அன்பானவர்களே, இயேசு உங்களை நேசிக்கிறார். அவர், "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்" (யோவான் 14:18) என்று கூறுகிறார். இந்த உலகம் நம்மை திக்கற்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது. ஆனால், இயேசு ஒருபோதும் அப்படி விடமாட்டார். நாம் பாவஞ்செய்யும்போது, தேவனைவிட்டும் மனுஷரைவிட்டும் எடுக்கப்பட்டு விடுகிறோம். என்னுடைய 17வது வயதில் நான் இயேசுவை விட்டு தூரமாக இருந்தேன். என் நண்பர்கள் அனைவரும் சுற்றியிருக்க உலகத்தை சந்தோஷமாய் அனுபவித்தேன். பிறகு, பாவம் எனக்குள் எழுந்தது. மிகவும் தனிமையை உணர்ந்தேன். படிப்பில் தோல்வியுற்று, என் வாழ்க்கையே முடிந்துபோனது என்று நினைத்தேன். அப்போது என் பெற்றோர் என்னை ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தினர். அதில் என் தந்தை பேசிக்கொண்டிருந்தார். நான் ஆர்வமே இல்லாமல் உட்கார்ந்திருந்தேன். அவர், "நீங்கள் உலக பிரகாரமான காரியங்களை பயன்படுத்தி, யாரோ ஒருவராகிவிட முயற்சிக்கிறீர்கள். ஆனால், இப்போது யாருமே இல்லாத நிலையை அடைந்துள்ளீர்கள். இன்று இயேசுவிடம் வாருங்கள்," என்று கூறினார். "அவர் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களிடம் வருவார். அவர் உங்களுக்குச் சிநேகிதராய், சகோதரராய், தகப்பனாய், எல்லாவிதத்திலும் பூரணராய் இருப்பார். இயேசுவிடம் வாருங்கள்; அவர் உங்களை உருவாக்குவார்," என்று கூறினார்.

அதைக் கேட்டதும் என் ஆவியில் தீவிரமாக உணர்த்தப்பட்டேன். ஒரு குழந்தையைப்போல அழுதேன். என் பாவங்களை விட்டு, மன்னிப்பு கேட்டேன்; எனக்கு உதவும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் என்னை தம் ஆவியினால் நிறைத்தார். அதிலிருந்து இயேசுவின் ஆவியானவர் என் சிநேகிதரானார். என்னுடன் பேசினார்; என்னை வழிநடத்தினார்; என்னை பாதுகாத்தார்; நான் செய்தவற்றையெல்லாம் ஆசீர்வதித்தார். கோடிக்கணக்கானோருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி சிறந்தவற்றை கொண்டு வந்தார். ஆம், அதே இயேசு உங்களுக்குள் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறார். உங்களை திக்கற்றவர்களாக விடுவதற்காக அல்ல; உங்களை தம் பிள்ளையாக, தேவ பிள்ளையாக மாற்றுவதற்காக வருகிறார். அவர், "உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்" (யோவான் 16:20) என்று கூறுகிறார். நம் வாழ்க்கையில் எது தனிமையைக் கொண்டு வருகிறது? மனுஷருக்குப் பயப்படும் பயம். நம்மை யாராவது அழித்துவிடுவார்களோ, மேற்கொண்டு விடுவார்களோ, தீங்கு செய்துவிடுவார்களோ, குற்றஞ்சொல்லிவிடுவார்களோ என்று பயந்து பேசாமலும், எதையும் செய்யாமலும், மற்றவர்களோடு உரையாடாமலும்கூட இருந்துவிடுகிறோம். சில நேரம் நாம் தவறு செய்யும்போது, மற்றவர்கள்மேல் இச்சைக் கொள்ளும்போது, குற்றவுணர்ச்சியின் காரணமாக பயம் வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம்பண்ணப்பட்டபிறகு அவருடைய சீஷர்கள் பயந்தார்கள் (யோவான் 20:19). ஆனால் இயேசு உயிர்த்தெழுந்தார்; பூட்டப்பட்ட கதவுகளினூடே வந்து, அவர்கள் பயத்தை உடைத்து, "சமாதானம்! என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன். என் சமாதானத்தைப் பெற்றவர்களாக எழும்புங்கள்," என்று கூறினார். தமது ஆவியை அவர்களுக்குக் கொடுத்து, "நீங்கள் யாரை மன்னிப்பீர்களோ, அவர்களை நானும் மன்னிப்பேன். யாரை ஆசீர்வதிக்கிறீர்களோ, அவர்களை நானும் ஆசீர்வதிப்பேன். நீங்கள் திக்கற்றவர்களாக இருக்கமாட்டீர்கள். நீங்களே ஆசீர்வாதமாக மாறுவீர்கள்," என்று கூறினார்.

