அன்பானவர்களே, தேவன் உங்களைக் குணப்படுத்த விரும்புகிறார். இயேசு கிறிஸ்து சுகப்படுத்துகிறவர்; அவர் சமாதானப் பிரபு; பாதுகாப்பை அருளும் நித்தியப் பிதா. ஆகவேதான் அவர், "இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்" (எரேமியா 33:6) என்று வாக்குக்கொடுக்கிறார். இது தேவன் உங்களுக்கு அருளும் வாக்குத்தத்தமாகும். இன்று, எல்லாவற்றிலும் வியாதி உங்களைப் பிடித்திருக்கலாம்; பொருளாதாரத்தில், ஆவியில், மனதில், குடும்பத்தில் நீங்கள் வியாதிப்பட்டிருக்கலாம். உங்கள் பெயர் வியாதிப்பட்டு, பாதிக்கப்பட்டிருக்கலாம். எல்லாமும் வியாதியாயிருக்கலாம்; ஆனால், தேவன் உங்களைச் சுகப்படுத்தி உயர்த்துவார். வேதம், "நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்" (எரேமியா 30:17) என்று கூறுகிறது. தேவன்தாமே இப்போதே இயேசுவின் நாமத்தில் உங்கள் காயங்களை ஆற்றுவாராக. பயப்படாதிருங்கள். நீங்கள் குணமாவீர்கள். எழுந்திருந்து, இயேசுவின் நாமத்தில் சுகம் பெறுங்கள். இயேசு, "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும்... என்னை அனுப்பினார், " என்று கூறுகிறார் (ஏசாயா 61:1; லூக்கா 4:18). வேதம், "நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்" என்று கூறுகிறது (அப்போஸ்தலர் 10:38). கர்த்தருடைய ஆவி எங்கே உண்டோ அங்கே விடுதலையுமுண்டு. இன்று, பரிசுத்த ஆவியானவர் உங்களை அளவில்லாமல் நிரப்பவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நீங்கள் புது மனுஷனாவீர்கள் / புது மனுஷியாவீர்கள். சுகம் உண்டாகட்டும்.

வேதம், "வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்" என்று கூறுகிறது (மத்தேயு 10:8). இயேசு, தேவனுடைய ஆவியை உங்களுக்குத் தருகிறேன் என்று கூறுகிறார். உட்கார்ந்து, முறுமுறுத்துக்கொண்டு பாவத்தில் வாழ்ந்து காலத்தை வீணாக்காதீர்கள். எழுந்திருந்து வியாதியுற்றோரை குணப்படுத்துங்கள். இயேசு அழைக்கிறார் ஊழியத்தில் பங்காளராகுங்கள். வீட்டிலிருந்தே ஜெப கோபுர அழைப்புகளை ஏற்று வியாதிப்பட்டவர்களுக்கு ஜெபிக்கும்படி ஜெப வீரராக / ஜெப வீராங்கனையாக இணைந்திடுங்கள்.    எந்த மொழியிலும் நீங்கள் ஜெபிக்கலாம். இயேசு குணப்படுத்துவார். தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் ஜெபிக்கும்போது, வேதம், "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" என்று கூறுகிறது (மாற்கு 16:17). இந்த கிருபையை தேவன் உங்களுக்குத் தந்தருள்வாராக.

இரண்டாவது, ஆண்டவர் உங்களை சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படி செய்வார். வேதம், "அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்" என்று கூறுகிறது (சங்கீதம் 147:13,14). அலைச்சலோ, கலக்கமோ அல்லது கெட்ட செய்தியோ, பிசாசோ உங்கள் வீட்டினுள் நுழையமுடியாது. அவர் உசிதமான ஆசீர்வாதங்களை உங்களுக்குத் தருவார். இயேசுவின் நாமத்தினால் இந்த ஆசீர்வாதத்தை உங்கள்மேல் வைக்கிறேன். தேவன் யாருக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கிறார்? வேதம், "தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்" (சங்கீதம் 147:11) என்று கூறுகிறது. நீங்கள் கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் அவர் உங்கள்மேல் பிரியப்படுவார்; அவருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே என் பரிகாரியும் என் சமாதானப் பிரபுமாயிருக்கிறீர். என் காயங்களைக் குணமாக்கி, என்னை எழுப்புவீராக. உம் பரிசுத்த ஆவியானவர் அளவின்றி என்னை நிரப்பட்டும். எல்லா ஒடுக்குதலிலிருந்தும் என்னை விடுவித்தருளும். என் வீட்டினுள் சமாதானத்தை அருளும்; என் குடும்பத்தை பாதுகாத்தருளும். என் இருதயத்திலிருந்து எல்லா பயத்தையும் கலக்கத்தையும் அகற்றும். உமக்குப் பயப்படவும், உம் கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கவும் எனக்கு உதவும் என்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.