அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்" (ஏசாயா 45:2) என்று கூறுகிறது. கர்த்தர், கோணலாக இருக்கிற யாவற்றையும் செவ்வையாக்குவார். உடைந்தவற்றை அவர் சீர்ப்படுத்துவார்; நிறைவடையாதவற்றை பூரணமாக்குவார்; உங்கள் பாதையை செழிப்பாக்குவார்.


கர்த்தர் உங்கள் முன்னாக செல்லும்போது என்ன நடக்கும்?

1. எல்லா மலைகளையும் தாண்டும்வண்ணம் விசுவாசம் நம்மை நிரப்பும்
தீர்க்கதரிசன வரம் நமக்கு இருந்தாலும், எல்லா இரகசியங்களையும் புரிந்துகொண்டாலும், அறிவிருந்தாலும், மலைகளை அசைக்கக்கூடிய விசுவாசம் இருந்தாலும், அன்பில்லாவிட்டால் நாம் ஒன்றுமில்லை என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 13:2). ஆனால் கர்த்தர், "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்" (ஏசாயா 54:10) என்று கூறுகிறார். கூடாது என்று சூழ்நிலை காணப்பட்டாலும், தடைகள் மிகப்பெரிதாயிருந்தாலும் அவற்றை மேற்கொள்ளும்படியான பெலனையும் விசுவாசத்தையும் கர்த்தர் உங்களுக்கு அளிப்பார். நம் விசுவாசத்தை தொடங்குகிறவரும் முடிக்கிறவருமானவர் இயேசுவே என்பதை ஒருபோதும் மறவாதிருங்கள் (எபிரெயர் 12:1,2). நம் கண்களை அவர்மேல் வைத்து நமக்கு முன்னிருக்கிற ஓட்டத்தை ஓடும்படி வேதம் கூறுகிறது. அநேக பாரங்களும் தடைகளும் உங்களைச் சுற்றிலும் எழும்பலாம்; எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கர்த்தரின் வல்லமைமேல் நம்பிக்கை வைப்பதே விசுவாசமாகும். அவரால் எல்லாமும் கூடும். மலைகளை அகற்றுவதற்கு கர்த்தர் உங்களுக்கு உதவுவார். "இவற்றை நான் அகற்றுவேன் என்று விசுவாசித்திடு," என்று அவர் உங்கள் உள்ளத்தினுள் பேசுகிறார். எல்லா தடைகளையும் மேற்கொள்ளுவதற்கான விசுவாசத்தை அவர் உங்களுக்குத் தருகிறார். உங்களைச் சுற்றிலும் எல்லாமே நிச்சயமற்றதாக தோன்றினாலும், அதைக் கடந்துசெல்லும்படி உங்களை நடத்தவும், பாதையில் காணப்படும் மலைகளை உடைக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. அவரே முன்னே செல்கிறார் என்று நம்பும் விசுவாசத்தை உங்களுக்குத் தருகிறார். அப்போது மலைகள் அகற்றப்படும்; செம்மையான வெளிகளில் நடப்பதற்கு வாசல்கள் திறக்கப்படும்.

