அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்" (லேவியராகமம் 26:12) என்ற வசனத்தைத் தியானிப்போம். ஆம், தேவன் நம் நடுவில் உலாவுவதும், நம்மை தம் ஜனங்கள் என்று அழைப்பதும் எவ்வளவு சிலாக்கியம். "நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்..." - இப்படி ஆசீர்வதிப்பேன் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். ஆம், நாம் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவற்றை பின்பற்றினால் அவர் நம்மை தம் ஜனங்கள் என்று அழைக்கிறார்.

ஒரு குழந்தை அதன் தகப்பனுடனோ, தாயுடனோ செல்லும்போது, உலகத்தில் எதைக் குறித்தும் கவலைப்படாது; ஏனென்றால், அதன் பெற்றோர் அதனுடன் செல்கின்றனர். சாலையை கடக்கும்போது அல்லது கடினமான, பயமுறுத்தும் இடம் வழியாகக் கடந்து செல்லும்போது, பெற்றோர் தன்னை பாதுகாத்துக்கொள்வார்கள்; எல்லா தீங்குக்கும் விலக்கி வழிநடத்துவார்கள் என்பதை அறிந்து எதைக் குறித்தும் அக்குழந்தை கவலைப்படாமல் இருக்கும். தேவன், தம் பிள்ளைகளுக்கும் அப்படியே செய்கிறார். ஆகவே, இன்று தேவனுடைய கட்டளையை பின்பற்றுவோம்; அவருக்குக் கீழ்ப்படிவோம்; அவரது சித்தத்தைச் செய்வோம். அப்போது தேவன் நம் நடுவில் உலாவுவார். அவர் உங்கள் தேவனாயிருப்பார்; நீங்கள் அவரது ஜனமாயிருப்பீர்கள்.

தம் ஜனங்களுக்கு ஒன்றும் குறைவுபடாதிருக்கவேண்டுமென்பதில் தேவன் உறுதியாயிருக்கிறார். அவர் உங்களைப் பாதுகாப்பார்; சுகமாக தங்கப்பண்ணுவார்; நல்ல ஆரோக்கியத்தை தந்து, செழிக்கச் செய்வார்; உங்களுக்கு எதுவும் குறைவுபடாமல் பார்த்துக்கொள்வார். அவரது கற்பனைகளை நீங்கள் கைக்கொண்டு, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் போதும். அவர் உங்கள் தகப்பனாக, உங்கள் தேவனாக இருப்பார். உங்கள் அடிகள் ஒவ்வொன்றையும் வழிநடத்தி, உங்களைப் பத்திரமாய்க் காத்துக்கொள்வார். இன்று, தேவனை பின்பற்றவும், அவருக்குக் கீழ்ப்படியவும் அர்ப்பணிப்போம்; அப்போது அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எங்கள் நடுவில் உலாவுவதாக நீர் அளித்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் கற்பனைகளைக் கைக்கொள்ளவும், உம் கட்டளைகளுக்கு உண்மையாய் கீழ்ப்படியவும் எனக்கு உதவும். நான் ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் உம் சமுகம் என்னுடன் வருவதாக. என் இருதயத்திலிருந்து பயத்தை அகற்றி, உம் சமாதானத்தால் நிறைத்தருளும். எனக்கு வழிகாட்டும்; என்னை பாதுகாத்தருளும்; எல்லா தீங்குக்கும் விலக்கியருளும். எப்போதும் உம்மோடு நெருங்கியிருக்க எனக்குக் கற்றுத்தாரும். நீர் எப்போதும் என் தேவனாகவும், நான் மெய்யாகவே உம் பிள்ளையாகவும் இருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.