அன்பானவர்களே, ஒருவேளை நீங்கள், "ஆண்டவர் என்னை எதற்காகப் படைத்தார்? எனக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. தினமும் அழுகிறேன். தனிமையில் வாடுகிறேன்," என்று சொல்லிக்கொண்டிருக்கக்கூடும். அன்பானவர்களே, உங்களை ஒரு நோக்கத்தோடு ஆண்டவர் படைத்திருப்பார். வேதம், "வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்று கூறுகிறது (சங்கீதம் 115:15). உங்களை ஆசீர்வதிப்பதற்கு மட்டுமின்றி, ஆசீர்வாதமாக திகழச் செய்வதற்காகவும் ஆண்டவர் சிருஷ்டித்திருக்கிறார். ஆகவே, தைரியமாயிருங்கள். இந்த ஆசீர்வாதம் இன்று உங்களுக்கு வருவதாக. இயேசுவின் நாமத்தால் இவ்வுலகில் ஆசீர்வதிக்கப்பட்டவராக வாழ்வதற்கான கிருபையை ஆண்டவர் உங்களுக்கு அருளுவார். "ஆண்டவர் என்னை ஆசீர்வதிப்பதற்காகவே சிருஷ்டித்திருக்கிறார்," என்று கூறியபடியே தைரியமாய் வாழ்வினுள் பிரவேசியுங்கள். வானத்தையும் பூமியையும் பாருங்கள். கர்த்தர், மழையையும் சூரியனையும் சிருஷ்டித்திருக்கிறார். சூரிய ஒளியில்லாவிட்டால் கிருமிகள் பெருகி நமக்கு தீங்கு விளைவிக்கும். எல்லாமும் குளிர்ந்துபோகும்; பனியும் பனிக்கட்டியும் பூமியை மூடிவிடும். ஆனால், கர்த்தர் சூரியனை சிருஷ்டித்திருக்கிறார்; அதற்கு வெப்பத்தைக் கொடுத்திருக்கிறார்; இந்த ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்திருக்கிறார். எல்லாவற்றையும் நம் ஆசீர்வாதத்திற்காக அவர் எவ்வளவு நேர்த்தியாக சிருஷ்டித்திருக்கிறார்!
வேதம், "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று" (யோவான் 1:3) என்று கூறுகிறது. அவரே சிருஷ்டிகர். இன்றும் அவர் சிருஷ்டித்துக்கொண்டும், காரியங்களை உருவாக்கிக்கொண்டும் இருக்கிறார். இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து சிருஷ்டிகளும் அவரால் படைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. "அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது" (கொலோசெயர் 1:16) என்று வேதத்தில் வாசிக்கிறோம். "நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது" (வெளிப்படுத்தல் 4:11) என்றும் வேதம் கூறுகிறது. பரந்த இவ்வுலகில் எல்லாமும் அவரது மகத்துவமான வடிவமைப்பின்படியே துல்லியமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. எல்லாமுமே அவரது தெய்வீக திட்டத்திற்கேற்பவே உண்டாயிருக்கின்றன. மனிதனின் உடலைப் பாருங்கள்; எவ்வளவு ஆச்சரியமானவிதத்தில் அது செயல்படுகிறது! நோய்த்தொற்று ஏற்பட்டுவிட்டால், உடனே எதிர் உயிரிகள் உடலெங்கும் உருவாகி அத்தொற்றை அழித்துவிடுகிறது. படைப்பில் விளங்கும் ஆண்டவரின் ஞானத்தை நாம் காணும் பலவிதங்களில் இதுவும் ஒன்று. நம் உடல், உண்மையிலேயே வித்தியாசமான, ஆச்சரியமான, பாக்கியமான படைப்பாகும். அவரே உங்களை படைத்திருப்பதால், உங்களைப் படைத்த அவரது கரங்களில் உங்கள் வாழ்க்கையை தைரியமாய் ஒப்படைத்திடுங்கள்.
1. அவரை சேவிக்கும்படியாக நம்மை சிருஷ்டித்துள்ளார்: அவர் ஏன் நம்மை சிருஷ்டித்தார்? அவரை சேவிப்பதற்காகவே சிருஷ்டித்துள்ளார். "நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது" என்று வேதம் கூறுகிறது (நெகேமியா 9:6). அவரால் சிருஷ்டிக்கப்பட்டவை யாவற்றையும் அவரே காக்கிறார்; அவரது மகிமையை வெளிப்படுத்த அவை இருக்கின்றன. ஆகவே, அவருக்கு முன்பு நாம் பணிந்து, அவரை தொழுதுகொள்ளுவோம்.