2. கர்த்தர், நம் பாதங்களை உயரங்களில் நிறுத்துகிறார்
இரண்டாவதாக, கர்த்தர், நம் சூழ்நிலைகளின்மேலாக நிற்கும்படி உயர்ந்த ஸ்தலங்களுக்கு உயர்த்துகிறார் (ஏசாயா 58:14). அவர் ஏன் நம்மை உயர்த்துகிறார்? கர்த்தர், ராஜரிகம் செய்கிறார் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 52:7). பிறருக்கும் அவர் உதவி செய்யும்படியாக, நற்செய்தியை அறிவிக்கும்படி நம்மை உயர்த்துகிறார். அவர் நம்மை உயர்ந்த ஸ்தானங்களில் அமர்த்துகிறார். அவர் நமக்கு முன்னாக சென்று, தடைகளை அகற்றுகிறார்; அவற்றுக்கு மேலாக நாம் உயரும்படி செய்கிறார். ஏன் அப்படி செய்கிறார்? இயேசு ராஜாவாக ஆளுகை செய்கிறார்; தம் வல்லமையை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார்; அவர்களுக்கு உதவி செய்வார்; இரட்சிப்பார்; சுகப்படுத்துவார்; விடுதலையாக்குவார் என்பதை நம்மால் காட்ட முடியும். ஆண்டவர் உங்களை அப்படி பயன்படுத்துவார். இயேசு ஆளுகை செய்கிறார்; இரட்சிக்கிறார்; குணமாக்குகிறார்; விடுதலையாக்குகிறார் என்று நீங்கள் பிறரிடம் பேசும் வார்த்தைகளை அவர் உறுதிப்படுத்துவார். கர்த்தர், உயரமான ஸ்தலங்களில் நிற்கும்படி உங்கள் பாதங்களை அழகுப்படுத்துகிறார். நீங்கள் சமாதானத்தை உரைக்கும்படி அவர் செய்கிறார்; தம் சமுகத்தை சுமந்து செல்லும்படி, உங்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு ஒளியாக பிரகாசிக்கும்படி ஸ்திரமாக நிற்கப்பண்ணுகிறார். இந்த ஆசீர்வாதத்திற்காக ஆண்டவரை துதிப்போம்.

3. எல்லா மலையையும் அகற்றும் ஆண்டவரின் அன்பு
மூன்றாவதாக, ஆண்டவரின் அன்பு எல்லா மலையையும் அகற்றுகிறது. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், கர்த்தரின் கிருபை அவர் பிள்ளைகளை விட்டு விலகாமலும், அவர் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (ஏசாயா 54:10). ஆகவே, உங்கள் இருதயம் கலங்கவேண்டாம். இன்றைக்கு ஆண்டவர் இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்கு அருளுவாராக. கர்த்தர் உங்களை மலைகளின்மேல் உயர்த்தும்போது, கடைசி நாட்களில், பர்வதத்தின்மேல் கர்த்தரின் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு எல்லா மலைகளைக் காட்டிலும் உயர்த்தப்பட்டிருக்கும் என்று வேதம் கூறுகிறது (மீகா 4:1). சகல தேசத்தாரும் அவரிடம் வருவார்கள். அங்கிருந்து கர்த்தரின் வார்த்தை உலகெங்கும் செல்லும். அப்படிப்பட்ட இடத்தில் ஆண்டவர்தாமே உங்களை நிலைப்படுத்துவாராக. தம் தீர்க்கதரிசன வார்த்தையை தைரியமாய் அறிவிக்கும்படி செய்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்கு முன்பாக உண்மையாக நடப்பதற்கு எனக்கு உதவி, நீதியாகவும் உத்தமமாகவும் வாழும்படி செய்யும். உம் கிருபை என்மேலும் என் குடும்பத்தின்மேலும் தங்கியிருப்பதாக. என் பிள்ளைகளை ஆசீர்வதித்து, உம் வழிகளில் அவர்களை நிலைப்படுத்தும். அவர்கள் ஞானத்திலும் பெலத்திலும் தயவிலும் வளரும்படி செய்து, அநேகருக்கு அவர்கள் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்வீராக. அவர்களுக்கு முன்னே சென்று ஒவ்வோர் அடியிலும் அவர்களை வழிநடத்தும். உம்மை நோக்கி அவர்கள் கூப்பிடும் முன்னரே அவர்கள் விண்ணப்பங்களுக்கு பதிலளித்திடும். உம் பரிசுத்த ஆவியினால் அவர்களை நிறைத்து, உம் மகிமைக்கென்று அவர்களைப் பயன்படுத்தும். அவர்கள் எதிர்காலத்திற்கு என் உண்மையும் நீதியான வாழ்க்கையும் பலமான ஆவிக்குரிய அஸ்திபாரமாக விளங்கச் செய்யவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.