அன்பானவர்களே, இன்றைய தினம் சந்தோஷமானது; தேவன் உங்கள் வாழ்வில் புதிதான ஒன்றை செய்யப்போகிறார். இன்றைக்கான வாக்குத்தத்த வசனம், "கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்" (உபாகமம் 31:8) என்று கூறுகிறது. எவ்வளவு ஆறுதலான நிச்சயம்! எங்கெல்லாம் நீங்கள் செல்கிறீர்களோ, எந்தச் சவால்களையெல்லாம் சந்திக்கிறீர்களோ, கர்த்தர் ஏற்கனவே உங்களுக்கு முன்னே போயிருக்கிறார். அவர் உங்கள் பாதையை ஆயத்தப்படுத்துகிறார்; தடைகளை அகற்றுகிறார்; பாதையில் எப்போதும் உங்கள் பக்கத்தில் இருக்கிறார்.

என் மகள் கேட்டி, சின்னவளாயிருந்தபோது, நாங்கள் குடும்பமாக பொழுதுபோக்கு பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். ஒவ்வொன்றையும் அவள் கண்டு வியந்தாள்; பூங்காவில் இருக்கும் பொழுதுபோக்குகளையும் அழகான காட்சிகளையும் பார்த்து ஆச்சரியப்பட்டாள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சென்றதில் தன்னை மறந்துபோனாள். ஒரு கணம் நாங்கள் அவள் பின்னே செல்வதை நிறுத்திவிட்டோம் என்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை. தொடர்ந்து நடந்துசென்றவள், திடீரென திரும்பியபோது, தன் தந்தையும் தாயும் கண்ணுக்கே தென்படவில்லை என்பதை உணர்ந்தாள். பயந்துபோய், சுற்றுமுற்றும் கலக்கத்துடன் பார்த்தாள். சில கணங்கள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து வெளியே வந்து, "நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். பயப்படாதே," என்று கூறினோம். அவள் உடனே எங்களிடம் ஓடி வந்து அணைத்துக்கொண்டு ஆறுதல் அடைந்தாள். தேவனுடன் நாம் செல்லும் அனுபவத்தை அது நினைவுப்படுத்தியது.

அநேக வேளைகளில் நாம் பரபரப்பாக பல வேலைகளைச் செய்தவாறே, ஆண்டவரை பார்க்காமல் முன்னே சென்று விடுகிறோம். அவரது வழிகாட்டுதலை கேட்காமல் பலவற்றை திட்டமிடுகிறோம். ஜெபிக்காமல், அவரது ஆசீர்வாதங்களுக்காக ஸ்தோத்திரிக்காமல் விரைந்து நாளை முடிக்கிறோம். சிலவேளைகளில், தாம் எவ்வளவு தேவை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, சொந்த பெலத்தை சார்ந்திருப்பதால் நேரும் பின்விளைவுகளை நாம் அனுபவிப்பதற்கு தேவன் அனுமதிக்கிறார். இக்கட்டுகள் எழும்பும்போது, அன்பான பெற்றோரின் பாதுகாப்பை நாடி வரும் குழந்தையைப் போல நாம் திரும்ப அவரிடம் ஓடி வருகிறோம். ஆகவேதான் ஆண்டவரை தொடர்ந்து நோக்குவது முக்கியமாயிருக்கிறது.

தானியேல் தீர்க்கதரிசி தினமும் மூன்று வேளை உண்மையாய் ஜெபித்தார். தேவனுடன் தொடர்ந்து கொண்டிருந்த ஐக்கியம், அவருக்கு எல்லா சூழ்நிலையிலும் பெலனையும் ஞானத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. நாமும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உரிமை பாராட்டி, நம்மை வழிநடத்தும்படி அவரை கேட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவேண்டும். நாள் முழுவதும், ஒவ்வொரு தீர்மானத்திலும் அவரது ஞானத்தை தேடி, எல்லா சூழ்நிலையிலும் அவரது சமுகத்தை அழைக்கவேண்டும். அந்த நாள் முடியும்போது, தேவனுடைய உண்மைக்காகவும், பல வழிகளில் நம்மை பராமரித்ததற்காகவும் அவரை ஸ்தோத்திரிப்போம். நம் அன்றாட வாழ்வின் மையமாக தேவனை வைக்கும்போது, அவருடன் தொடர்ந்து நடக்கும் சந்தோஷமான அனுபவத்தைப் பெறலாம்.

இன்று, உங்களுக்கு முன்னே செல்வதாக கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். அவர் ஏற்ற வாசல்களைத் திறப்பார்; ஒவ்வோர் அடியிலும் வழிகாட்டுவார்; தம் பூரண திட்டத்திற்குள் உங்களை நடத்துவார். நீங்கள் தனியே இல்லை. அவரது சமுகம் உங்களைப் பெலப்படுத்தும்; பாதுகாக்கும்; ஜெயத்தை தரும். ஆகவே, உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்புங்கள். அவரே உங்களை வழிநடத்தட்டும்; அவரது சமாதானத்தையும் பரிபூரண ஆசீர்வாதத்தையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு முன்செல்வதாகவும், நான் எங்கே சென்றாலும் என்னோடிருப்பதாகவும் வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஒவ்வோர் அடியிலும் என்னை வழிநடத்தும். எந்த முடிவையும் எடுக்கும் முன்னர் உம்மை தேடுவதற்கு உதவி செய்யும். உம் பூரண சித்தத்தின்படி ஏற்ற வாசல்களை திறந்திடும்; என் பாதையில் காணப்படும் எல்லா தடைகளையும் அகற்றும்; என் கைகளின் பிரயாசங்களை வாய்க்கப்பண்ணும். அனுதினமும் என்னை உம் ஞானத்தினாலும் தைரியத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்பிடும். என்னை உம்மை கிட்டிச்சேரப்பண்ணி, என் விசுவாசத்தைப் பெலப்படுத்தி, எல்லா சூழ்நிலையிலும் முழுவதுமாக உம்மை நம்புவதற்கு உதவி செய்யும். உம் சமுகம் எப்போதும் என்னை சூழ்ந்துகொண்டு, நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கும் ஆசீர்வாதங்களுக்குள் வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.