எனக்கு அன்பானவர்களே, புதிய நிதியாண்டுக்குள்ளும், இந்த ஆண்டில் ஒரு புதிய மாதத்திற்குள்ளும் அடியெடுத்துவைக்கும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. இன்று உங்கள் வீட்டை, உங்கள் வாழ்க்கையை எழுந்து நிற்கச் செய்வது எப்படி என்பதைக் குறித்து உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கான ஒரே வழி, "கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" (சங்கீதம் 127:1) என்று வேதத்தில் காணப்படுகிறது. அநேகர் தங்கள் வீட்டை, குடும்பத்தை, வாழ்க்கையை தாங்களாகவே கட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், கர்த்தர் அவற்றைக் கட்டாவிட்டால், எல்லாமும் வீணாயிருக்கும். "எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்" என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது (எபிரெயர் 3:4). இம்மாதத்தில், தேவன் உங்களுக்காக எல்லாவற்றையும், உடைந்துபோனவற்றை, நொறுங்கியவற்றை, அழிக்கப்பட்டவற்றை திரும்ப கட்டுவார்; உங்கள் குடும்ப வாழ்க்கையை, ஆரோக்கியத்தை, வேலையை, வெற்றியை, அபிஷேகத்தை, செழிப்பை, சமாதானத்தை மீண்டும் உருவாக்குவார்; அற்புதங்களுக்கான கிருபையை திரும்ப தருவார். இயேசுதாமே உங்கள் வாழ்க்கையைக் கட்டுவார். ஆகவே, தேவனுக்கு உங்கள் இருதயத்தைத் திறந்திடுங்கள். அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அவரது பங்காளராயிருக்கிறீர்கள். அவர் உங்கள் தகப்பனாகவும், உங்கள் தேவனாகவும் இருக்கிறார்; அவர் எல்லாவற்றையும் உங்களுக்காகக் கட்டுவார். தேவன், ஒரு வீட்டைக் கட்டும்போது, சமாதானமுள்ள வீடாகக் கட்டுகிறார். வேதம், "என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்," (ஏசாயா 32:18)என்று கூறுகிறது. உங்கள் வாழ்வில் எல்லாமும் சமாதானமாக, பாதுகாப்பாக, இளைப்பாறுதலாக இருக்கும். இயேசு, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்," என்று கூறியிருக்கிறார். இங்கே இளைப்பாறுதல் என்பதற்கு, ஆண்டவர் உங்களுக்கான யாவற்றையும் செய்து முடிப்பார் என்றும், தம் சித்தத்தின்படி எல்லாவற்றையும் ஒழுங்குபண்ணுவதால் நீங்கள் அவரது ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழலாம் என்றும் அர்த்தமாகும். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 147:14). ஆதி விசுவாசிகள், சமாதானம் பெற்று, பெலப்படுத்தப்பட்டு, பக்திவிருத்தியடைந்து, பரிசுத்த ஆவியின் ஆறுதலையடைந்து பெருகினர் (அப்போஸ்தலர் 9:31). இதுதான் சமாதானம், செழிப்பு, பாதுகாப்பு, விருத்தியாகும். நீங்கள் நீதியாய் வாழ்ந்து தேவனுடைய சித்தத்தின்படி நடந்தால் உங்களுக்கும் இவற்றை தந்தருளுவார்.
இரண்டாவதாக, தேவன் உங்கள் இல்லத்தை இரட்சிப்பு நிறைந்த வீடாக கட்டியெழுப்புவார். நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், நீங்களும் உங்கள் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று வேதம் வாக்குக்கொடுக்கிறது (அப்போஸ்தலர் 16:31). உங்கள் வீட்டார், இயேசுவை ஏற்றுக்கொண்டு, பாவத்திலிருந்து விடுதலை பெற்று, நீதியாய் வாழ்ந்தால், பரலோகத்துடன் இணைக்கப்படுவார்கள். அவிசுவாசியான கணவனோ, மனைவியோ மறுரூபப்படுத்தும் பரிசுத்த ஆவியினால், விசுவாசியான மனைவி அல்லது கணவன் வாயிலாக பரிசுத்தம் பண்ணப்படுவார்கள் (1 கொரிந்தியர் 7:14). கணவனும் மனைவியும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும்போது அவர்கள் பிள்ளைகளும் பக்தியுள்ளவர்களாவார்கள் (மல்கியா 2:14). பின்வாங்கிப்போகிறவர்களும், நான் அவர்களைக் குணப்படுத்தி, மீண்டும் அழைத்து வருவேன் என்று தேவன் சொல்லியிருப்பதற்கேற்ப மீட்கப்படுவார்கள் (எரேமியா 3:22).
