அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது" (சங்கீதம் 33:12) என்ற வசனத்தை தியானிப்போம். "கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்" (சங்கீதம் 135:4) என்றும் வேதம் கூறுகிறது. தேவன், இஸ்ரவேலை நேசித்தார். இஸ்ரவேல் என்பதும் யாக்கோபு என்பதும் ஒருவரே. தேவன், இஸ்ரவேல் தேசத்தை தமக்குச் சொந்தமானதாக எண்ணி மகிழ்ந்தார். அவர்களை தன் கண்மணிபோல வைத்து காத்துக்கொள்வதாக வாக்குப்பண்ணினார். அவர்கள் தேவனை பின்பற்றிய வரைக்கும் காக்கப்பட்டார்கள். ஆகவேதான், "இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே" (உபாகமம் 33:29) என்று வேதம் கூறுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள்! கர்த்தரே அவர்களை தெரிந்துகொண்டார்; அவர்களை ஆசீர்வதித்தார். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பதாகவும் கனப்படுத்துவதாகவும் வாக்குக்கொடுத்திருக்கிறார். இறுதியாக, கர்த்தர் பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைக் கொண்டு சேர்த்தார்.

நாம் எவ்வளவு காலம் கர்த்தரை பின்பற்றுகிறோமோ அந்த அளவுக்கு அவர் நம்மை பாதுகாப்பார்; ஆசீர்வதிப்பார். கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்தார்; வியாதியை அவர்களிலிருந்து விலக்கினார் (யாத்திராகமம் 23:25). கர்த்தர், விவரங்களை பதிவு செய்வதில் கவனமாக இருந்தார். அடுத்த வசனத்தில், கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன் என்று கர்த்தர் கூறுகிறார். அவர்கள் சமாதானமாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்பதில் கர்த்தர் கவனமாக இருந்தார்; நன்றாக வாழ்ந்திருக்கவேண்டும் என்று நினைத்தார். அவ்வண்ணமாக, நீங்களும் தேவனை பின்பற்றி, அவருக்குக் கீழ்ப்படிந்தீர்களானால், அவர் உங்களைப் பாதுகாப்பார்; உங்களுக்குக் கேடகமாக இருப்பார். தமது கரங்களில் நீங்கள் சுகமாய் இருப்பதை உறுதி செய்வார். "இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்" (யாத்திராகமம் 19:5) என்று கர்த்தர் கூறுகிறார். உங்களைச் சுற்றி எத்தனைபேர் இருந்தாலும் கர்த்தர் உங்களைத் தமக்குச் சொந்த ஜனமாக வைத்திருப்பார்.

தேவன் தெரிந்துகொள்ளும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள். தேவன், ஏன் உங்களைத் தெரிந்துகொள்கிறார்? முதலாவது தேசத்திற்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கும், பிறகு பூமியிலுள்ள எல்லோருக்கும் ஆசீர்வாதமாக இருப்பதற்கும் அவர் தெரிந்துகொள்கிறார். கர்த்தர் ஆபிரகாமை தெரிந்துகொண்டு அவனை ஆசீர்வதித்தார். அவனை ஆசீர்வதிக்கும்போது, "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2) என்று கூறினார். அன்பானவர்களே, கர்த்தர் உங்களைத் தமக்குச் சொந்த ஜனங்களாக தெரிந்துகொண்டிருக்கிறார். நீங்கள் மாத்திரமே அவருக்குச் சொந்தமானவர்கள்; தேவனுக்குரியவர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக; நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கும்படி அவர் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்குச் சொந்தமானவனா(ளா)க என்னை தெரிந்துகொண்டததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை உண்மையாய் பின்பற்றுகிறவர்களுக்கு நீர் வாக்குப்பண்ணியிருக்கிற அன்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. இஸ்ரவேலை உம்முடைய கண்மணிபோல காத்துக்கொள்வதுபோல, என்னையும் அனுதினமும் உமக்கு சமீபமாய் வைத்தருளும். எல்லா தீமையினின்றும் என்னை காத்துக்கொள்ளும். எனக்கு தேவையானவற்றை அருளிச்செய்யும். எல்லா வியாதியையும் துக்கத்தையும் என் வாழ்க்கையையும் வீட்டையும் விட்டு விலக்கியருளும். உம்முடைய வழிகளில் உத்தமமாய் நடக்கவும், தேசங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கி உம்முடைய நாமத்திற்கு மகிமை கொண்டு வரவும் உதவி செய்யும். என்னை உமக்கு மாத்திரமே அர்ப்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.