கிறிஸ்துவுக்குள் எனக்கு பிரியமானவரே, ஆண்டவர், "தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்" (சங்கீதம் 73:26) என்ற அழகான வாக்குத்தத்தத்தை நமக்குத் தருகிறார். எவ்வளவு ஆறுதலான நிச்சயம்! இந்த உலகில், நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாமும் தவறிப்போகும். மக்கள் நமக்கு ஏமாற்றம் தரலாம்; நம் பெலன் குன்றிப்போகலாம்; நம் பொருட்கள் குறைந்துபோகலாம்; நமக்கு நெருங்கிய உறவுகள்கூட உடைந்து போகலாம். வேலைகள் தவறிப்போகலாம்; வியாபாரங்கள் குலைந்துபோகலாம்; சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம்; சிலவேளைகளில் குடும்பமே உங்களை தவறாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இவை எல்லாவற்றிலும், தேவன் ஒருபோதும் தவறமாட்டார் என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. ஆண்டவர் உங்கள் பங்காகும்போது, அவரே உங்களுக்குப் பெலனாகவும், கேடகமாகவும், நித்திய நம்பிக்கையாகவும் மாறுகிறார். சங்கீதக்காரன், "கர்த்தர் என் சுதந்தரமும் என் பங்குமானவர்," என்று கூறுகிறான். இதற்கு தேவனே, உங்கள் சமாதானமும், வேண்டியவற்றை அருளுகிறவரும், உங்கள் திடநம்பிக்கையும், உங்கள் எதிர்காலமுமாயிருக்கிறார் என்று பொருள்.
நாம் ஆண்டவரோடு சேரும்போது அவருடைய பெலனை நம் ஆவியில் பெறுகிறோம். வேதம், "கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்" (1 கொரிந்தியர் 6:17) என்று கூறுகிறது. உங்கள் வாழ்க்கை இயேசுவை விட்டு பிரிக்கப்பட்டிருக்காது. உங்கள் பெயர், உங்கள் இருதயம், உங்கள் ஆவி அவரோடு இணைந்திருக்கும். ஆகவே நீங்கள், "கர்த்தர் என் இருதயத்தின் பெலனானவர்," என்று தைரியமாக சொல்லலாம். உங்கள் மாம்சம் பெலவீனமானாலும், உங்கள் ஆவி உறுதியாயிருக்கும். ஆகவே, அது ஜீவனின் நித்திய ஆதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அவர் ஒருபோதும் தவறமாட்டார்; ஒருபோதும் கைவிடமாட்டார். புயல்கள் எழும்பினாலும், அக்கினி எரிந்தாலும், இயேசு அசைக்கப்படமாட்டாதவராயிருக்கிறார். உலகம் மாறட்டும்; ஆனால் ஆண்டவர் உங்களை தம் வலக்கரத்தால் பிடித்திருக்கிறபடியால் உங்கள் உள்ளம் தவறாதிருக்கும். அன்பானவர்களே, தேவன் ஒரு புயலையும் அகற்றமாட்டார்; ஆனால், அதன் வழியாக சமாதானத்துடன் கடந்து செல்லும்படி உங்களைப் பெலப்படுத்துவார்.
தாமஸ் ஆல்வா எடிசன் ஒருமுறை இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தார். சிகாகோவில் இருந்த அவரது ஆய்வகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கண்டுபிடிப்புகள் அழிந்துபோயின. ஆனாலும் அவர் பதற்றப்படாமல், "அவள் இதேபோன்ற பெருந்தீயை மறுபடியும் பார்க்க முடியாமல் போகலாம்," என்று கூறி, தன் குடும்பத்தை வரும்படி அழைத்தார். மறுநாள் எரிந்துபோனவற்றை சுத்தம் செய்தபோது, எரியாமல் இருந்த தமது புகைப்படம் ஒன்றை கண்டார். அவர், "எல்லாமும் போய்விட்டன. ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன் உயிரோடுதான் இருக்கிறான். நான் மீண்டும் ஆரம்பிப்பேன்," என்று கூறினார். அப்படியே செய்தார். அதேபோன்று, வாழ்க்கையில் எல்லாமும் போய்விட்டாலும், தேவன் உங்களை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறார். உங்கள் ஆவி, ஜீவனோடிருக்கிறது. உங்கள் முடிவு அழிக்கப்பட்டுப் போகவில்லை. நீங்கள் இழந்த எல்லாவற்றையும் மறுபடியும் உறுதியாக, பிரகாசமாக, இரட்டிப்பான ஆசீர்வாதமாக உருவாக்க, கட்டியெழுப்ப தேவன் உதவி செய்வார். வேதம், "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்" (சங்கீதம் 46:1) என்று கூறுகிறது. மீண்டும் வேதம், "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்" (ஏசாயா 40:31) என்று நினைவுப்படுத்துகிறது. ஆகவே, கர்த்தருக்குக் காத்திருங்கள். "கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்" (புலம்பல் 3:24). கர்த்தர் உங்களை மறுபடியும் எழும்பப் பண்ணுவார்; எலிசாவுக்குச் செய்ததுபோல இரட்டிப்பான பங்கை தருவார்.
ஜெபம்:
 அன்புள்ள பரம தகப்பனே, என் இருதயத்தின் பெலனாக இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னைச் சுற்றிலும் எல்லாமும் தோற்றுப்போனாலும் நீர் ஒருபோதும் தவறுவதில்லை. இப்போதும் எப்போதும் என் பங்காக இருப்பீராக. என் மாம்சம் பெலவீனமாகும்போது என் ஆவியைப் பெலப்படுத்துவீராக. வாழ்வின் எல்லா புயல்களையும் எதிர்கொள்ளத்தக்க தைரியத்தால் என்னை நிரப்பிடும். தேவனே, நான் இழந்தவை எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். உம் கிருபை என்னை திடமாக, ஸ்திரமாக, உறுதியாக மாற்றட்டும். உம் பெலத்தினால் கழுகைப்போல மறுபடியும் எழும்ப எனக்கு உதவி செய்தருளும். என் இருதயம் உமக்குள் எப்போதும் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக என்று இயேசுவின் வல்லமையான, அன்பான நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன், ஆமென்.

 தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
 தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்     Donate Now
  Donate Now


