"சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்" (சங்கீதம் 140:12) என்பதே இன்றைய வாக்குத்தத்த வசனமாகும். தேவன், நியாயஞ்செய்கிற தேவனாயிருக்கிறார். அவர் நீதியுள்ள தேவன். வேதம், "கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்" (ஏசாயா 30:18). ஆம், அவர் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையில், உங்கள் குடும்பத்தில், சமுதாயத்தில் நியாயஞ்செய்வார். பயப்படாதிருங்கள். தேவன், நியாயஞ்செய்வார். அவர் உங்களை களிகூரும்படி செய்து, உங்களுக்குக் கனத்தைத் தருவார்.

அவர் யாருக்கு நியாயஞ்செய்வார்? தம் பரிசுத்தவான்களுக்கு அவர் நியாயஞ்செய்வார். வேதம், "கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்" (சங்கீதம் 37:28) என்று கூறுகிறது. கர்த்தர், தம் பரிசுத்தவான்களுக்கு, அவரது சித்தத்தை நிறைவேற்றுகிற பக்தர்களுக்கு நியாயம் செய்ய விரும்புகிறார். நீங்கள் தேவனின் பரிசுத்தவானாக இருக்கிறீர்கள்; ஒரு பரிசுத்தவானாக அவரது சித்தத்தை செய்து உங்கள் வாழ்வில் அவரைச் சுமக்கிறபடியினால் அவர் உங்களை நேசிக்கிறார்.

தம் பரிசுத்தவான்களை தேவன் எப்படிக் காப்பாற்றுகிறார்?
வேதம், "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்." என்று கூறுகிறது (எரேமியா 17:7,8). நீங்கள் தேவனுடைய பரிசுத்தவானாக, அவருடைய ஆலயமாக உங்கள் சரீரத்தில் இயேசுவை சுமக்கிறீர்களா? தேவன் உபத்திரவத்தின் காலத்தில் உங்களை காத்து, பெரிய பஞ்சங்களின் மத்தியில் உங்களைச் செழிக்கப்பண்ணுவார். இன்றைக்கு இயேசுவின் நாமத்தில் தேவனுடைய நியாயம் உங்களுக்கு வருகிறது.

ஜெபம்:
பரம தகப்பனே, நியாயத்தின், நீதியின் தேவனாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்று என் ஜீவனையும், என் குடும்பத்தையும், எதிர்காலத்தையும் உம் அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் பேச முடியாத, போரிட முடியாத இடங்களில் நீர் எனக்கு நியாயஞ்செய்யும். உபத்திரவ காலத்தில் உம் பரிசுத்தவானாகிய என்னை காத்துக்கொள்ளும். என் வாழ்க்கை கனிநிறைந்ததாகவும் பயமில்லாததாகவும் இருப்பதாக. ஆண்டவரே, தயவாய் என் வாழ்வில் கனத்தையும் சமாதானத்தையும் களிகூருதலையும் அளிப்பீராக. இன்று உம் நியாயத்தைப் பெற்றுக்கொள்கிறேனென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.