அன்பானவர்களே, இன்றைக்கு, "அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்" (ரோமர் 5:2) என்ற வசனத்தின் மூலம் தேவன் நம்மோடு பேச விரும்புகிறார். நம்மை தேவனுக்குக் கிட்டிச்சேர்க்கும்படியான பாக்கியமான சிலாக்கியம் பாருங்கள்! வேதம், இதை கிருபை என்று கூறுகிறது. கிருபை என்பதற்கு நாம் நம்முடைய கிரியைகளினால் ஒருபோதும் ஈட்டக்கூடாத, இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் மாத்திரமே கிடைக்கும் தெய்வீக ஈவு என்று அர்த்தம். அப்போஸ்தலனாகிய பவுல், "நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்" (1 கொரிந்தியர் 15:10) என்று கூறுகிறான். முன்பு நாம், பாவத்தினால் பிரிக்கப்பட்டு, தேவனை விட்டு தூரமாக இருந்தோம். ஆனால், இயேசுவின் இரத்தத்தினால் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மன்னிக்கப்பட்டு, கிருபாசனத்தின் முன் நிற்பதற்கான தயவை பெற்றிருக்கிறோம். கிருபையினால் நிற்கிறோம் என்பதற்கு, தேவனால் நேசிக்கப்படுகிறோம் என்பதோடு, நம் பரம தகப்பன் நம்மேல் பிரியத்துடன் களிகூருகிறார் என்றும் பொருளாகும்.
நாம் கிருபையில் நிற்கும்போது, தேவனுடைய ராஜரீக சமுகத்திற்குள் நேரடியாக செல்ல அனுமதி கிடைக்கிறது. இயேசு, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20) என்று கூறுகிறார். ஆண்டவர், நம்மை மகிழ்ச்சியினால் ஆசீர்வதிப்பதோடு இல்லாமல் நம்மை பரிசுத்தப்படுத்தி, தன் அன்பில் உறுதிப்படுத்தும்படி நம்மோடு ஐக்கியம் கொள்ளவும் வாஞ்சிக்கிறார். பரிசுத்தத்தினால் நாம் அவரது கிருபையை பூரணமாக அனுபவிக்கிறோம். பலவேளைகளில், நாம் உபத்திரவங்களின் வழியாக, தாமதங்களின் வழியாக கடந்து செல்கையில் தேவன் தூரமாக இருக்கிறார் என்று நினைக்கிறோம். ஆனால், வேதம், "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" (1 பேதுரு 5:10) என்று நிச்சயமாகக் கூறுகிறது. அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் இருதயத்தின் கதவை தட்டிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அவருக்குக் கதவை திறப்பீர்களா?
இன்றே உங்கள் இருதயத்தை முழுதாக இயேசுவுக்குக் கொடுங்கள். உங்கள் விசுவாசம் மறுபடியும் எழும்பட்டும். ஒருவேளை நீங்கள் விழுந்துபோயிருக்கலாம் அல்லது நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால், விழுந்துபோன பேதுருவை மறுபடியும் அழைத்த அதே ஆண்டவர் இப்போது உங்களையும் அழைக்கிறார். உங்களுக்கு பெலனை திரும்ப தருவதற்கு, உங்கள் ஆவியை புதுப்பிப்பதற்கு, தம் அன்பில் ஸ்திரமாக நிற்கச்செய்வதற்கு அவர் விரும்புகிறார். உங்கள் இருதயத்தை நீங்கள் திறக்கும்போது, மன்னிப்பை பெற்றுக்கொள்வதோடு, தேவ சமுகத்தில் இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள். கிருபையானது பெலவீனத்தை பெலனாகவும், பயத்தை விசுவாசமாகவும், துக்கத்தை ஆனந்தக் களிப்பாகவும் மாற்றும். விசுவாசமில்லாமல் நாம் தேவனை தரிசிக்க முடியாது. நாம் விசுவாசிக்கும்போது அவரது மகிமை நம்மேல் உதிக்கும். மறுபடியும் அவரது ஆச்சரியமான கிருபையில் நிற்பதற்கும், கிருபாசனத்தின் முன்பு தைரியமாக நடப்பதற்குமான சீர்ப்படுத்தலின் நாளாக இது அமைவதாக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய கிருபைக்குள் என்னை அழைத்து வருவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் பாவங்களை மன்னித்து, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை சுத்திகரியும். ஆண்டவரே, உம்முடைய தயையில் உறுதியாக இருக்க நிற்பதற்கு எனக்கு உதவி செய்யும். என் விசுவாசத்தை சீர்ப்படுத்தி, உம்மேலான என் அன்பை புதுப்பியும். தேவனே, அனுதினமும் என்னை உம்மோடு கிட்டிச்சேர்த்திடும். உம் கிருபை என் வாழ்க்கையை, என் வீட்டை, என் குடும்பத்தை மூடுவதாக. உமக்குள் என்னை பெலப்படுத்தும்; ஸ்திரப்படுத்தும்; உறுதிப்படுத்தும். என் இருதயத்திலிருந்து எல்லா பயத்தையும் சந்தேகத்தையும் அகற்றுவீராக. நான் பரிசுத்தத்தில் நடந்து, உம் சமுகத்தில் வாழும்படி செய்ய வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