2. நாம் வாழ்வதற்காகவே அவர் சகலவற்றையும் சிருஷ்டித்துள்ளார்: மனுக்குலம் இவ்வுலகில் வாழ்வதற்குத் தேவையான யாவற்றையும் ஆண்டவர் படைத்துள்ளார். அவர் எவ்விதம் இவ்வுலகைப் படைத்து, அதனுள் வெளிச்சத்தைக் கொண்டு வந்தார் என்று வேதம் விவரிக்கிறது (ஆதியாகமம் 1:1-4). அவர் பூமியையும், மனிதன் அதில் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். கர்த்தர், நம் எதிர்காலத்திற்கு நம்பிக்கையுள்ள ஒரு நினைவை வைத்திருக்கிறார் (எரேமியா 29:11). உங்களுக்கு ஓர் எதிர்காலம் இருந்தேயாக வேண்டும். தீமை உங்களைத் தொடக்கூடாது. இதற்காகவே, ஆண்டவர், தைரியமாயிருக்கும்படியும், அவரது நினைவை நம்பும்படியும் உங்களை அழைக்கிறார்.
3. ஒரு நோக்கத்துடன் உங்களை சிருஷ்டித்துள்ளார்: கர்த்தர், ஒவ்வொரு மனுஷனையும் ஒரு நோக்கத்துடன் சிருஷ்டித்துள்ளார். ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும், எவற்றைச் செய்யவேண்டும், எப்படி தம் ஜீவனால் நிறைந்திருக்கவேண்டும், பிறருக்கு எப்படி ஜீவனை கொண்டு வரவேண்டும் என்றெல்லாம் அவர் தீர்மானித்திருக்கிறார். இந்த உலகில் நீங்கள் வாழ்வதற்கு ஒரு நோக்கமுண்டு. தேவனுடைய நோக்கமும் அவருடைய திட்டமும் நிறைவேற்றப்படவேண்டும். ஆகவே, உங்களை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுங்கள். அவர் நம்மை தம் சாயலாகவே சிருஷ்டித்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (ஆதியாகமம் 1:27). தம் சாயலையும் சிந்தையையும் இந்த உலகிற்கு வெளிக்காட்டுவதற்கே அவர் உங்களைச் சிருஷ்டித்துள்ளார். "கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்" என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 16:4).
4. பூமியை சுதந்தரமாக சிருஷ்டித்தார்: கர்த்தர், மனுஷனை சிருஷ்டித்து அவனை பூமியில் வைத்தார்; பூமியை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். அதற்காகவே அவர் உலகங்களை குமாரன் வாயிலாக உருவாக்கியதாக வேதத்தில் வாசிக்கிறோம் (எபிரெயர் 1:2). "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலிப்பியர் 2:10, 11) என்று வேதம் கூறுகிறது. ஆண்டவர் அந்த அருமையான நாமத்தை, நமக்குத் தந்து, இவ்வுலகில் அவரது ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள வழியை உண்டுபண்ணியிருக்கிறார். "சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது" (ரோமர் 11:36) என்றும் வேதம் கூறுகிறது. அவர் யாவற்றையும் படைத்துள்ளார்; உங்கள் வாழ்க்கையும் அவரது தெய்வீக நோக்கத்தில் ஓர் அங்கமாயிருக்கிறது. ஆகவே, உங்களை முழுமையாக அவருக்கு ஒப்படைத்திடுங்கள்; அவரது எண்ணத்தை நம்புங்கள்; அவரை தொழுதுகொள்ளுங்கள்; அவர் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியுள்ள ஆசீர்வாதத்திலும் நோக்கத்திலும் தைரியமாக நடந்திடுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நேர்த்தியான நோக்கத்துடன் என்னை உருவாக்கியதற்காகவும், ஆசீர்வாதமாக திகழச் செய்திருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் உம்மால் சிருஷ்டிக்கப்பட்டேன் என்பதையும் என் ஜீவன் உம் பார்வைக்கு அருமையானது என்பதையும் மறந்துபோகாதிருக்க எனக்கு உதவும். உம்மை ஆராதிக்கவும், உம் எண்ணங்களை நம்பவும், நீர் எனக்கு அளித்திருக்கும் நோக்கத்தில் தைரியமாக நடக்கவும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். என் குடும்பத்தின், வேலையின், ஊழியத்தின், பரிசுத்தத்தின், கடும் பிரயாசத்தின், உத்தமத்தின் பலன்கள் பெருகுவதாக. உம் ஆசீர்வாதங்களை அழித்துப்போட பார்க்கும் எல்லா தீமையிலிருந்தும் என்னை பாதுகாத்தருளும். உம் சித்தத்தின்படியே எல்லா வாசலையும் திறந்து, உம் ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் பெருகச் செய்யும். என்னை முழுமையாக உம்மிடம் ஒப்படைக்கவும், உம் நாமத்தை மகிமைப்படுத்தவும் எனக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


