அன்பானவர்களே, "குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்" (நீதிமொழிகள் 21:31) என்ற வசனத்தை வாக்குத்தத்தமாக தியானிப்போம். இது மிகவும் அறிமுகமான வசனமாகும். இந்த வசனத்தில் இரண்டு காரியங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. முதலாவது, குதிரை யுத்தத்திற்கு ஆயத்தப்படுத்தப்படுகிறது. ஆனால் ஜெயம், கர்த்தரிடம் உள்ளது. பலவேளைகளில் நாம் முதல் பகுதியை மறந்துவிடுகிறோம். நாம் எப்போதும், "ஆம், கர்த்தர் நமக்கு வெற்றியைத் தருவார், என் வெற்றிக்கு அவர் உதவுவார்," என்று கூறுகிறோம். ஆனால், நம் பக்கம் நாம் குதிரையை யுத்தத்துக்கு ஆயத்தப்படுத்தவேண்டும். "உன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பானதைச் செய்; மற்றதை கடவுளின் கையில் விட்டு விடு," என்பது எனக்கு விருப்பமான ஒரு பழமொழி. ஆகவே, இன்று உங்கள் தேர்வுக்காக, காட்சிப்படுத்தலுக்காக (presentation) அல்லது முக்கியமான நேர்முகத் தேர்வுக்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருப்பீர்களானால், உங்களால் இயன்ற அளவு நன்கு ஆயத்தப்படுங்கள்; தேவன், மீதியானவற்றை பொறுப்பெடுத்துக்கொள்வார்.

உங்களால் சிறந்ததை நீங்கள் செய்த பிறகு, எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் விட்டுவிடவேண்டும். வேதம், நாம் சிறப்பாக செய்தாலும், கர்த்தரின் ஆசீர்வாதம் இல்லாமல் நமக்கு வெற்றி கிடைக்காது என்று கூறுகிறது (சகரியா 4:6). ஆகவேதான், ஒவ்வொரு முறையும் ஆண்டவரை தேடி அவரது ஆசீர்வாதத்தை கேட்பது முக்கியமாகும். சிலவேளைகளில் நாம் நம் பெலன்மேல், ஞானத்தின்மேல் மிகவும் கவனம் செலுத்துவோம்; நாமாகவே வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைப்போம். ஆனால், அது சாத்தியமற்றது. ஆண்டவர் நம்மோடு இல்லாவிட்டால், நம்மால் வெற்றி பெற இயலாது. ஆகவே, இன்றே உங்கள் திட்டங்களை ஆண்டவரிடம் அர்ப்பணியுங்கள். அவர் எப்படி படிப்பது என்று கூறுவார். எந்தக் கேள்விகளைப் படிக்கவேண்டும் என்பதைக்கூட சொல்லுவார். நேர்முகத் தேர்வில் எப்படி பதிலளிக்கவேண்டும் என்று கூறுவார்.

பள்ளி படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்காக ஒரு நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டது எனக்கு நினைவில் உள்ளது. அது கேள்வி- பதில் (viva) முறையிலான தேர்வு. அநேக மருத்துவர்களும், பேராசிரியர்களும் எனக்கு முன்னே உட்கார்ந்திருந்தார்கள். ஏறக்குறைய 300 மாணவ மாணவியரும் அந்த வேளையில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அநேக கேள்விகளைக் கேட்டனர். ஆனால், ஒரு கேள்விக்கு நான் மாத்திரமே பதில் கூறினேன். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். "ஓ, ஷில்பா இதற்கு பதில் சொல்லிவிட்டார்கள். வேறு யாராலும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை," என்றனர். ஆண்டவர் என்னோடு இருந்து, எனக்கு உதவி செய்ததே அதற்குக் காரணம். அது மிகவும் அடிப்படையான ஒரு கேள்விதான். ஆனால், அந்தச் சூழ்நிலையில் (viva) எல்லோரும் பயந்து, அதற்கான பதிலை மறந்துபோனோம். ஆனால், இன்று ஆண்டவர் வெற்றி பெற உங்களுக்கு உதவுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் திட்டத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உண்மையாகவும் கவனமாகவும் ஆயத்தப்படவும் உழைக்கவும் எனக்கு உதவி செய்யும். என் இருதயத்திலிருந்து எல்லா பயத்தையும் குழப்பத்தையும் எடுத்துப்போடும். நான் என் பெலனை நம்பாமல், உம் சமுகத்தையே நம்புகிறேன். என்னுடைய முயற்சிகளை ஆசீர்வதித்து வெற்றிக்கு என்னை அழைத்துச்செல்லும். ஆண்டவரே, பலன்களை உம்மிடம் விட்டுவிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.