அன்பானவர்களே, இன்று ஆண்டவர் உங்களோடு பேசுகிறார். தேவனுடைய குரலைக் கேட்பது எவ்வளவு சந்தோஷம்! வேதத்திலுள்ள வசனங்கள் வாயிலாகவும் அவரது சத்தத்தை நாம் கேட்க முடியும். வேதம், "கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்" (புலம்பல் 3:24) என்று கூறுகிறது. 'கர்த்தர் என் பங்கு,' என்று எழுதிய மனுஷனுக்குள் இருந்த ஏக்கத்தின் அளவை நீங்கள் பார்க்க முடியும். வேறு எதற்காகவும் அல்லாமல், கர்த்தருக்காக மட்டுமே காத்திருக்கிற ஒரு தீவிர தாகத்தை, விருப்பத்தை இதில் காணலாம்.
காத்திருப்பதை அழகாக விவரித்த ஒரு வீடியோவை சமூக ஊடகத்தில் பார்த்தேன். தேசத்திற்காக போரிடும்படி இராணுவத்திற்குச் சென்ற ஒரு மனுஷனைப் பற்றிய கதை அது. அவன் ஒரு நாயை வீட்டில் வளர்த்தான். அது வீட்டைச் சுற்றி சுற்றி ஓடும். ஆனால், அந்த மனுஷன் சென்ற பிறகு, ஒவ்வொருநாளும் காலையில் அந்த நாய் வந்து வீட்டின் முன்பு காத்திருக்கும். அது படுக்கும்; அவன் வருகிறானா என்று காத்திருக்கும். தினமும் இப்படியே செய்து வந்தது. ஒருநாள், இராணுவத்தில் வேலையை முடித்துவிட்டு அவன் திரும்பினான்; காரை விட்டு இறங்கியதும், அந்த நாய் தலையை உயர்த்திப் பார்த்தது. அவனிடம் ஓடிச் சென்றது; அவன்மேல் தாவியது; அவன் உடலெங்கும் நக்கியது. அவனை வீட்டுக்குள் செல்லவே விடவில்லை. அந்த மனுஷன், பெரிய எலும்பொன்றை அந்த நாய்க்கு பரிசாகக் கொடுத்தான்.
அன்பானவர்களே, நாமும் அப்படிப்பட்ட எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் ஆண்டவருக்குக் காத்திருக்கவேண்டும். ஆண்டவர் வருகிறார். அவரைக் காண்பது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்! இந்த வசனம் கூறுவதுபோல, கர்த்தர் நம் பங்காயிருக்கிறார். நாம், அவர் நமக்குத் தருகிறவற்றை அல்ல. "அவர் இந்த வரத்தை எனக்குத் தருவார்; அவர் இந்த நன்மையை எனக்குச் செய்வார்; அவர் என்னை விருத்தியாக்கி, உயர்த்துவார்," என்று கூறாமல், அவரையே நம் பங்காக தெரிந்துகொள்வோம். அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை மட்டும் நாம் நோக்கினால், கணப்பொழுது மாத்திரமே அவை நம்மை திருப்தியாக்கும்; இன்னும் வேண்டும் என்று ஏங்கும்படி செய்யும். ஆனால், கர்த்தரை நம் சிறந்த பங்காகக் காத்துக்கொள்ளும்போது, அவருக்காக காத்திருந்து அவரைப் பெற்றுக்கொள்ளும்போது, அவருடைய சந்தோஷம் நம் இருதயத்தில் நிறைந்து வழியும். வேறு எதையும் நாம் விரும்பமாட்டோம். அவரே நம் இருதயங்களை நிரப்பி, நம்மை முற்றிலும் திருப்திப்படுத்துவார். கர்த்தரே நம் பங்காக இருக்கும் ஆச்சரியமான ஆசீர்வாதத்தை நாம் அனுபவிப்போமா?
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் என் பங்கும், மிகுந்த சந்தோஷமுமாயிருக்கிறீர். நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் உமக்குக் காத்திருக்க எனக்குக் கற்றுத்தாரும். என் உள்ளத்தை நிரப்ப முயற்சிக்கும் எல்லா சிற்றின்பத்தையும் அகற்றிப்போடும். உம் சமுகம் மாத்திரமே எனக்குப் போதும். உம்முடைய சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் என்னை நிரப்பும். எல்லா ஆசீர்வாதங்களுக்கும் மேலாக உம்மை தெரிந்துகொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


