எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15) என்ற வசனத்தை தியானிப்போம். அன்பானவர்களே, ஜீவனை இரட்சித்துக் கொள்வது எப்படி? இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்; தம் ஜீவனை பலியாக்கினார். வேதத்தில் நாம் பவுலைக் குறித்து வாசிக்கிறோம் (கலாத்தியர் 2:20). சவுலாக இருந்த அவன் தொடக்கத்தில் தவறான காரியங்கள் எல்லாவற்றையும் செய்தான்; இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமானவற்றை செய்தான். ஒருநாள், இயேசு அவனை சந்தித்து, "சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?" என்று கேட்டார். அன்று அவன் தன் இருதயத்தை ஆண்டவருக்குக் கொடுத்தான்.
பவுல், "என் இருதயத்தை ஆண்டவருக்குக் கொடுத்தேன். இயேசு, சிலுவையில் சிந்தின தம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை கழுவினார். நான் கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டியாயிருக்கிறேன்," என்று கூறுகிறான். என் பிள்ளையே, உங்களைக் குறித்து என்ன? பெற்றோரே, உங்கள் இருதயங்களை ஆண்டவருக்குக் கொடுத்திருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கை, தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதம் நிரம்பியதாக உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக அமையவேண்டும். உங்கள் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கிறதா? உங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுங்கள். அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் உங்களைக் கழுவும்படி கேளுங்கள்; அப்போது புதுச்சிருஷ்டியாவீர்கள். கிறிஸ்துவின் நற்கந்தம் உங்கள் வாழ்க்கையில் வீசும்.
வேதம் கூறுகிறபடி என்னென்ன நற்கிரியைகளை நீங்கள் செய்யவேண்டும்? (1 பேதுரு 2:12). தேவனுடைய மாதிரியை பின்பற்றவேண்டும். ஆண்டவருக்குப் பிரியமானபடி வாழவேண்டும் (கொலோசெயர் 1:10). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீங்கள் கழுவப்படும்போது புதுச்சிருஷ்டியாக மாறுவீர்கள். பிறகு ஆண்டவர் உங்களை நடத்துவார்; வழிகாட்டுவார்; எப்பொழுதும் உங்களுக்கு முன்னே போவார். உங்கள் வாழ்க்கையிலிருந்து நற்கந்தம் வீசும். ஆண்டவருக்கு முன்பாக நீங்கள் விளக்காக பிரகாசிப்பீர்கள். வேதம், யோவான்ஸ்நானன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான் என்று கூறுகிறது (யோவான் 5:35); நீங்களும் தேவ மகிமைக்காக பிரகாசிக்கலாம் (பிலிப்பியர் 2:14). பெண்களும் தேவனுக்கு மகிமையாக பிரகாசிக்கவேண்டும் (1 தீமோத்தேயு 2:10). இப்போதே நம் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவின் நற்கந்தத்தால் நிறைவோம். அந்த மகிமையான வாழ்க்கையால் நம்மை நிரப்பும்படி தேவனிடம் கேட்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் இருதயத்தை முழுவதும் உமக்குத் தருகிறேன். விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால் என்னை கழுவி, உமக்குள் என்னை புதுமனுஷனாக்கும் / புதுமனுஷியாக்கும். ஆண்டவரே, என் வாழ்க்கையில் உம் நற்கந்தம் விளங்கட்டும். உம் பார்வைக்கு பிரியமானபடி நடக்க எனக்கு உதவி செய்யும். என்னை நடத்தும்; வழிகாட்டும்; எனக்கு முன்னே செல்லும். என் வாழ்க்கை உம் மகிமைக்காக மாத்திரமே பிரகாசிக்கட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


