அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்" (புலம்பல் 3:25) என்று கூறுகிறது. கர்த்தருக்குக் காத்திருப்பதால் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்? நானும் காத்திருக்கிறேன். அவருக்காகக் காத்திருந்து எதைப் பெற்றுக்கொள்வேன் என்று நீங்கள் கேட்கலாம். கர்த்தர், நிச்சயமாகவே உதவி செய்வார், நியாயத்தை நிறைவேற்றுவார், நீதியாய் செயல்படுவார் என்று நீங்கள் விசுவாசித்துக் காத்திருக்கிறீர்களா? கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு நல்லவராக இருப்பார். வேதம், "தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார்" (லூக்கா 18:7,8) என்று கூறுகிறது. நீங்கள் கர்த்தரை நோக்கி இரவும் பகலும் கூப்பிட்டு அவருக்காகக் காத்திருக்கிறீர்களா? "கர்த்தாவே, நீதி செய்யும்; சரியானதைச் செய்யும். அதை உம் கரங்களில் கொடுத்துவிடுகிறேன்; என் சொந்தக் கரங்களால் எதையும் செய்யமாட்டேன்," என்று கூறுவீர்களா? அவர், நிச்சயமாகவே, சீக்கிரத்தில் உங்களுக்கு நியாயமும் நீதியும் செய்வார்.

வேதம், "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்," (ஏசாயா 40:31) என்று கூறுகிறது. அவருக்காக நீங்கள் காத்திருக்கும்போது, உங்கள் வாழ்க்கையை அவரால் புதிதாக்க முடியும். உங்கள் ஞானம் புதுப்பிக்கப்படும்; வேலை செய்யுமிடம் மறுரூபப்படும்; உறவுகள் சீர்பொருந்தும்; ஆரோக்கியம் திரும்பும். உங்கள் உடல் உறுப்புகள் கூட சீரடையும். நீங்கள் எழுவதற்கும், உயர்ந்த ஸ்தானங்களை அடைவதற்கும், விடுதலையை அனுபவிப்பதற்கும் கர்த்தர் உதவுவார். உங்களை முன்னேறவிடாமல் தடுக்கும் அனைத்துக் கட்டுகளும் உடைக்கப்படும். கர்த்தருக்காக காத்திருப்பதினால் இந்தக் கிருபை கிடைக்கிறது.

"பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக," (ரோமர் 15:13) என்று வேதம் கூறுகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமையால் நீங்கள் நம்பிக்கை, சந்தோஷம், சமாதானத்தினால் நிரப்பப்படுவீர்கள். உங்கள் குடும்பத்திலும் வேலை செய்யுமிடத்திலும் மகிழ்ச்சி இருக்கும்; உங்கள் வாழ்வில் சமாதானம் காணப்படும். இயேசுவின் நாமத்தினால் உச்சிதமான கோதுமையால் திருப்தியாக்கும் கிருபை உங்கள்மேல் வருவதாக. உங்கள் பிள்ளைகள், இல்லறம், வேலை செய்யுமிடத்தில் கர்த்தர் கீழ்ப்படிதலையும் ஒருமனதையும் கொண்டு வருவார். முரட்டாட்டத்தின் எல்லா ஆவியும் அகற்றப்படும்; எல்லாமும் ஆண்டவருடைய விருப்பத்தின் கீழ் வரும். உங்கள் வாழ்க்கையில் ஆண்டவரால் மலையளவு ஆசீர்வாதங்களை வைப்பதற்குக் கூடும்.

வேதம், "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11) என்று கூறுகிறது. நம்பிக்கையுள்ளதும், சமாதானமுமான எதிர்காலத்தையே தேவன் உங்களுக்காக எண்ணியிருக்கிறார். நீங்கள் அவருக்காகக் காத்திருந்து, அவரைத் தேடும்போது, உங்கள் வாழ்வில் அவரது தயவும் ஆசீர்வாதமும் பெருகும். எல்லாமும் இளைப்பாறுதல் அடையட்டும்; ஆண்டவர்தாமே உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பாராக.

Prayer:
அன்புள்ள ஆண்டவரே, உமக்காகப் பொறுமையுடன் காத்திருக்கவும், பக்தியுள்ள இருதயத்துடன் உம்மைத் தேடவும் எனக்கு உதவி செய்யும். என் வாழ்வில் இன்னும் நிறைவேறாத காரியங்களில் நியாயத்தையும் நீதியையும் நடத்திடும். என் பெலனை, ஞானத்தை, சுகத்தை, உறவுகளை, வேலையை, சீர்ப்படுத்தப்படவேண்டிய யாவற்றையும் புதுப்பித்தருளும். உம் பரிசுத்த ஆவியானவர் என்னை நம்பிக்கையாலும் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்புவாராக. எல்லா கட்டுகளையும் முறித்து, என் குடும்பத்திலும் வேலை செய்யுமிடத்திலும் உள்ள முரட்டாட்டமான எல்லா ஆவியையும் அகற்றும். என் பிள்ளைகளை ஆசீர்வதித்து, உம் வழிகளில் அவர்களை நடத்தியருளும். எனக்கு வந்து சேர வேண்டிய ஆசீர்வாதம் ஏற்றநேரத்தில் வருவதாக. இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் வாயிலாக என்னை அநேகருக்கு ஆசீர்வாதமாக்கியருள வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.