அன்பானவர்களே, இன்றைக்கு உங்களோடு தேவனுடைய வாக்குத்தத்தத்தை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வேதம், "ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங்கீதம் 16:11) என்று கூறுகிறது. கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களின் வாழ்க்கை சலிப்பு மிகுந்தது என்று சிலர் சொல்வார்கள். அவர்கள், கூட்டங்களின்போது நாம் அமைதியாக இருக்கவேண்டும் என்றும், விருந்துகள் எதிலும் கலந்துகொள்ள இயலாது என்றும், செய்திகளை கேட்கவேண்டும், வேதத்தை வாசிக்கவேண்டும், நன்றாக படிக்கவேண்டும், கடினமாக உழைக்கவேண்டும் என்றுமே நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். இயேசுவை பின்பற்றுவதற்கு, எந்த சந்தோஷமும் இல்லாமல், கண்டிப்பான முறையில் வாழ்வதே அர்த்தம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் கூட்டங்களைப் பார்த்தீர்களானால், மக்கள் ஆனந்த கண்ணீர் வடிப்பதை காண்பீர்கள். ஏனென்றால், மக்கள் இயேசுவை உண்மையாக அனுபவிக்கிறார்கள். அவர், அவர்கள் உள்ளங்களைத் திறந்து, அவரது வலது பாரிசத்தில் இருக்கும் நித்திய சந்தோஷத்தை அனுபவிக்கச் செய்கிறார்.

இயேசுவை அனுபவிக்கிறதில் உள்ள சந்தோஷத்திற்கு உலகில் எது கொடுக்கும் மகிழ்ச்சியும் ஈடாகாது. அந்தச் சந்தோஷத்தை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. அது நம் உள்ளங்களில் ஆழமான நிறைவை தருகிறது. இன்றைய வசனம், "ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்" என்று கூறுவதைப் போன்ற மெய்யான மகிழ்ச்சி கொண்ட வாழ்க்கை அதுவாகும். நம் வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கும்போது இந்த சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். இந்த உலகிலும் நாங்கள் ஒன்றிலும் குறைவுபடாமல் அவர் பார்த்துக்கொள்கிறார். ஊழியக் கூட்டங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கச் செய்கிறார்; அங்கு மக்கள் அன்புடன் பட்டணங்களைப் பார்ப்பதற்கு அழைத்துச்செல்வதுடன், சிறப்பான உணவையும் கொடுக்கின்றனர். நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்வதால் இந்த ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. தம் கரங்களில் இருந்து இந்த நன்மைகளை அனுபவிக்க அவர் அனுமதிக்கிறார். இந்த உலகில் நாங்கள் அவரது ஆசீர்வாதங்களையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறோம்; நித்திய இன்பங்கள் எங்களுக்கு பரலோகத்தில் காத்திருக்கிறது.

இந்தப் பக்தியை வேதத்தில் மகதலேனா மரியாளிடம் காண்கிறோம். அவளை வருத்திக்கொண்டிருந்த ஏழு பிசாசுகளை இயேசு விரட்டிய பிறகு, அவள், அவரை உண்மையாய் பின்தொடர்ந்தாள். அவரது பாதத்தில் அமர்ந்து, அவரது வார்த்தைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள வாஞ்சித்தாள். இயேசுவை பின்பற்றுகிற சந்தோஷத்தை பற்றி எவ்வளவு நேர்த்தியான சித்திரம் பாருங்கள்! நம் உள்ளங்களில் உள்ள சந்தோஷமும், நாம் அனுபவிக்கிற நன்மையும் அவரிடமிருந்தே வருகின்றன. அவர் உச்சிதமானவற்றை நமக்குத் தருகிறார். அவரது சமுகத்தில் களிகூர்ந்து, பாக்கியம் பெறுவோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஜீவ பாதையை எனக்குக் காண்பிப்பதற்காகவும், பூரண மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்வதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நீர் எனக்குச் சிறப்பான வாழ்வை அருளியிருக்கிறீர். உம் வலது பாரிசத்தில் நித்திய சந்தோஷம் உண்டு. உம் சமுகத்தின் சந்தோஷம், உம் மகிமையால் நிறைந்திருக்கும் மகிழ்ச்சி ஆகிய பரலோக இன்பங்களால் இப்போதே என்னை நிரப்பியருளும். எல்லா பரிபூரணத்தோடும் உம்மை அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். இப்போதும் என் உள்ளத்தை உம் சமாதானத்தால் நிரப்பிடும். எந்நாளும் என்னோடு பேசும். உம் வார்த்தையை நான் எப்போதும் வாஞ்சித்திருக்கட்டும்; என் வாயிலாக உம் ஜீவன் பாய்ந்துசெல்லட்டும். ஆண்டவரே, எல்லா நல்ல பாதையிலும் என்னை வழிநடத்தி, என் வாழ்வில் பரிபூரண சந்தோஷம் நிறைந்திருக்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.