அன்பானவர்களே, இன்று, "உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்" (உபாகமம் 20:4) என்று வேதம் கூறுகிறது. தேவனே நம்மோடு வந்து, நம்மை ஜெயத்திற்கு நேராக வழிநடத்துகிறார். ஆனால், தேவன் எப்படி நம்முடன் வந்து நமக்காக யுத்தம் பண்ணுகிறார்? யோபு, பேதுரு ஆகியோரின் வாழ்வைப் பார்க்கும்போது, தேவன் எப்படி சத்துருவின் யோசனைகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார் என்று அறிகிறோம். சாத்தான், அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் அழிக்கும்படி போராடினான். தேவன், சாத்தான் எப்படி யோபை குற்றஞ்சாட்டி அவனை அழிக்க முயற்சித்தான் என்று வெளிப்படுத்தினார். அதேபோன்று, இயேசு, பேதுருவிடம், "இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்," என்று கூறினார். சாத்தான், பேதுருவை சோதிக்க அனுமதி கேட்டான். ஆனால், இயேசு அவனிடம், "உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்," என்று கூறுகிறார். பிசாசு, நம்மை அழிக்க முயற்சிக்கும்போது ஆண்டவர் எப்படி நமக்காக யுத்தம்பண்ணுகிறார்? இயேசு, நமக்காக தம் ஜீவனையே கொடுத்து, சிலுவையில் தம் விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தினார். அவர், சாத்தான் கொண்டு வரும் மரணத்தையும் அழிவையும் தன் மேல் ஏற்றுக்கொண்டார். தாம் சிலுவையில் மரித்ததின் வாயிலாக, அவர் பிசாசின் கிரியைகளை அழித்து, அவனுடைய வல்லமையிலிருந்து நம்மை விடுவித்தார். நமக்காக அவர் வெற்றி சிறந்தார்!

இயேசு சிந்திய இரத்தம் நமக்காக பேசுகிறது; தேவன் நமக்கு அருளியிருக்கும் பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆகவே, நாம் பிழைத்திருந்து, விசுவாசத்தில் உறுதியாக நிற்க முடியும். பேதுருவின் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கும், அவன் பெலப்படும்படிக்கும் இயேசு வேண்டிக்கொண்டார். அவ்வாறே, ஆண்டவர் நம்மை அனுதினமும் பெலப்படுத்துகிறார். பூமிக்குரிய நம் போராட்டங்களில், நம் ஆத்துமாவே முக்கியம். சாத்தான் நம் ஆத்துமாக்களை பிரச்னைகளால், சிரமங்களால், போராட்டங்களால் அழிப்பதற்கு முயற்சிக்கிறான். ஆனால் இயேசு, நாம் அவருக்குச் சொந்தமானவர்களாக, விசுவாசத்தில் உறுதியாக இருக்கும்படி,  நம் ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கிறார்; யுத்தஞ்செய்கிறார். அவர் நம் பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார்; நமக்குச் சமாதானத்தை தருகிறார்; நம் ஆத்துமாக்களுக்கான யுத்தங்களில் ஜெயிக்கப் பண்ணுகிறார்.

உபத்திரவங்களின் நடுவிலும் உங்கள் ஆத்துமாவை இயேசுவுக்கு அர்ப்பணிக்கும்போது, தேவனால் உங்கள் பூமிக்குரிய போராட்டங்களை அனைத்தையும் பார்த்துக்கொள்ள முடியும். அவற்றை உடனடியாக தீர்த்திட அவர் வல்லவராயிருக்கிறார். ஆகவே, பூமிக்குரிய எல்லா போராட்டத்திலும், உங்கள் ஆத்துமாவின் நிலையே முக்கியம் என்பதை மறவாதிருங்கள். கவலைப்படாதிருங்கள்; மனந்தளராதிருங்கள்; தேவனை புறம்பே தள்ளாதிருங்கள்; அவரைக் குறித்து சலிப்படையாதிருங்கள். மாறாக, விசுவாசத்தில் உறுதியாக இருங்கள். தேவன் நமக்கென்று ஆயத்தம்பண்ணியுள்ள ஜெயத்தை இன்று பெற்றுக்கொள்ளுவோம். கர்த்தர், "அமர்ந்திரு. நான் உனக்காக யுத்தஞ்செய்வேன்," என்று கூறியிருக்கிறார். ஆண்டவர் இயேசுவே, இன்றும் எங்களுக்காக தொடர்ந்து யுத்தஞ்செய்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எங்களுக்காக போரிடுவதற்காகவும் எங்கள் ஆத்துமாக்களை காப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எங்கள் பிள்ளைகளுக்காக போரிட்டு, அவர்களை பாவத்திலிருந்து, தடைகளிலிருந்து, வியாதியிலிருந்து, உபத்திரவங்களிலிருந்து விடுவித்தருளும். சத்துருவின் சகல தாக்குதல்களிலுமிருந்தும் அவர்களை மீட்டருளும். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஆத்துமாக்கள் பிசாசினால் ஒடுக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட இடங்கொடாதிரும். விசுவாசத்தை பெலப்படுத்தி, எங்களை உமக்குச் சமீபமாக வைத்து, எல்லா போராட்டங்களின் வாயிலாகவும் உம்மை நேசித்து நம்ப உதவிடும். உம்முடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினால் நீர் எங்களுக்காக பெற்ற ஜெயத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாழ்வின் எப்பக்கமும் உம்முடைய அற்புதத்தையும் ஜெயத்தையும் பெற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.