தேவன் உங்கள் வாழ்க்கையைக் குறித்து மகிமையான திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியின் வல்லமையின் வாயிலாக தீர்க்கதரிசனம் உரைக்கும் தமது மகனாக, மகளாக நீங்கள் மாறவேண்டும் என்று பிரியப்படுகிறார். "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" (2 பேதுரு 1:21) என்று வேதம் கூறுகிறது. எவ்வளவு ஆச்சரியமான அழைப்பு! ஆண்டவர், அவரது வார்த்தைகளை நீங்கள் உரைத்து, அவரது திட்டங்களை வெளிப்படுத்தும்வண்ணம் தமது ஆவியை உங்கள்மேல் பொழிகிறார். தேவ ஆவி உங்களை நிரப்பும்போது, நீங்கள் தேவனின் இருதயத்திலிருக்கிறவற்றை பேசுவீர்கள். இயேசுவானவர், வார்த்தையிலும் கிரியையிலும் வல்லமையான தீர்க்கதரிசியாக விளங்கியபடி, நீங்களும் வார்த்தையிலும் செயலிலும் வல்லமையாக விளங்குவீர்கள். "இயேசுவே, என்னை உம்முடைய தீர்க்கதரிசியாக்கியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்," என்று கூறுங்கள். நீங்கள், உங்களை அவருக்கு விட்டுத் தரும்போது, அவரது ஆவியானவர் உங்களை நிரப்புவார்; அநேகருக்கு ஜீவனையும் வழிகாட்டுதலையும் கொடுக்கும்படி உங்களைப் பயன்படுத்துவார்.

இரண்டாவதாக, தேவனுடைய தீர்க்கதரிசியாக, நீங்கள் தேவனிடமிருப்பவற்றை உரைப்பீர்கள். வேதம், "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7) என்று கூறுகிறது. ஆம், தம் இருதயத்திற்கு நெருக்கமான பிள்ளைகளுக்கு, தம் இரகசியங்களை வெளிப்படுத்த தேவன் பிரியமாயிருக்கிறார். அவர் உங்களிடத்தில் பேசும்போது, மற்றவர்களுக்கான ஆறுதலின் வார்த்தைகளை, எச்சரிப்பின் வார்த்தைகளை, குணப்படுத்தும் வார்த்தைகளை, நம்பிக்கையின் வார்த்தைகளை அவர் உங்களுக்கு அளிப்பார். உங்கள் எண்ணங்களை அல்ல; தேவனுடைய திட்டங்களை அறிவிப்பதற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர் தம் வார்த்தைகளை உங்கள் வாயில் போடுவார்; அவரது அக்கினியை உங்கள் உள்ளத்தில் வைப்பார். அவரது வசனத்தை நீங்கள் தியானிக்கும்போது, உங்கள் ஆவி, அவரது சத்தத்தை கேட்பதற்கு உணர்வுள்ளதாகும். மோசேயிடம், சாமுவேலிடம், எலியாவிடம், தானியேலிடம் தேவன் பேசியவண்ணம் உங்களோடும் பேசுவார். தேவனுக்குச் செவிகொடுத்து அவரது சத்தியத்தை அறிவிப்போருக்காக உலகம் காத்திருக்கும். பரலோகத்தின் செய்தியை பூமிக்கு கொண்டு வரும்படி திறப்பில் நிற்போரில் ஒருவராக இருக்க நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.

மூன்றாவதாக, தேவ ஆவியினால் நீங்கள் சுமந்துசெல்லப்படுவீர்கள். வேதாகமம், சுவிசேஷத்தை பிரசங்கிக்க பிலிப்புவை  ஆவியானவர் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு கொண்டு சென்றார் என்று கூறுகிறது. ஆவியானவர், எலியாவின்மேல் இறங்கி, ஆகாப் ராஜாவின் இரதத்திற்கு முன்னாக ஓடக்கூடிய தெய்வீக பெலனை கொடுத்தார். அதேபோன்று நீங்களும் ஆவியானவர் செல்ல விரும்பும் இடத்திற்கு நடத்தப்படும்படி உங்கள்மேலும் இறங்குவார். ஆவியானவர் அசைவாடும்போது நீங்கள் சுகத்தை, மீட்பை, எழுப்புதலை அளிப்பீர்கள். வேதம் விவரிப்பதுபோல தேவ நதியானது அவரது சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு, அது செல்லுமிடமெங்கும் ஜீவனை அளிக்கிறது; அந்த நதியானது உங்கள் வழியாய் பாயும் பரிசுத்த ஆவியானவர்தாம்! (எசேக்கியேல் 47). இந்தத் தெய்வீக நதியினால் நீங்கள் கொண்டுசெல்லப்படும்போது, மக்கள் குணமடைவார்கள்; செத்துப்போன ஆத்துமாக்கள் உயிரடையும்; அநேகர் இயேசுவினிடம் இழுக்கப்படுவார்கள். நீங்கள் தியானிக்கையில் உங்கள் இருதயம் உங்களுக்குள்ளாக பற்றியெரியும்போது, பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசனத்தை உங்களுக்குள்ளாக எழுப்புகிறார் (சங்கீதம் 39:3). பிறகு, ஆவியானவரின் வேண்டுதல்படி தேவ சித்தத்தின்படி நீங்கள் ஜெபிப்பீர்கள் (ரோமர் 8:26,27). உங்களுக்கும் ஆண்டவருக்குமான இந்த தெய்வீக பங்களிப்பில் அவரது ஆவியானவர் உங்களை நடத்துவார்; நீங்கள் உரைப்பீர்கள்; தேவ சித்தம் பூமியில் செய்யப்படும்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய பிள்ளையாகவும் உம்முடைய தூதனாகவும் இருக்கும்படி என்னை தெரிந்துகொண்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்பி, தீர்க்கதரிசனத்தின் பாத்திரமாக்குவீராக. என் உள்ளத்தில் உம் வார்த்தைகள் அக்கினியாய் எரிவதாக; அவை, என் வாயின் வழியாய் வல்லமையோடு பாய்ந்து செல்லுவதாக. மற்றவர்களுக்கு ஆறுதலையும் சத்தியத்தையும் அளிக்கும்படியாக நீர் வெளிப்படுத்துகிறவற்றை மட்டும் உரைப்பதற்கு எனக்குக் கற்றுக்கொடும். உம் வார்த்தைகள் தேவைப்படும் இடங்களுக்கு என்னை உம்முடைய ஆவியினால் சுமந்து செல்லும். உம்முடைய ஜீவநதி என் வழியாக பாய்ந்து நொறுக்கப்பட்டோரை சுகப்படுத்தட்டும். பழைய காலத்தில் உம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தியதுபோல உம் இரகசியங்களை எனக்கு வெளிப்படுத்தும். பரிசுத்தத்திலும், உம் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய மகிமைக்கென நான் வார்த்தையிலும் செயலிலும் வல்லமையாக விளங்கச் செய்யும். உம்முடைய தீர்க்கதரிசன கிருபையினால் என்னை அபிஷேகித்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.