அன்பானவர்களே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவர் இயேசு கூறிய, "நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்" (யோவான் 10:11) என்ற வசனத்தை நாம் தியானிக்க இருக்கிறோம். ஆம் அன்பானவர்களே, அவர் உங்கள் மேய்ப்பராயிருக்கவேண்டும். ஒரு தீர்க்கதரிசி, "இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்" (1 இராஜாக்கள் 22:17) என்று கூறுகிறான். அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையைக் குறித்து என்ன? இயேசுவை உங்கள் மேய்ப்பராக வைத்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையை தேவனுடைய கரங்களில் கொடுத்திருக்கிறீர்களா? தேவன் உங்களை அனுதினமும் நடத்துகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? 23ம் சங்கீதத்தில் தாவீது தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதை வாசிக்கலாம். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" (சங்கீதம் 23:1) என்று தாவீது கூறுகிறான். அன்பானவர்களே, இயேசுவை உங்கள் மேய்ப்பராக வைத்திருக்கிறீர்களா? தாவீது தொடர்ந்து, "நான் தாழ்ச்சியடையேன்" என்று கூறுகிறான்.
இயேசு தன் மேய்ப்பராக இருந்தால், தான் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து ஆசீர்வாதங்களையும் ஆறு வசனங்களிலும் கூறுகிறான். இந்த சங்கீதத்தை மறுபடியும் மறுபடியும் வாசித்து உங்கள் வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்துகிறேன். உங்கள் வாழ்க்கையினுள் வரும்படி ஆண்டவர் இயேசுவை கேளுங்கள். சிலுவையை நோக்கிப் பாருங்கள். சவுல், மோசமான மனுஷனாக இருந்தான். ஆனால், தேவன் தம் கரங்களில் உண்மையான தேவ மனுஷனாக, ஆச்சரியமானவனாக அவனை மாற்றினார். இது எப்படி நடந்தது? அவன் இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டான். அவ்வாறே அன்பானவர்களே உங்கள் இருதயத்தை இப்போதே ஆண்டவரிடம் கொடுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, "ஆண்டவரே, நீர் என் மேய்ப்பராயிருக்கவேண்டும். என் வாழ்வினுள் வாரும். என்னை சுத்திகரித்து புதிய மனுஷனாக்கும்/மனுஷியாக்கும்," என்று கூறுங்கள்.
தேவன் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார். சங்கீதம் 23ஐ முழுமையாக வாசித்துப் பாருங்கள். இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது உங்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களையெல்லாம் உணருங்கள். உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் அறிக்கை செய்து அவரோடு ஒப்புரவாகுங்கள். அவர் மகிழ்ச்சியோடு உங்களுக்கு இரட்சகராவார். உங்கள் பாவங்களுக்காக தாம் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் உங்களைக் கழுவுவார். உங்கள் மேய்ப்பராக இருப்பார். நீங்கள் ஒன்றிலும் குறைவுபடமாட்டீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, எனக்காக உம்முடைய உயிரையே கொடுத்த நல்ல மேய்ப்பராக நீர் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய எல்லா பெலவீனங்கள், பாவங்கள், தேவைகள் இவற்றுடன் இன்று உம் முன்னே வந்து, நீர் சிலுவையில் சிந்திய விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவும்படி கேட்கிறேன். ஆண்டவரே, என்னுடைய மேய்ப்பராக இருந்து தினந்தோறும் என்னை வழிநடத்தும்; சவுலை பவுலாக மறுரூபப்படுத்தியதுபோன்று உம்முடைய அன்பின் கரங்களால் என்னை புதிய மனுஷனாக்கும் / மனுஷியாக்கும். சமாதானத்தின் பசும்புல்வெளியில் என்னை நடத்தி, என் தேவைகள் எல்லாவற்றையும் உம் வார்த்தையின்படி தந்தருளும். நீர் என் நல்ல மேய்ப்பராயிருக்கிறீர்; எனக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்று விசுவாசித்து, என் வாழ்க்கையை முற்றிலுமாக உம்மிடம் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.