அருமையானவர்களே, கர்த்தர் உங்களை அழைத்து, தம் ஆசாரியர்களாக இருக்கும்படி அபிஷேகித்திருக்கிறார். நீங்கள் எஞ்ஜினியராகவோ, அறிவியல் அறிஞராகவோ, அதிகாரியாகவோ, மாணவராகவோ, வியாபாரியாகவோ, பணியாளராகவோ, இல்லத்தரசியாகவோ இருக்கலாம்; கர்த்தர், "நீயே என் ஆசாரியன்" என்று கூறுகிறார். நீங்கள் ஆசாரிய ராஜ்யமாகவும் பரிசுத்த ஜாதியாகவும் இருக்கிறீர்கள் என்று வேதம் கூறுகிறது (யாத்திராகமம் 19:6). உங்கள் குடும்பத்தில் அனைவரும் கர்த்தரின் ஆசாரியராக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, தைரியமாக எழும்பி, அவரது சித்தத்தை செய்திடுங்கள். உங்கள் ஜெபங்களைக் கேட்கும் தேவன்தாமே தேசத்திற்கு இரட்சிப்பை அளிப்பார்.
ஆசாரியர்களாக, நாம் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாக, ராஜரீக ஆசாரியக்கூட்டமாக, தேவனுடைய பலத்த கிரியைகளையும் துதியையும் சொல்லிவருவதற்கு அழைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம் (1 பேதுரு 2:9). கர்த்தர், தம் சொந்த இரத்தத்தால் நம்மை கிரயத்துக்கு வாங்கி, தேசத்தையும் குடும்பங்களையும் கண்காணிக்கிறவர்களாக்கியுள்ளார் (அப்போஸ்தலர் 20:28). மற்றவர்களுக்காக பரிந்துபேசுவதே ஆசாரியனின் பொறுப்பாகும். இயேசு, அவருடைய நாமத்தினால் எதைக்கேட்டாலும் அதைச் செய்வதாக கூறியிருக்கிறார் (யோவான் 14:13). ஆகவே, இன்று, தேவன் உங்கள் ஜெபத்தைக் கேட்டு தேசத்தையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் என்று விசுவாசித்து, ஜெபிப்பதற்கு, உங்களை அர்ப்பணித்திடுங்கள்.
இரண்டாவதாக, கர்த்தர் உங்களை பரிசுத்த ஜாதியாக மறுரூபமாக்கி, வர்த்திக்கப்பண்ணுகிறார். அவர், "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்," (ஏசாயா 60:22) என்று வாக்குப்பண்ணுகிறார். அவரது வெளிச்சம் உங்கள்மேல் பிரகாசிக்கும்; ஜாதிகள் உங்கள் வெளிச்சத்திற்கு வருவதோடு, ராஜாக்களும் உதிக்கிற ஒளியை நோக்கி வருவார்கள் (ஏசாயா 60:3,4). நீங்கள் பிறருக்காக ஜெபிக்கும்போது, தேவனுடைய வெளிச்சம் உங்கள் வாயிலாக பிரகாசிக்கும். ஜனங்கள் உங்களைத் தேடுவார்கள்; வேலை, பதவி உயர்வு, ஒரு வீடு எல்லாம் வரும்; ராஜாக்களும் உங்களிடம் வருவார்கள். நீங்கள் அவர்களுக்கு தேவ வல்லமையை வெளிப்படுத்துவீர்கள்; உங்கள் ஜெபத்தின் வாயிலாக அற்புதங்கள் நடக்கும். கர்த்தர், உங்களை ஆயிரமடங்காய் பெருகப்பண்ணுவார்; இந்த ஆசீர்வாதம் உங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தொடரும். உங்கள் கொள்ளுப் பேரப்பிள்ளைகளும்கூட ஜெபிக்கிறவர்களாவார்கள். தேவன், உங்கள் குடும்பத்தினர் அனைவருமே, தம் நன்மையை அறிவிக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆசாரியர்களாகவேண்டுமென்று விரும்புகிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை அழைப்பதற்காகவும் உம் ஆசாரியனாக அபிஷேகிப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் குடும்பத்துக்காகவும், தேசத்துக்காகவும் உண்மையாக ஜெபிக்கவும், உம் சித்தத்தை தைரியமாக நடப்பிக்கவும் எனக்கு உதவி செய்யும். உம் வெளிச்சம் என் வாயிலாக பிரகாசிக்கட்டும்; அநேகருக்கு ஆசீர்வாதத்தை, இரட்சிப்பை, அற்புதங்களைக் கொண்டு வரட்டும். என்னை பரிசுத்தமானதும் ஆசீர்வதிக்கப்பட்டதுமான சந்ததியாக்கும்; என்னையும் என் குடும்பத்தையும் ஆயிரமடங்காய் பெருகப்பண்ணும். என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஜெபிக்கிறவர்களாகவும் உம் நன்மையை பிரசித்தப்படுத்துகிறவர்களாகவும் மாறுவார்களாக. நான், ராஜாக்கள் முன்பாக இரந்து கேட்கிறவனாக அல்ல; மற்றவர்களை ஆசீர்வதிக்கிறவனாக நிற்கும்படி செய்யும். உம் வரங்களும் அபிஷேகமும் என் வாழ்விலும் குடும்பத்திலும் வல்லமையாய் செயல்படவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


