பிரியமானவர்களே, "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்;... நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்" (ஏசாயா 43:19) என்று கர்த்தர் சொல்வதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். கூடாதென்று மனுஷனுக்கு தோன்றுகிறது தேவனாலே கூடும். இஸ்ரவேலர்கள் வழி தெரியாமல் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாக இருந்தார்கள். தேவன், அவர்களை வழிநடத்தினார். வழியில்லாத இடத்திலும் அவர் வழியை உண்டாக்கி, பரலோகத்திலிருந்து மன்னாவைக் கொடுத்து, கன்மலையிலிருந்து தண்ணீரை அருளிச் செய்தார். அவ்வண்ணமே, எந்தப் பாதையில் செல்வது என்று நாம் அறியாதிருக்கும்போது, மக்கள் ஏதேதோ சொல்லி நம்மை குழப்பும்போது, சத்துரு நம்மை அதைரியப்படுத்தும்போது, கர்த்தர், வழி உண்டாக்குகிறவராக, அற்புதம் செய்கிறவராக, வாக்குத்தத்தத்தைக் காக்கிறவராக, இருளில் ஒளியாக இருப்பதாக வாக்குப்பண்ணுகிறார். அவரால் நமக்காக யாவற்றையும் செய்துமுடித்து, நம்மை சரியான பாதையில் நடத்த முடியும்.

வாழ்க்கையில் சிலவேளைகளில் மனுஷீக முயற்சிகள் தோற்று, எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்புவிக்கவேண்டிய நிலைக்கு நாம் வருவோம். அப்படிப்பட்ட தருணங்கள் எனக்கு வரும்போது, "ஆண்டவரே, நீர் மாத்திரமே என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்து முடிக்கக்கூடியவர்," என்று ஜெபிப்பேன். ஆண்டவர் எப்போதும் தம் வாக்குத்தத்தங்கள் மூலம் என்னை தேற்றுவார். வேதம், "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7) என்று கூறுகிறது. உங்களுக்கு எதிராக எழும்பும் சத்துரு சிதறிப்போவான்; தேவன்தாமே உங்களை முன்னோக்கி நடத்துவார். ஆகவே, "என்னுடைய பெலத்தினால் இதைத் தீர்த்துவிடுவேன்," என்று சொல்லாதிருப்போம். மாறாக, அதை தேவனின் கரங்களில் ஒப்புக்கொடுங்கள். அவர் வனாந்தரத்தை பாதையாக மாற்றுவார்; அவாந்தரவெளியில் ஆறுகளையும் பாயச் செய்வார்.

ஆகவே, பிரியமானவர்களே, இன்று அவரை நம்புங்கள். வழியில்லாத இடத்தில் தேவன் வழியை உண்டுபண்ணுவார் என்று விசுவாசியுங்கள். கூடாதவை எல்லாம் அவருடைய பலத்த வல்லமையினால் கூடும். உங்கள் வனாந்தரத்தில் ஆசீர்வாதத்தின் ஆறுகள் பாயட்டும்; உங்களுக்கு முன்னே இருக்கிற தடைகள் மாறி, வாசல்கள் திறக்கட்டும்; உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறட்டும். ஆண்டவர்தாமே சமாதானத்தின். செழிப்பின் பாதையில் உங்களை நடத்துவாராக.

ஜெபம்:
தகப்பனே, நீரே வழியை உண்டாக்குகிறவராகவும் அற்புதத்தைச் செய்கிறவராகவும் இருக்கிறீர். ஒரு மனுஷனும் பூட்டக்கூடாதபடிக்கு வாசல்களைத் திறக்கிறீர். ஆண்டவரே, நான் கடந்துசெல்லும் வனாந்தரத்தில் வழியை உண்டாக்குவீராக. அவாந்தரவெளிகள் அனைத்திலும் ஆறுகள் பாயும்படி செய்வீராக. எனக்கு முன் இருக்கிற தடைகள் யாவற்றையும் அகற்றும். என் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள்புரியும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதிப்பீராக. எனக்கும் எனக்கு அன்பானோருக்கும் வீடுகளை, பதவி உயர்வை, சமாதானத்தைக் கொடுத்து ஆசீர்வதியும். சத்துருக்கள் யாவரையும் சிநேகிதராக்கும். தவறான புரிந்துகொள்ளுதலையெல்லாம் ஒருமனமாய் மாற்றும். என் கைகளின் பிரயாசங்களை வாய்க்கப்பண்ணும். அற்புதங்கள் இன்றைக்கு நடக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.