அன்பானவர்களே, ஆண்டவர் அவரது பிள்ளைகளாகிய நம்மோடு எப்போதும் இருக்கிறார். இன்றும் நம்மை தேடுகிறார். "வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்" (ஏசாயா 30:21) என்ற அவரது வார்த்தைகளை இப்போது தியானிக்கலாம். இப்படி தேவனுடைய சத்தத்தைக் கேட்பது எவ்வளவு அற்புதமானது? நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்பீர்கள்; அதற்குச் செவிகொடுப்பதால் களிகூருவீர்கள்; அதன் வாயிலாக அவரது திட்டங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். அன்பானவர்களே, தேவன் இன்று அந்தக் கிருபையை உங்களுக்குத் தருகிறார்.

வேதாகமத்தில், எலியா தீர்க்கதரிசி இருந்த தேசத்தில் பஞ்சமுண்டானது. எங்கும் பஞ்சம்! உணவில்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். அதன் நடுவில் தேவன் எலியாவிடம், "நீ அந்த விதவையை சந்தி. அவள் வீட்டுக்குப் போ. அங்கே நான் உன்னை போஷிப்பேன்," என்று கூறினார். ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! அவன் அந்த வீட்டுக்குப் போனபோது, அந்த விதவையிடம் கடைசி உணவு இருப்பதையும், அதை சாப்பிட்டுவிட்டு சாக இருப்பதையும் காண்கிறான். அதன் நடுவில், தேவன், தனக்கும் உணவு கொடுக்கும்படி கேட்குமாறு அவனை வழிநடத்தினார். கர்த்தர், தன் ஊழியனாகிய எலியாவை, அந்த விதவையின் வாயிலாக போஷிக்க விரும்பினார்; அதன் வாயிலாக, அந்த விதவைக்கும் ஓர் அற்புதத்தைச் செய்ய நினைத்தார்.

அவளும் தேவ ஊழியனை விசுவாசித்து, தன் கடைசி பங்கு உணவை கொடுத்தாள். உணவு குறையாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். தனக்கும் தன் மகனுக்குமாக அவள் வைத்திருந்த மாவும் எண்ணெயும் குறையாமல் இருந்தன. கர்த்தர், அவளுக்கு எவ்வளவு அற்புதமானதைச் செய்தார். நமக்கும் வியாபாரத்தில் பஞ்சகாலம் நேரிடலாம். வணிகம் செய்யும் அனைவரும் பாடனுபவிக்கலாம்; நிலத்தில் குறைவை அனுபவிக்கலாம். ஆனால், உங்களுக்கும் எனக்கும், "வழி இதுவே, இதில் நடவுங்கள்," என்ற குரல் கேட்கும். கர்த்தர், எலியாவை அந்த விதவையிடம் நடத்தியதுபோல, உங்களுக்கும் எனக்கும் அவர் ஒரு விதவையை காண்பிக்கக் கூடும். நம்மை எதிர்பாராத சூழ்நிலைக்குள் நடத்தி, அவர்களைப் போஷிக்கப்பண்ணுவார்; அவர்களுக்கு நம்மை ஆசீர்வாதமாக வைப்பார். அது ஆச்சரியமாயிருக்கும். பெரிய பஞ்சம், குறைவு இவற்றின் மத்தியில் அப்படியே அவரது சத்தம் நம்மை வழிநடத்தும்.

ஜெபம்:
அன்பு தகப்பனே, உம் சத்தத்தைத் தெளிவாகக் கேட்கும்படி என் காதுகளைத் திறந்தருளும். குழப்பமான தருணங்களில் உம் வழிகாட்டுதலை அறிந்துகொள்ள எனக்கு உதவும். எனக்குப் புரியாதபோதும் அதைப் பின்பற்றுவதற்கு எனக்கு விசுவாசத்தை தாரும். உம்முடைய பரிபூரண சித்தத்திற்குள் என்னை நடத்தும்; அடிதோறும் எனக்கு வழிகாட்டும். குறைவுகளின் நேரத்தில் உம் தெய்வீக அருட்கொடையை எனக்குக் காண்பித்தருளும். நீர் என்னை ஆசீர்வதித்திருப்பதுபோல, மற்றவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணும். நீர் காட்டும் வழியில் நடக்கத் தீர்மானித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.