எனக்கு மிகவும் அருமையான தேவ பிள்ளையே, உங்களை நம் ஆண்டவரும் இரட்சருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் வாழ்த்துகிறேன். "இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது" (லூக்கா 10:19) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். எவ்வளவு வல்லமையான வாக்குத்தத்தம் இது! ஆண்டவர் உங்களுக்கு பாதுகாப்பை மட்டும் அளிக்கவில்லை; இருளின்மேல் அதிகாரத்தையும் அளிக்கிறார். நாம் எவ்வாறு இந்த தெய்வீக அதிகாரத்தோடு நடக்க முடியும்? அதற்கான பதிலை, "தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது" (2 நாளாகமம் 16:9) என்ற வசனத்தில் காண்கிறோம். ஆமாம், அன்பானவர்களே, தேவன், தம்மேல் உறுதியான பக்தி கொண்டவர்களின் உத்தம இருதயங்களை தேடுகிறார். அவர் முன்பாக நாம் உண்மையுடனும் உத்தமத்துடனும் நடக்கும்போது அவரது பலத்த வல்லமை நம் மூலமாய் செயல்பட தொடங்குகிறது.

ஆகவே தேவனுடைய வசனத்தின் மூலமாகவும் சமுகத்தின் மூலமாகவும் அவரை கிட்டிச்சேரவேண்டும். தினமும் வேதத்தை வாசித்து, ஜெபத்தில் நேரம் செலவழித்து இருதயத்தை உறுதியானதாக, உத்தமமானதாக உருவாக்கவேண்டும். இந்த இரண்டையும் ஒழுங்காகச் செய்தால் தெய்வீக பெலனுக்கான வாசல் திறக்கும். வேதம், "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்" (எபேசியர் 3:16,19) என்று கூறுகிறது. நாம் வெளியரங்கமாக மட்டும் பெலன் கொண்டவர்களாக அல்ல; நம் சிந்தை, இருதயம், ஆவி என்னும் உள்ளான மனுஷனிலும் பெலனால் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரால் மாத்திரமே நமக்குள் அந்தச் செயலை செய்ய முடியும். நாம் அவருடைய வல்லமையால் நிரம்பும்போது, சவால்கள் சூழும்போதும் அசையாதிருப்போம். நான் பரிசுத்த ஆவிக்கு தூரமானவளாக இருந்த நாட்களில் என் கணவர் பரிசுத்த ஆவியின் வல்லமையை எவ்வாறு பெற்றார் என்பது எனக்கு நினைவில் உள்ளது. தன் வாழ்வில் தான் பெற்ற சந்தோஷத்தையும் பெலத்தையும் அவர் பகிர்ந்துகொண்டபோது, அதே தெய்வீக வல்லமையை நானும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆழமான வாஞ்சை என் உள்ளத்தில் உருவானது.

ஆகவே, தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு முழங்காற்படியிட்டு ஆண்டவரை உண்மையாய் தேட தொடங்கினேன். "ஆண்டவரே, என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பும்," என்று கண்ணீரோடும் விசுவாசத்தோடும் ஜெபித்தேன். ஒருநாள் நான் அவ்வாறு ஜெபித்துக்கொண்டிருந்தபோது, பரலோகம் திறக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவர் என்மேல் வல்லமையாக இறங்கினார். நான் சொல்லிமுடியாத சந்தோஷத்தால் நிறைந்து தேவனை துதித்து களிகூர ஆரம்பித்தேன். பூமியை பரலோகம் தொட்ட அந்த அனுபவம் மகிமையானதாக இருந்தது. அன்பானவர்களே, ஆண்டவராகிய இயேசுதாமே, "பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" (லூக்கா 11:13) என்று கூறியுள்ளார். ஆம், நீங்கள் கேட்கும்போது பெற்றுக்கொள்வீர்கள். முழு இருதயத்துடனும் அவரைத் தேடும்போது கண்டடைவீர்கள். நீங்கள் விசுவாசத்துடனும் தாழ்மையுடனும் அவர் முன்பாக வரும்போது, என்னை தமது பரிசுத்த ஆவியினால் நிறைத்த அதே ஆண்டவர் உங்களையும் இன்று நிரப்புவார். சத்துருவின் சகல வல்லமையையும் மேற்கொண்டு ஜெயமுள்ள வாழ்க்கை நடத்தும்படி உங்களை பெலப்படுத்த அவர் விரும்புகிறார்.

ஜெபம்:
தகப்பனே, உம்முடைய ஆச்சரியமான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் உம் முன்பு வந்து, உம் பாதத்தில் முழங்காற்படியிடுகிறேன். உம்முடைய இரக்கமுள்ள கண்கள் என்னை நோக்குவதாக. பரிசுத்த ஆவியின் பலத்த வல்லமையால் என்னை நிரப்புவீராக. என் உள்ளான மனுஷனை தெய்வீக பெலனால் உறுதிப்படுத்தும். ஆண்டவரே, எல்லா பெலவீனமும் பயமும் பாரமும் இயேசுவின் நாமத்தால் அகன்று போவதாக. இரட்சிப்பின் சந்தோஷத்தை தந்து என்னை ஆசீர்வதித்தருளும். உமது ஆவியானவர் என் வீட்டை, உள்ளத்தை, குடும்பத்தை நிரப்புவாராக. உமக்கு நான் உண்மையாய் ஊழியஞ்செய்யும்படி பரிசுத்த ஆவியின் ஒன்பது வரங்களையும் எனக்கு அருளிச்செய்யும். என்னைச் சுற்றிலுமிருக்கும் அநேகருக்கு என்னை ஆசீர்வாதமாக வைத்தருளும். என் வாழ்க்கை எப்போதும் உம்மை மகிமைப்படுத்துவதாக அமையட்டும். சகல மகிமையையும் கனத்தையும் துதியையும் உமக்கே செலுத்தி இயேசுவில் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.