அன்பானவர்களே, இன்று, "என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்" (1 சாமுவேல் 2:30) என்ற வசனத்தை தியானிக்கப்போகிறோம். தமது நாமத்தைக் கனம்பண்ணுகிறவர்களை கர்த்தர் நிச்சயம் கனம்பண்ணுவார். ஆகவேதான் அவர், "இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்," என்று கூறுகிறார். ஆண்டவர் நம்பேரில் எவ்வளவு வாஞ்சையாயிருக்கிறார்! தமது சமுகத்திற்கு நாம் வரவேண்டும் என்றும், நம்மைநாமே தாழ்த்தவேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். வேதம், "தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" (மத்தேயு 23:12) என்று கூறுகிறது. வேறொரு மொழிபெயர்ப்பில், "கனத்துக்குரியவனாக உயர்த்தப்படுவான்" என்று எழுதப்பட்டுள்ளது. தேவனை கனப்படுத்துவதற்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். யோசேப்பு தான் தாழ்த்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டபோதும் தேவனை கனப்படுத்தினான்.  சிறையிலும் அவன் தேவனிடம் ஜெபித்தான். ஆகவேதான் எகிப்தில் பார்வோன் அவனை உயர்த்தினான். "தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ" (ஆதியாகமம் 41:38) என்று பார்வோன் கூறினான். ஆம், நீங்கள் தேவனுக்கு முன்பாக உங்களையே தாழ்த்தும்போது தேசங்களின் ராஜாக்கள் உங்களைக் கனம்பண்ணுவார்கள். நாம் தேவனுக்கு மிகுந்த கனத்தைக் கொடுக்கும்போது, அவர் அதை பெறுமதியாகக் கருதுவார்.

தேவனை ஆராதித்த வேதநாயகம் சாஸ்திரியார் என்ற தேவனுடைய மனுஷனை பற்றி தெரியுமா? அவர் தலைகீழாக நின்று தேவனை தொழுதுகொள்வார். தேவனுக்கு அதிக பயபக்தியை காண்பிப்பது அவரது வழக்கம். தேவன் அப்படிப்பட்டதான ஜெபத்தை பெறுமதியாகக் கருதுகிறார். இப்போது அவரது குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் அநேகர் தேவனை ஆராதிக்கின்றனர். தேவன் அவர்களுக்கு நல்ல குரல்வளத்தைக் கொடுத்திருக்கிறார். அவரது பிள்ளைகளின் பிள்ளைகளும் ஆண்டவருக்காக பாடி வருகின்றனர். ஆம், தமக்கு உளப்பூர்வமாக முழுவதும் அர்ப்பணித்துள்ளவர்களை பெலப்படுத்தும்படி ஆண்டவரின் கண்கள் பூமியெங்கும் உலாவி வருகின்றன. பயபக்தியுடன் தம்மை ஆராதிப்பதை தேவன் மதிக்கிறார். வேதம், நம் பொருளால் தேவனை  கனம்பண்ணவேண்டும் என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 3:9,10). அப்படி கனம்பண்ணிய ஒரு குடும்பம் இன்று ஆசீர்வாதமாக இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் ஹணம்கொண்டா என்ற பகுதியில் காழிப்பேட்டை, தராலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சகோ. ருத்ரமாச்சாரி மற்றும் சகோதரி விஜயலட்சுமி என்ற தம்பதியரின் சாட்சி இதுவாகும். அவர்கள் 2019ம் ஆண்டில்தான் இயேசுவைக் குறித்து அறிந்துகொண்டார்கள். இந்த சகோதரர் ஆண்டவரை அறியாதவராய் இருந்தார். பல செய்வினை மற்றும் பில்லிசூனிய சக்திகளால் அவரது மனைவி விஜயலட்சுமிக்கு அநேக பிரச்னைகள் ஏற்பட்டன. ஒருநாள் அவர்கள் நண்பரான, பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்காக ஜெபித்து, இயேசு அழைக்கிறார் ஊழியத்தை அறிமுகம் செய்தார். அவர்கள் வாரங்கல்லில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்குச் சென்றனர். ஜெப வீரர்கள் அவர்களுக்காக ஜெபித்து அவர்களை ஜெப கோபுர கட்டட நிதியிலும் சேர்த்தார்கள். அந்தத் தம்பதியினர் எங்கள் ஜெபங்களின்மேல் விசுவாசம் வைத்து ஊழியத்திற்கு ரூ.5,000/- காணிக்கை அளித்தார்கள். எங்கள் பத்திரிகையையும் பெற்றுக்கொண்டார்கள். எல்லா பில்லிசூனிய வல்லமையிலிருந்தும் தேவன் அவர்களை விடுவித்து அவர்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றினார். தேவனுக்குக் கொடுப்பது எவ்வளவு ஆசீர்வாதம்! அவர்கள் தேவனுக்கு முன்பாக தங்களையே தாழ்த்தி, மிகுந்த தியாகத்தோடு, ஊழியத்திற்குக் காணிக்கை கொடுத்தார்கள். அவர்கள் தங்கள் ஐசுவரியத்தால் தேவனை கனம்பண்ணினார்கள். ஆண்டவர், புதிய வீட்டைக் கொடுத்து அவர்களைக் கனம்பண்ணினார். யாருக்கும் நடக்கக்கூடிய பெரிய அற்புதம் நடந்தது; ஆம், அவர்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்; ஆண்டவருக்கு ஊழியம் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார்கள். கர்த்தர், "என்னை கனம்பண்ணுகிறவனை நானும் கனம்பண்ணுவேன்," என்று கூறுகிறார். தேவனை நாம் எளிதாக நினைத்துவிடக்கூடாது. அவர் நமக்குக் கொடுத்த எல்லாவற்றாலும் அவரைக் கனம்பண்ணும்படி நம் உள்ளங்களைக் கொடுப்போம். எங்கள் பிள்ளைகள் பிறந்தபோது, என் கணவர், முதலாவது ஆண்டவருக்கென்று அவர்களை அர்ப்பணம் செய்தார். ஆகவேதான் எங்கள் பிள்ளைகள் இன்று ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, எல்லாவற்றையும் தேவனுக்கென்று கொடுக்க நாம் முன்வருவோம்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, தாழ்மையுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். ஆண்டவரே, என்னுடைய பேச்சில், நினைப்பில், செய்கைகளில் உம்மை கனப்படுத்த எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். உம்முடைய சமுகத்தையும், உம்முடைய ஆசீர்வாதங்களையும் எளிதாக நான் கருதிய காலங்களுக்காக என்னை மன்னியும். உமக்கு முன்பாக தாழ்மைப்பட்டு, தினமும் உம் முகத்தைத் தேடவும் எனக்குப் போதித்தருளும். உம்மேல் பயபக்தி கொண்டு, உண்மையாய் உம்மை ஆராதிக்கும் இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. என் ஜீவன், ஐசுவரியம் உள்பட நீர் எனக்கு தந்திருக்கிறவை எல்லாவற்றை கொண்டும் உம்மை கனப்படுத்த எனக்கு உதவியருளும். நீர் வாக்குக்கொடுத்தவண்ணம் என்னை உயர்த்தி, கனப்படுத்தும்; என் வாழ்க்கை உம் தயவாலும் கிருபையாலும் நிறைந்திருக்கட்டும் என்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.