அன்பானவர்களே, இன்றைக்கு, "நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்" (சங்கீதம் 56:3) என்ற அருமையான வசனத்தை தியானிக்கும்படி உங்களை அழைக்கிறேன். தாவீது, அப்படி சொல்கிறான். எவ்வளவு ஆழமான அறிக்கை இது! முந்தின வசனத்தில் தாவீது தன் நிலையை, "என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்" என்று விவரிக்கிறான். பயமும் ஆபத்தும் அவனைச் சூழ்ந்திருந்தன; ஆனாலும் உபத்திரவங்களின் நடுவிலும், அவன் தன் நம்பிக்கையை தேவன்மேல் வைத்தான். பயம், அவனை தேவனை விட்டு விலக்கவில்லை. மாறாக, கிட்டிச்சேர்த்தது. "தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?" (சங்கீதம் 56:4) என்று அவன் அறிக்கைபண்ணுகிறான். பயத்தின் நடுவில் இதுவே விசுவாசத்தின் வல்லமையாயிருக்கிறது. அன்பானவர்களே, வேதனையான சோதனைகளின் வழியாக, நிச்சயமில்லாத நிலை வழியாக நீங்கள் கடந்து செல்லும்போது, உங்கள் சுயபுத்தியை சார்ந்திருக்காதிருங்கள். உங்கள் பாரங்களையெல்லாம் இயேசுவின் பாதத்தில் வைத்துவிடுங்கள். அவரால் மாத்திரமே உங்களை கவனிக்க, பாதுகாக்க, பெலப்படுத்த முடியும். ஆகவேதான் தாவீது, "நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்" (சங்கீதம் 34:4) என்று கூறுகிறான்.

தேவன் தம் பிள்ளைகளில் ஒருவரை எப்படி பயத்திலிருந்து விடுவித்து, அவர்கள் குடும்பத்தை சீர்ப்படுத்தினார் என்பதைக் குறித்த அழகிய சாட்சி ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜெப செல்வி என்ற சகோதரி, எதிர்காலத்தைக் குறித்து மிகுந்த பயத்துடன் வாழ்ந்து வந்தார்கள். மேஷாக் என்ற சகோதரரை அவர்கள் திருமணம் செய்தார்கள். மகிழ்ச்சியாக ஆரம்பித்த அவர்கள் திருமண வாழ்க்கை சீக்கிரமாகவே பணக்கஷ்டத்தினால் இருண்டது. பையனுக்கு பால் வாங்கக்கூடாத முடியாத நிலையில், சோறு வடித்த தண்ணீரை மகனுக்குப் புகட்டினார்கள். அந்த வேதனையான நாட்களிலும் அத்தம்பதியர் எங்கள் மகள் ஸ்டெல்லா ரமோலாவும் மகன் டேனியும் பாடிய பாடல்களை, குறிப்பாக ஆதியாகமம் 12:2 என்ற வசனத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'ஆசீர்வதிப்பேன்' என்று தேவ வாக்குத்தத்தத்தைப் பற்றிய பாடலை கேட்டார்கள். அவர்களது குட்டி மகனும் அந்தப் பாடலை சந்தோஷமாக பாடினான். ஜெப கோபுரத்தில் சகோதரர் மேஷாக் தன்னார்வமாக ஊழியம் செய்தார். பணம் சம்பாதிக்காமல் நேரத்தை வீணாக்குவதாக மக்கள் அவரை கேலி செய்தனர். ஆனால், அவர் தேவனுக்கு ஊழியம் செய்வதில் உண்மையாயிருந்தார். ஆண்டவர் ஒரு வழியை உண்டாக்குவார் என்று அவர் விசுவாசித்தார். கிடைத்த வேலைகளை செய்து ரூ.150 அல்லது ரூ.200 சம்பாதித்தார். ஆனாலும் அவர்கள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு சென்னை அண்ணாநகரிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் நடக்கும் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டார்கள். ஒருநாள் தேவ ஊழியர் ஒருவர் ஜெபித்து, "விரைவிலேயே உங்களுக்கு வேலை கிடைக்க தேவன் வழி திறப்பார்," என்று தீர்க்கதரிசனமாக கூறினார். சகோதரர் மேஷாக் அந்த வார்த்தையை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டார். தேவன், அற்புதவிதமாக புதிய வேலை கிடைக்க வழி திறந்தார்.

அவர்கள் பயணம் அத்துடன் முடியவில்லை. சில வருடங்களில் புரிதலில் வேறுபாடு குடும்பத்தில் தலையெடுத்தது. இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ஜெபா சென்றுவிட்டார்கள். மேஷாக், விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். நீதிபதி, ஒரு மாதத்திற்குள் தருவதாக கூறினார். மாதத்தின் பின் மாதம், வருடத்திற்கு மேல் வருடம் கடந்தாலும் இருவரும் பிரிவில் சமாதானத்தை காண இயலவில்லை. ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இருவரும் உள்ளத்தின் ஆழத்தில் ஒப்புரவாக விரும்பினர். அவரவருக்கு அருகிலிருக்கும் ஜெப கோபுரத்தில் ஊக்கமாக ஜெபித்தனர். முறிவை தேவனால் மாத்திரமே சீர்ப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆண்டவர் ஓர் அற்புதத்தை செய்தார். குடும்ப விழா ஒன்றில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க நேர்ந்தது. கோபம் உருகிவிட்டது. புன்னகை திரும்பியது; உரையாடல்கள் ஆரம்பித்தன. ஆண்டவர் நேர்த்தியாக அவர்களை மறுபடியும் இணைத்தார். வேதனையாலும் பயத்தாலும் நிறைந்திருந்த அவர்கள் இல்லம், சிரிப்பினாலும் சந்தோஷத்தினாலும் நிறைந்தது. இப்போது அவர்கள் பொருளாதாரத்தில் ஸ்திரமாகவும் ஆண்டவருக்குள் ஆவிக்குரியவிதத்தில் உறுதியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றிய அதே தேவன் உங்களுக்கும் அப்படியே செய்வார். அன்பானவர்களே, எதிர்காலம், குடும்ப பிரச்னை, பொருளாதார பாரம் எவ்வகையான பயம் உங்களை வாட்டினாலும் தேவன்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள். உங்களை விடுவிக்கவும், உங்கள் குடும்பத்தை பூரணமாய் ஆசீர்வதிக்கவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் பயப்படும்போது உம்மை நம்பலாம் என்கிற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எதிர்காலத்தைக் குறித்து நான் பயப்படும்போது உம் சமாதானத்தினால் என்னை தேற்றும். ஆண்டவரே, என் குடும்பத்தைச் சீர்ப்படுத்தும்; பிரிந்திருக்கும் உள்ளங்களை இணைத்திடும். உம்முடைய ஆவியின் வல்லமையினால் என் வீட்டில் அன்பை திரும்ப தாரும். பணக்கஷ்டத்தினால் நான் போராடும்போது எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்யும். ஆசீர்வதிப்பதற்கான புதிய வாசல்களை திறந்தருளும். என் கண்ணீரை துடைத்திடும்; பயம் இருக்குமிடத்தில் விசுவாசத்தால் நிரப்பிடும். உம்முடைய சமுகத்தாலும் சந்தோஷத்தாலும் என் வீட்டை நிரப்பிடும். மனுஷர் புரிந்துகொள்ள இயலாதவண்ணம் நான் அற்புதங்களைக் காணட்டும். இரட்டிப்பான சந்தோஷத்தை எனக்குத் தருவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.