இன்று தேவன் பயத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வர விரும்புகிறார். மக்களை எவையெல்லாம் பயமுறுத்துகிறதோ, அதை எடுத்துப்போடுவதற்காக இயேசு வருகிறார். நீங்கள் அவரது அன்பை பூரணமாக பெறவேண்டும் என்றும், அதனால் அந்த அன்பை மற்றவர்கள்மேல் ஊற்ற முடியுமென்றும், மக்களிடமிருந்து அன்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் விரும்புகிறார். இன்றைக்கு ஆண்டவரின் கரங்களில் உங்கள் வாழ்க்கையைக் கொடுப்பீர்களா? மகதலேனா மரியாள் என்று ஒரு பெண்மணி இருந்தாள். இயேசு மரித்தபிறகு, அவள் இயேசுவின் சரீரத்திற்கு வாசனை திரவியம் பூசும்படி தேடினாள். அவள் அழுதுகொண்டு இருந்தபோது, இயேசு அவளுக்குத் தோன்றி, "நான் உங்களை திக்கற்றவர்களாக விட்டுப் போகமாட்டேன். உங்களுக்காகவே உயிர்த்தெழுந்தேன்," என்று கூறினார் (யோவான் 20:15). அவள் அதன்பிறகு திக்கற்றவளாக இல்லை. உங்களைச் சுற்றிலுமுள்ள யாவும் செத்துப்போயிற்றா? உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காமல், ஆண்டவரை கண்டறிய முடியாமல், நீங்கள் தனிமையில் இருக்கிறீர்களா? இயேசு உங்களிடம் வருகிறார்; உங்கள் வாழ்வை கட்டியெழுப்புகிறார். அதே மரியாள், இயேசு உயிரோடிருக்கிறார் என்ற நற்செய்தியை சீஷருக்கு சுமந்து வந்து ஜீவனை கொண்டு வந்தாள். நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஜீவனை கொண்டு வருவீர்கள். பயப்படாதீர்கள். சாப்பிடுவதற்கு எதுவுமில்லாத நிலையில் இயேசு சீஷர்களிடம் வந்து, வலையைப் போடும்படி கூறி, அவர்களுக்கு மீனைக்கொடுத்து, அதைச் சமைத்து, அவர்களைப் போஷித்தார். இன்றும், அவர், "நான் வந்து உன்னை போஷிப்பேன். உனக்கு தேவையானதை நான் கொடுப்பேன். உன்னை திக்கற்றவனா(ளா)க விடமாட்டேன்," என்று கூறுகிறார். அன்பானவர்களே, உங்களிடம் வரும்படி ஆண்டவரை அழைத்திடுங்கள். இப்போதே அவர் இங்கிருக்கிறார். அவர் உங்கள் இருதயத்திற்குள் வருகிறார். நீங்கள் இனி திக்கற்றவர் அல்ல. "ஸ்தோத்திரம் இயேசுவே," என்று கூறுங்கள்; அவரை இப்போதே ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை நேசிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதே உம்மை என் இருதயத்துக்குள் வரவேற்கிறேன். ஆண்டவரே, தயவுசெய்து என்னை மன்னித்தருளும்; சுத்திகரியும்; புதுச்சிருஷ்டியாக்கிடும். என் தனிமையையும் பயங்களையும் எடுத்துப்போடும். உம் பரிசுத்த ஆவியினாலும் சமாதானத்தினாலும் என்னை நிரப்பிடும். தகப்பனே, என் சிநேகிதராகவும், வழிகாட்டியாகவும் நீரே இருந்தருளும். ஆண்டவரே, என் ஜீவனுக்காக உம்மை நம்புகிறேன். இனிமேல் நான் திக்கற்றவன்(ள்) இல்லையென்று உம்முடைய விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.