்கள் (மத்தேயு 5:14). மலையின்மேல் இருக்கும் பட்டணம்போல நீங்கள் பிரகாசிப்பீர்கள். உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களை தேவனுடைய வெளிச்சம் சந்திக்கும். நீங்கள் அவரால் நிரம்பியிருக்கும்போது, இயேசு வந்தபோது மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டதுபோல், உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கும். இயேசுவின் நாமத்தில் இந்தக் கிருபையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

முதலாவதாக, தேவனுடைய ஒளி, நற்கிரியைகளை உங்கள் மூலமாக நடப்பிக்கும். வேதம், "மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது," என்று கூறுகிறது (மத்தேயு 5:16). இரண்டாவதாக, இருளின் வழியாகவும், அதைரியத்தின் வழியாகவும் கடந்து சென்ற எலியா, கர்த்தரின் வல்லமையால் வானத்திலிருந்து அக்கினியை இறங்கி வரப்பண்ணி, கர்த்தரே தேவன் என்று வெளிப்படுத்தினான்; அவரைத் தொழுதுகொள்ளும்படி மக்களை நடத்தினான் (1 இராஜாக்கள் 19:7).
இதைக் கேள்விப்பட்ட அசுத்த ஆவியால் நிறைந்திருந்த யேசபேல் ராஜாத்தி, "நாளை நான் உன் தலையை வெட்டிப்போடுவேன்," என்று எலியாவை மிரட்டினாள். அவன் கர்த்தரைக் குறித்துச் சாட்சி கூறி, அவரது நாமத்தால் அற்புதங்களைச் செய்து, தேவனை ஏற்றுக்கொள்ளும்படி மக்களை நடத்தியதால் அவள் கோபமுற்றாள். அதைரியப்பட்ட எலியா, வனாந்தரத்தில் ஓடினான்; ஒளிந்துகொண்டான். அவன், "போதும் கர்த்தாவே, என் ஜீவனை எடுத்துக்கொள்ளும்," என்று முறையிட்டான். நம்பிக்கையற்ற நிலையில், ராஜாத்தியோ, அதிகாரத்தில் உள்ள யாருமோ தன்னை கொன்றுபோடும் முன்னர், ஜீவனை எடுத்துக்கொள்ளும்படி கர்த்தரிடம் கேட்டான். ஆனால், கர்த்தர், தூதனை அனுப்பினார். அவன், "எழுந்து புசி. நான் உனக்கு போஜனம் கொண்டு வந்திருக்கிறேன். நீ, நீண்டதூரம் பிரயாணம் செய்யவேண்டும்," என்று கூறினான்.

கர்த்தர், எலியாவைப் பெலப்படுத்தி, செல்ல வேண்டிய பிரயாணத்துக்கு அவனை ஆயத்தமாக்கினார். அவர், வரப்போகிறவை குறித்து அவனுக்கு தெய்வீக வழிகாட்டுதலை, தீர்க்கதரிசன கட்டளைகளைக் கொடுத்தார். கர்த்தரின் பெலத்தோடு எலியா தன் பயணத்தைத் தொடர்ந்தான். தேவன், அவனை ராஜாத்தியிடமிருந்து பாதுகாத்தார். தேவ பர்வதமாகிய ஓரேப்பை அவன் அடைந்தபோது, கர்த்தர் அவனுடன் பேசினார். சீரியாவின் ராஜாவாக ஆசகேலையும், இஸ்ரவேலின் ராஜாவாக யெகூவையும், அவன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக எலிசாவையும் அபிஷேகம் செய்யுமாறு எலியாவுக்குக் கட்டளையிட்டார் (1 இராஜாக்கள் 19:15,16). எலியா, எலிசாவை அபிஷேகம் பண்ணினான். பிறகு, ஆசகேலையும் யெகூவையும் ராஜாக்களாக அபிஷேகம் பண்ணி தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்றினான். யெகூ ராஜாவாகி, யேசபேல் ராஜாத்திக்கு முடிவு கட்டினான். அவள், பொல்லாத சட்டங்களைக் கொண்டு வந்து, கர்த்தரின் குற்றமில்லாத பிள்ளைகளை துன்புறுத்தி, அழித்துக்கொண்டிருந்தாள். அவள் ராஜ்யபாரம் யெகூவினால் முடிவுக்கு வந்தது. நாய்கள் அவள் இரத்தத்தை நக்கின; கர்த்தரின் வார்த்தை நிறைவேறியது.

கர்த்தர், தீர்க்கதரிசன வார்த்தைகளைத் தந்து, தம் வெளிச்சத்தை நமக்குள் வைக்கிறார். அவரது வார்த்தை நமக்குள் வாசம்பண்ணும்போது, நாம் அதை தேசங்களுக்கு அறிவிப்போம்; அவர் இளைஞர்களை தம் வார்த்தையை ராஜாக்களுக்கு முன்பு உரைக்கும் தீர்க்கதரிசிகளாக எழுப்புகிறார். அவரது வல்லமையின் மூலமாக, தீமையான அதிகாரங்கள் விழுந்துபோகும்; அவர்களது பொல்லாத திட்டங்கள் முடிவுக்கு வரும். கர்த்தர் தம் வெளிச்சத்தை நம் வாழ்க்கைக்குள், குடும்பங்களுக்குள், வேலை செய்யுமிடங்களுக்கு அனுப்புகிறார். காரியங்களை நீங்கள் கைக்கொண்டு யாரையும் அழிக்கவேண்டியதில்லை. தேவ ஆவியால் நிறைந்திருங்கள்; அவரது நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்திடுங்கள். ஆண்டவர்தாமே தம் கிரியைகளை செய்துமுடிப்பார். இந்த ஆசீர்வாதத்தை ஆண்டவர்தாமே உங்களுக்கு அருளிச்செய்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் வெளிச்சம் என் வாழ்க்கையில், என் குடும்பத்தில், நான் வேலைசெய்யுமிடத்தில், நான் செய்கிற யாவற்றிலும் பிரகாசிப்பதாக. என் வாழ்க்கையிலிருந்து எல்லா இருளையும் கனியற்ற தன்மையையும் அகற்றும். இயேசு கிறிஸ்துவாகிய ஜீவ வெளிச்சத்தால் என்னை நிரப்பி, உம் ஒளியில் நான் நடப்பதற்கு உதவும். என் நற்கிரியைகள் பிறருக்கு முன் பிரகாசித்து, உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவதாக. நான் பயப்படும்போது, அதைரியமடையும்போது, அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது என்னை பெலப்படுத்தும். என்னை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பி, உம் தீர்க்கதரிசன வார்த்தையை தந்தருளும். உம் நோக்கத்தை செய்துமுடிக்கும்படி என்னை எழுப்பி, பிரகாசிப்பித்தருளும். என் பிள்ளைகள், குடும்பத்தினர், சபையினர் உம் சமுகத்தால் ஆசீர்வதிக்கப்படுவார்களாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.