எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே" (கலாத்தியர் 3:26) என்று கூறுகிறது. ஆம், தேவ வார்த்தை கூறுகிறபடி, விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்து, சிலுவையில் உங்களுக்காக மரித்தார் என்று விசுவாசித்திடுங்கள். சிலுவையினாலே நீங்கள் ஜெயத்தை பெற்றீர்கள். வேதம், "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்," (1 யோவான் 5:4) என்று கூறுகிறது.  ஆகவே, இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகளினாலும், பலியானதினாலும் தேவன் உங்களுக்கு ஜெயத்தை தந்திருக்கிறார் என்று விசுவாசியுங்கள்.

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. வேதம், "நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்" (சங்கீதம் 27:13) என்று கூறுகிறது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தால் நீதிமானானான். தேவன்மேல் விசுவாசம் வைக்கிறதினால் இந்த ஆசீர்வாதம் கிடைக்கிறது. வேதம், "நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள்," (ஏசாயா 7:9) என்று கூறுகிறது. ஆகவே, ஆண்டவரை விசுவாசிப்போம்; அவரில் நிலைத்திருப்போம்.

நோவாவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவன் தேவனை விசுவாசித்தான்; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டவற்றுக்கெல்லாம் கீழ்ப்படிந்தான். அவனிடம் காணப்பட்ட விசுவாசத்தினாலும், கீழ்ப்படிதலினாலும், அவனும் அவன் குடும்பம் முழுவதும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டனர். அவ்வண்ணமே, வேதத்தில் சவுல் என்ற மனுஷனைக் குறித்து வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 9ம் அதிகாரம்). அவன் கர்த்தரைப் பின்பற்றாதவன்; மாறாக, தேவ ஜனங்களை துன்புறுத்தி கொலை செய்தவன். ஆனால், ஆண்டவர் அவன் வாழ்வில் தலையிட்டு, அவனை எதிர்கொண்டு, "சவுலே, சவுலே, என்னை ஏன் துன்புறுத்துகிறாய்?" என்று கேட்டார். சவுல், கர்த்தரைக் கண்டான். அவன் வாழ்க்கை முற்றிலும் மறுரூபமடைந்தது. அவன் மனதுருக்கத்தின், கிருபையின் பாத்திரமாக மாறினான்; தேவனுடைய ஊழியத்தை செய்ய தொடங்கினான்.

ஆம், அன்பானவர்களே, ஆண்டவரிடம் வாருங்கள். அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். சிலுவையை நோக்கிப் பாருங்கள். வேதத்தை வாசித்து, ஆண்டவர் சிலுவையில் தன் ஜீவனை எப்படி உங்களுக்காகக் கொடுத்தார் என்று அறிந்துகொள்ளுங்கள் (கலாத்தியர் 2:20). அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கை பாக்கியமானதாக மாறும்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, எனக்காக சிலுவையில் உம் ஜீவனை தந்ததற்காக ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை விசுவாசிக்கவும், விசுவாசத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவும் எனக்கு உதவும். தகப்பனே, தவறாய் வாழ்வோரின் மனதில் பேசுவீராக. அவர்கள் உம்மை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிப்பீராக. கிறிஸ்துவுக்குள்ளாக வாழவும் உம் வழிகளில் நடக்கவும் அவர்களுக்கு உதவுவீராக. சவுலை மறுரூபமாக்கி, அவனை கிருபாபாத்திரமாக பயன்படுத்தியதுபோன்றே, இந்தச் செய்தியை வாசிக்கிற அனைவரின் வாழ்க்கையையும் மறுரூபப்படுத்துவீராக. அவர்களை ஆசீர்வதியும்; வழிநடத்தும்; உம் மகிமைக்கென பயன்படுத்தும். அவர்கள் வாழ்வில் உம் தயையும் ஜெயமும் காணப்படவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.