அன்பானவர்களே, இன்றைக்கு, "அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்" (எபேசியர் 2:22) என்ற வாக்குத்தத்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய மாளிகையாக கட்டப்பட்டுள்ளோம். இதற்கு முந்தைய வசனத்தில் வேதம், "அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது" என்று கூறுகிறது. இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. ஆண்டவர் நம்மை கட்டியெழுப்புவது மட்டுமல்லாமல், ஒரு பரிசுத்த ஆலயமாக வளரும்படியும் உருவாக்குகிறார். தேவனோடு நமக்கு ஐக்கியம் உள்ள நிலையில், ஆண்டவரோடு தொடர்பு கொண்டு, அவருக்குள் வளருவோம். தேவ ஊழியர்களான உடன் பணியாளர்களோடு நாம் ஐக்கியப்படும்போது, ஆண்டவர் நம்மை ஒரு பரிசுத்த ஆலயமாக கட்டுகிறார். பவுல், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்..." (கலாத்தியர் 2:20) என்று எழுதுகிறான்.
நம்மை கட்டுவதற்கு தேவனுக்கு இடங்கொடுக்கும்போது, தேவ மகிமை நம்மேல் வருகிறது; அது பெருகுகிறது; நாம் தேவ சாயலுக்கு மறுரூபமாகிறோம். வேதம், "ஜீவனுள்ள கற்களைப்போல... கட்டப்பட்டுவருகிறீர்கள்" (1 பேதுரு 2:5) என்று கூறுகிறது. நாம் தேவ ஆலயமாயிருக்கிறோம். தேவனுடைய வீட்டில் நாம் ஒவ்வொருவரும் ஜீவனுள்ள கல்லாக இருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் தேவ விசேஷித்த ஈவைக் கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் கூட, குடும்பத்தினர் ஒருவரிடமிருந்து ஒருவர் வேறுபடுவர். என்னுடைய திருமணத்திற்கு முன்பு, என் கணவரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு, நான் கல்லூரிக்குச் சென்றபோது, என் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறியாத ஒரு தோழி என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள். தினகரன் குடும்பத்தினரைக் குறித்து அவள் கேலி செய்து, "எப்படி அப்பாவும், அம்மாவும், மகனும் இணைந்து ஊழியம் செய்ய முடியும்? இது உண்மையல்ல. அப்படி நடக்க முடியாது," என்று கூறினாள்.
நான் எனக்குள் சிரித்தபடி, "ஏன் தேவனால் முழு குடும்பத்தையும் பயன்படுத்த முடியாது?" என்று கேட்டுக்கொண்டேன். மிகுந்த அறியாமையினால் அவள் அந்தக் கேள்வியைக் கேட்டாள். ஆனால், எங்களுக்கு திருமணம் நிச்சயமானதை அறிந்தபோது, ஊழியத்தைக் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டு, என்னிடம் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டாள். ஆம், தேவனால் ஒரு குடும்பத்தை முழுமையாக தம் ராஜ்யத்தில் பயன்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய வீட்டில் ஜீவனுள்ள கற்களாக இருக்கிறோம். தேவனை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களை அவரால் பயன்படுத்த முடியும். ஆகவேதான் வேதம், "ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான்" (2 தீமோத்தேயு 2:21) என்று கூறுகிறது. இப்போதும் ஆண்டவருக்கு சேவை செய்ய உங்கள் சரீரத்தை ஒப்புக்கொடுப்பீர்களா? "ஆண்டவரே, என்னையும் உம் கரத்தில் கருவியாகப் பயன்படுத்தும். நானும் உம் ராஜ்யத்தில் ஒரு ஜீவனுள்ள கல்லாகட்டும். ஆண்டவரே, என் வாழ்வை கட்டியெழுப்பும்," என்று தேவனிடம் கூறுவோமா?
ஜெபம்:
பரம தகப்பனே, தயவாய் என்னை உம் ஐக்கியத்திற்குள் கொண்டு வாரும். உம் தயவுள்ள கரம் என் வாழ்வின்மேல் வந்து, என்னை உம் ஆவியின் ஆலயமாக கட்டியெழுப்புவதாக. நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியுள்ள விசேஷித்த ஈவை அருளிச்செய்யும்; உம் பூரண கிருபை என் உள்ளத்துக்குள் பாய்ந்து செல்லட்டும். ஆண்டவரே, உம் சித்தத்தின்படி எல்லா நற்கிரியையும் செய்திட என்னை பழக்குவிப்பீராக. உம் வார்த்தையின்படி என் வாழ்க்கையை கட்டியெழுப்பி, உம் வீட்டில் ஜீவனுள்ள கல்லாக மாற்றுவீராக. என்னில் உம் கிருபை பெருகுவதால் நான் மகிமையின்மேல் மகிமையடைய உதவும். உம் மகத்துவத்தை என் வாழ்வின் வழியாக உலகம் அறிந்துகொள்ளும்படி என் பாத்திரம் உம் வல்லமையாய் நிறைந்து வழியட்டும். ஆண்டவரே, என்னில் உம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்; உம் சமுகம் வாசம்பண்ணும் ஸ்தலமாக என் வாழ்க்கையை மாற்றிடும். என் வாழ்வின் மூலைக்கல்லாக இருந்து, உம்மில் என்னை திடமாக ஸ்தாபித்தருளும். ஆண்டவரே, உம் மகிமையின் அழகான மாளிகையாக என்னை கட்டியெழுப்பவேண்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


