பிரியமானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்" (எண்ணாகமம் 6:26) என்று கூறுகிறது. நீங்கள் இரவெல்லாம் உறக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? வாழ்வில் சமாதானமே இல்லையா? பலர், வாழ்க்கையில் ஒரு கட்டத்தை வாழ்ந்து முடித்திருப்பீர்கள். ஒருவேளை பட்டப்படிப்பு முடித்திருப்பீர்கள்; அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பீர்கள். படிப்பை முடித்ததும் வேலை தேடியிருக்கலாம்; ஆனால், எங்கேயும் வேலை கிடைக்காமல் இருக்கலாம். சிலர், உங்கள் பிள்ளைகளைக் குறித்து இரவும் பகலும் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். இவையெல்லாம் உங்கள் மன சமாதானத்தைப் பாதிக்கக்கூடும்.
ஆனால், இன்று ஆண்டவர் தாமே உங்களுக்குச் சமாதானத்தை அருளுவதாகக் கூறுகிறார். அவர் தம் முகத்தை உங்கள் பக்கமாகத் திருப்புவார்; அவரது சமாதானம் உங்கள் வாழ்வில் விளங்கும். நம் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர்! அவரே நம் வாழ்க்கையில் அனைத்தையும் ஆளுகை செய்கிறார் என்று விசுவாசித்தால், எதைக் குறித்தும் கவலைப்பட தேவையில்லை. இருந்தாலும் அநேக வேளைகளில், "ஆண்டவரே, எதிர்காலத்தில் நான் என்ன செய்யப்போகிறேன்? எங்கே பணியாற்றப்போகிறேன்? என் பிள்ளைகளையும் உம் ஊழியத்தையும் எப்படி கவனிக்கப்போகிறேன்? எப்படி மருத்துவத்தையும் செய்யப்போகிறேன்?" என்று திகைப்பதுண்டு. அநேக நேரங்களில் இரவை தூங்காமல் கழிப்பதுண்டு.
"ஆண்டவரே, எனக்கு எங்கே செல்வதென்று தெரியவில்லை. ஒரு வழியைக் காட்டும்," என்று நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கலாம். உங்கள் மனம் குழம்பியிருக்கலாம். ஆனால், இன்று, ஆண்டவர் தம் சமாதானத்தினால் உங்களை நிரப்புவதாகக் கூறுகிறார். ஆண்டவர் உங்களைக் குறித்து அக்கறையாயிருப்பார் என்று நீங்கள் அறிந்துகொண்டால், உங்கள் மன சமாதானத்தை எதினாலும் குலைக்க முடியாது. இம்மட்டும் உங்களை நடத்தி வந்த ஆண்டவர், இறுதி வரை உங்களைச் சுமப்பார். அன்பானவர்களே, பயப்படவோ, கவலைப்படவோ செய்யாதீர்கள். கர்த்தர் உங்களைச் சரியான பாதையில் நடத்தி, தம் சமாதானத்தை உங்களுக்குத் தருவார். உங்கள் குடும்பத்திலும் வீட்டிலும் சமாதானத்தை அனுபவிப்பீர்கள். இன்றே அவரது சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அவரே உங்கள் எதிர்காலத்தை பொறுப்பெடுத்துக்கொள்வார் என்று நம்புங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பிள்ளைகள்பேரில் கரிசனையாயிருக்கும் அற்புதமான தேவனாயிருப்பதனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அவர்கள் சிந்துகிற கண்ணீர் யாவற்றையும் நீர் காண்கிறீர்; அவர்கள் உள்ளங்களில் இருக்கும் எல்லா குழப்பத்தையும் அறிந்திருக்கிறீர். அநேகர் இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டிருக்கிறார்கள்; ஆனால், நீரோ அவர்கள் வலதுபாரிசத்தில் இருக்கிறீர். இன்று அவர்களை உம் பரிபூரண சமாதானத்தினால் நிரப்பியருளும். தகப்பனே, உம் முகம் அவர்கள்மீது பிரகாசிக்கட்டும்; அவர்களை சரியான பாதையில் நடத்தட்டும். சண்டையும் சச்சரவும் காணப்படும் ஒவ்வொரு குடும்பத்திலும் சமாதானத்தை அருளியருளும். உம் சமாதானம் அவர்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் நிரப்புவதாக. உம்மை முழுவதும் நம்பி, உம் வழிகளில் நடப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


