"சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்" (மத்தேயு 5:5) என்ற வசனமே உங்களுக்கு தேவன் அருளும் வாக்குத்தத்தமாயிருக்கிறது. நீங்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டுமென தேவன் விரும்புகிறார். இந்தப் பூமியில் நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக விளங்க வேண்டும் என்றும், நீங்கள் பரலோகத்திலிருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு, பூமியில் அவற்றை சுதந்தரமாக அனுபவித்து மகிழவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். அதற்காக அவர் நம்மை சாந்தகுணமுள்ளவர்களாக மாற்றுகிறார். தேவன் நமக்கு அருளும் சுதந்தரம் எது? தம்முடைய சுதந்தரராய் இருக்கும்படியான சுதந்தரத்தை அவர் நமக்குத் தருகிறார் என்று வேதம் கூறுகிறது (ரோமர் 8:17). இயேசு, பாடுபட்ட பின்பு மகிமையடைந்ததுபோல, கிறிஸ்துவுக்காக நாம் பாடுபட்டால் தேவ மகிமையைப் பெற்றுக்கொள்வோம். ஆம், இயேசு தேவனின் சுதந்தரானதுபோலவே நீங்கள் தேவனுடைய சுதந்தரராவீர்கள்.
இரண்டாவதாக, வேதத்தில் ஓரிடத்தில் தேவன் நமக்குத் தரும் இன்னொரு சுதந்தரத்தைக் காணலாம் (1 பேதுரு 1:4). இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலமாக ஜீவனுள்ள நம்பிக்கையாகிய புது ஜீவனை அவர் நமக்குத் தருகிறார். ஆம், நாம் தேவனுடைய பிள்ளைகளாக உயிர்த்தெழுகிறோம். தேவனுடைய சுதந்தரராய், தேவனுடைய பிள்ளைகளாகும் உரிமையை நாம் பெற்றிருக்கிறோம். அடுத்ததாக, வேதம், இயேசு, நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்ததினாலே நம் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிக்கிறது என்று கூறுகிறது (எபிரெயர் 9:14). இயேசுவின் இரத்தம், எல்லா பாவ சுபாவங்களிலிருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது; அது தேவன் அருளும் சுதந்தரமாயிருக்கிறது. ஆம், இந்த உலகில் பாவத்திலிருந்து நாம் சுத்தமாக்கப்படுகிறோம்; இயேசுவின் இரத்தத்தின் மூலம் பாவ இயல்பை மேற்கொள்கிறோம்.
தேவன்தாமே எல்லா பாவ சுபாவத்திலிருந்தும், எல்லா பாவத்திலிருந்தும் இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுகின்றதும், தேவனுடைய பிள்ளையாவதற்கான சுதந்தரத்தை பெறுகின்றதுமான இந்தக் கிருபையை இன்று உங்களுக்குத் தந்தருள்வாராக. மாம்சத்தின் கிரியைகளான விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் உள்ளிட்ட எதையும் செய்யாதபடி நாம் பெலப்படுத்தப்படுகிறோம் (கலாத்தியர் 5:19-21). ஆம், நாம் பரிசுத்தத்தை சுதந்தரிக்கிறோம். அந்தக் கிருபையை தேவன் தருகிறார். உங்கள்மேலும் என்மேலும் அந்தக் கிருபை வரப்போகிறது. இது, தேவன் நமக்குத் தந்துள்ள சுதந்தரம். நாம், தேவனுக்கு முன்பாக சாந்தகுணமும் தாழ்மையுமுள்ளவர்களாக இருக்கவேண்டும். யோசேப்பைப்போல தேவ பயம் கொண்டவர்களாக, பாவத்தை மறுக்கிறவர்களாகவும் பரிசுத்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்கிறவர்களாகவும் இருப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்கு முன்பாக என் இருதயம் சாந்தகுணமுள்ளதாகவும் தாழ்மையுள்ளதாகவும் காணப்படும்படிச் செய்யும். என்னை உம் பிள்ளையாகவும் தேவனின் சுதந்தரவாளியுமாக்கிய தெய்வீக சுதந்தரத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா பாவத்திலிருந்தும் பாவ சுபாவத்திலிருந்தும் தயவாய் என்னை சுத்திகரித்தருளும். உம் விலையேறப்பெற்ற இரத்தம் எனக்குள் வல்லமையாக கிரியை செய்வதாக. பாவத்தை மறுக்கவும் உம்மை ஏற்றுக்கொள்ளவும் என்னை பெலப்படுத்தியருளும். உமக்கு முன்பாக பரிசுத்தமாகவும் பயபக்தியுடனும் நடக்க எனக்கு உதவி செய்திடும். இந்தக் கிருபையை விசுவாசத்தினால் உம்மிடமிருந்து பெற்றுக்கொண்டு இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


