அன்பானவர்களே, "தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்" (ஆபகூக் 2:4) என்று வேதம் கூறுகிறது. தேவன் உங்களை நீதிமானாய் / நீதியுள்ள பெண்ணாய் வைத்திருக்கிறார். உபத்திரவங்கள் வரும்போது பயப்படாதீர்கள். அநேகவேளைகளில் நீங்கள், "ஐயோ, ஏதோ ஒரு தவறு என்னிடம் உள்ளது. ஆகவேதான், பிரச்னை வந்துள்ளது," என்று நினைக்கலாம். அப்படியல்ல! உபத்திரவங்கள் வரும்போது மாத்திரமே உங்கள் வாழ்வில் நீதியின் ஆற்றல் எல்லோருக்கும் முன்பாகவும், உங்களுக்கு முன்பாகவும் தோன்றும். உபத்திரவங்கள், சோதனைகள், வேதனையில் மத்தியிலும் நீங்கள் நீதியில் நடக்கிறீர்கள் என்பதை தேவன் மற்றவர்களுக்கு காட்டுவார். இயேசு கிறிஸ்து மூலமாக அவரை விசுவாசிக்கிறவர்கள் யாவருக்கும் அந்த நீதி வழங்கப்பட்டுள்ளது என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:22). நீதியான இயேசுவில் நீங்கள் விசுவாசம் வைத்துள்ளபடியினால் மேன்மையையும் பெலனையும் பெற்று, முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருப்பீர்கள்.

உங்களையே குற்றப்படுத்திக்கொள்ளாமல், "ஆண்டவரை விசுவாசிக்கிறபடியால் நான் நீதியில் நடக்கிறேன்," என்று கூறும்போது, உண்மையுள்ளவர்களுக்கு தேவன் ஆயத்தம்பண்ணியிருக்கிற ஆசீர்வாதங்கள் அனைத்தையும் நீங்கள் சுதந்தரித்துக்கொள்வீர்கள். தேவன் உங்களை நீதிமானாய் / நீதியுள்ள பெண்ணாய், உண்மையுள்ளவர்களாய் காத்துக்கொள்கிறார். அதற்காக ஆண்டவரை துதித்து ஸ்தோத்திரியுங்கள். ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் (ஆதியாகமம் 15:6). தேவன் தன்னை அழைத்திருக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான்; கர்த்தருக்கு முன்பு அவன் மனச்சாட்சி தெளிவாயிருந்தது. அவனுக்குப் பிள்ளையில்லாதிருந்தபோதும், பெரிய ஜாதியாக்குவேன் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்திற்காக காத்திருந்தபோதும், அவன் ஒருபோதும் தேவனுக்கு முன்பாக தன் நீதியை சந்தேகிக்கவில்லை. ஏற்றவேளையில் தேவன் அவனுக்கு ஈசாக்கு என்ற அழகிய மகனைக் கொடுத்தார். இன்று இஸ்ரேல் என்ற தேசம், உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் என்ற வாக்குக்கு சாட்சியாக விளங்குகிறது.

ஆகவே, உபத்திரவங்களின் மத்தியிலும் நீங்கள் நீதியில் நடக்க உண்மையுள்ளவர்களாயிருக்கிறபடியினால் உங்களில் ஆசீர்வாதம் நிரம்பி வழியும். நீதியின் பலன் என்ன? அது சமாதானம் (ஏசாயா 32:17).  நீதியின் பலன் சமாதானமாயிருக்கிறது. உங்கள் வாழ்வில் சமாதானத்தை நிறைவாய் பெற்றிருப்பீர்கள். வேதம், "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6) என்று கூறுகிறது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் என்றும் வேதம் நமக்கு நினைவுறுத்துகிறது (மத்தேயு 6:23). இறுதியாக, துன்பத்தின் மத்தியிலும் தேவ சித்தத்தை பயமின்றி நீங்கள் நிறைவேற்றுகிறபடியால் பரலோகராஜ்யம் உங்களுக்குரியதாயிருக்கும் என்றும் வேதம் கூறுகிறது (மத்தேயு 5:10). பரலோகம் உங்களுக்குத் திறக்கப்படும். தேவன்தாமே இந்த ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தந்து உங்களை நீதிமானாய் / நீதியுள்ள பெண்ணாய் காத்துக்கொள்வாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இயேசுவில் கொண்டிருக்கும் விசுவாசத்தினால் என்னை நீதிமானாக காத்துக்கொள்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இக்கட்டுகள் வரும்போது, என்னையே குற்றப்படுத்திக்கொள்ளாதிருக்க எனக்கு உதவி செய்யும். ஆனாலும், உபத்திரவ காலங்களில் மாத்திரமே என் நீதியால் பிரகாசிக்க முடியும் என்பதை நான் மறந்துபோகாதிருக்கப்பண்ணும். தயவாய் உம்முடைய பரிபூரண சமாதானத்தினால் என் உள்ளத்தை அதிகமாய் நிரப்பும். அன்றாடம் உம் நீதியின்மேல் பசி தாகமாயிருக்க எனக்கு உதவும். பயமின்றி உண்மையாய் நடப்பதற்கு என்னை பெலப்படுத்தும். உமது ஏற்றவேளையில் எல்லா ஆசீர்வாதத்தையும் என் வாழ்க்கையில் கூட்டித் தருவீர் என்று நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.