மூன்றாவதாக, உங்கள் இல்லம், தேவனுக்கு ஊழியம் செய்கிற வீடாகும். வேதம், "இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்" (ஏசாயா 8:18) என்று கூறுகிறது. தேவனுடைய அன்பு, உங்கள் குடும்பம் வாயிலாக, உங்கள் வாயிலாக இயேசுவை அறிந்துகொள்கிறவர்கள் மூலமாக புரண்டு பாயும். மார்த்தாள், மரியாள், லாசருவின் வீடுபோல, உங்கள் வீடும் மற்றவர்களை வரவேற்பதாக விளங்கும். மார்த்தாள் பணிவிடை செய்தாள்; மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தாள்; லாசரு, மரணமடைந்து எழுப்பப்பட்டபோது ஓர் அற்புதத்தை அடைந்தான். இதன்காரணமாக, மக்கள் எவ்விடத்திலுமிருந்தும் தேவனுடைய வல்லமையை காண வந்தனர். அதேவண்ணமாக, உங்கள் வாழ்வில் இயேசு செய்தவற்றை சாட்சியாக பகிர்ந்துகொள்ளும்போது, மக்கள் அவரிடமாய் இழுக்கப்படுவார்கள்; தேவன் உங்கள் குடும்பத்தைக் கனப்படுத்துவார்.
நான்காவதாக, உங்கள் வீடு ஸ்திரமாக நிலைப்படுத்தப்படும். வெள்ளம் வரலாம்; பெருமழை பெய்யலாம்; காற்று வீசலாம்; ஆனால், உங்கள் வீடு என்றென்றும் நிலைத்திருக்கும். தேவனுடைய வார்த்தைக்கு நீங்கள் செவிகொடுத்து கீழ்ப்படியும்போது, உங்கள் வாழ்க்கை நிலைத்திருக்கும். இயேசுவே கன்மலையாயிருக்கிறார் (1 கொரிந்தியர் 10:4). அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் கட்டப்பட்ட அஸ்திபாரத்தின்மேல் நீங்கள் கட்டப்படுவீர்கள் (எபேசியர் 2:20). உங்கள் குடும்பத்தில் ஒருமனம் காணப்படும். வேதம் கூறுகிறபடி, மனைவி, கணவனுக்குக் கீழ்ப்படிவார்கள்; கணவன், மனைவியை நேசிப்பான். இருவரும் ஒருமனமாயும் ஒரே சரீரமாயும் வாழ்வார்கள் (எபேசியர் 5:22,23).
நிறைவாக, உங்கள் வீடு ஆசீர்வதிக்கப்பட்ட வீடாக விளங்கும். வேதம், "கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்" (சங்கீதம் 115:14) என்று கூறுகிறது. "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்," என்று நினைவுப்படுத்துகிறது (மத்தேயு 6:33). நீங்கள் கொடுக்கும்போது, உங்கள் வீடு பாக்கியம் பெறும். வேதம், 'கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்' என்று கூறுகிறது (லூக்கா 6:38). தேவனுடைய ஊழியத்திற்குக் கொடுங்கள் (மல்கியா 3:10); தேவனுடைய ஊழியர்களுக்குக் கொடுங்கள் (சங்கீதம் 16:2,3); உங்கள் உற்றாரை பராமரித்திடுங்கள் (1 தீமோத்தேயு 5:8); ஏழைகளுக்குக் கரிசனை காட்டுங்கள் (ஏசாயா 58:7,8). இப்படிச் செய்யும்போது, தேவன் உங்கள் வீட்டைப் பெலப்படுத்தி ஆசீர்வதிப்பார். அன்பானவர்களே, தேவன்தாமே உங்கள் இல்லத்தை தம் சமாதானத்தாலும், பெலத்தாலும், இரட்சிப்பாலும், அவருக்கும் அவரது மக்களுக்கும் செய்யும் ஊழியத்தினிமித்தமும் பரிபூரண ஆசீர்வாதத்தைத் தந்து ஆசீர்வதிப்பாராக. அவர்தாமே உங்கள் குடும்பத்தைக் கட்டியெழுப்பி, உங்கள் வாழ்க்கையை என்றென்றும் இருக்கும்படி நிலைப்படுத்துவாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, என் இல்லத்தையும் என் வாழ்க்கையையும் உம் அன்பின் கரங்களுக்குள் ஒப்படைக்கிறேன். நீரே எனக்கிருக்கும் எல்லாவற்றுக்கும் அஸ்திபாரமாகவும், கட்டுகிறவராகவும் விளங்குவீராக. முறிந்த உறவுகள் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி, என் குடும்பத்துக்குள் சமாதானத்தை நிலைப்படுத்துவீராக. உம் இரட்சிப்பு எல்லா இருதயத்தையும் நிரப்பி, உம்மிடம் கிட்டிச் சேர்ப்பதாக. ஒருமித்து உம்மை சேவிக்கவும் ஒருமனதிலும் அன்பிலும் நடக்கவும் எங்களுக்குக் கற்றுத் தந்தருளும். வாழ்வில் எந்தப் புயல் வீசினாலும் குடும்பமாக நாங்கள் ஸ்திரமாக நிற்கும்படி எங்களைப் பெலப்படுத்தியருளும். உம்முடைய பரிபூரண திட்டத்தை நம்பவும் உம்முடைய ராஜ்யத்தை முதலாவதாக தேடவும் எங்களுக்கு உதவும். எங்கள் வீடு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானதாகவும், உம் சமுகம் தங்கியிருக்கும் இடமாகவும் விளங்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


