அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (ஆபகூக் 3:18) என்ற வசனத்தை தியானிப்போம். எந்தச் சூழ்நிலையில் அவன் இப்படிச் சொல்லுகிறான்? முந்தைய வசனத்தில், "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்" என்று கூறுகிறான். அவனைச் சுற்றி எதிலும் பலன் இல்லாத நிலையில் ஆபகூக், அழிக்கப்பட்ட யூதா தேசத்தில் சேனைகள் நுழைவதை விவரிக்கிறான். தன்னைச் சுற்றி எந்த ஆசீர்வாதத்தையும் அவன் காணவில்லை. ஆனாலும், தைரியமாக, "கர்த்தருக்குள் நான் மகிழ்ச்சியாயிருப்பேன்," என்று கூறுகிறான். இன்றைக்கும், இது நம் விசுவாசத்தை பெலப்படுத்தக்கூடிய வல்லமையான ஆராதனையாக இருக்கிறது. தாவீது, "கர்த்தரை எப்பொழுதும் என் முன்னே வைத்திருக்கிறேன்," என்று கூறுகிறான். எல்லாமும் நன்றாக இருக்கும்போது தேவனை துதிப்பது எளிது. ஆனால், எல்லாவற்றையும் இழந்த நிலையில் தேவனை துதிப்பது கடினமானது.
யோபு, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்," என்று கூறுகிறான் (யோபு 13:15). எல்லாவற்றையும் இழந்த நிலையில், அவன், "நான் தேவனையே பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். என் நம்பிக்கை என் தேவன்மேல் இருக்கிறது. எல்லோரும் என்னை விட்டுப் போகலாம். ஆனால், என் தேவனை உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவன் மாறாதவர். ஆகவே, இன்னமும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்," என்று கூறுகிறான். அவ்வண்ணமே, உண்மையுள்ள மக்கள் அநேகர், "என் குடும்பத்தில் சண்டைகள் நடந்தாலும், உறவு முறிந்தாலும், பணத்தையெல்லாம் இழந்தாலும், என் குழந்தையை இழந்தாலும், கர்த்தருக்குள் நான் மகிழ்ச்சியாயிருப்பேன். உபத்திரவத்தின் நடுவிலும் கர்த்தர் எங்களோடு இருக்கிறார்," என்று கூறுகிறார்கள். துக்கப்படுகிற கூட்டத்தினருக்கு, "துக்கப்படாதிருங்கள். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்," என்று நினைவுப்படுத்துகிறான். அது பஞ்ச காலமாகும். ஆனாலும் நெகேமியா, மீட்பர் தங்களோடிருக்கிறார் என்பதை உணர்ந்து ஜனங்களை களிகூரும்படி அழைக்கிறான். "ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது" என்று வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 24:10)
உங்கள் உபத்திரவங்களின் மத்தியில், உலகத்தையும் சாத்தானையும் பார்த்து, "உன்னால் என் சந்தோஷத்தை தொட முடியாது. என் சந்தோஷம் பாதுகாப்பாயிருக்கிறது. என் தேவன் என்னோடிருக்கிறார்," என்று கூறுங்கள். ஒரு பெண்மணியைப் பற்றி ஒரு கதை கேள்விப்பட்டேன். அவர்கள், போதகர் பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது சத்தமாக தேவனை துதித்துக்கொண்டிருந்தார்களாம். போதகருக்கு அது இடைஞ்சலாக தெரிந்தது. அவர், "நீங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால், நான் உங்களுக்குப் புது காலணிகளை வாங்கித் தருகிறேன்," என்று சொன்னாராம். அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணி, "அல்லேலூயா, காலணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்லேலூயா," என்று உரத்தக் குரலில் கூறினார்களாம். அன்பானவர்களே, தேவனை துதித்துக்கொண்டே இருங்கள். எல்லாமும் எடுக்கப்பட்டாலும், தேவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். கர்த்தரின் சந்தோஷம் நிலைத்திருக்கும். "நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" என்று பக்தன் கூறுகிறான். களிகூர்ந்து, தேவ மகிமைக்காக கெம்பீர சத்தமிடுங்கள். யோபு, எல்லாவற்றையும் இரட்டிப்பாக திரும்ப பெற்றுக்கொண்டான். இஸ்ரவேலர் சிறையிலிருப்பிலிருந்து மீண்டார்கள். தாவீது, எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டு கர்த்தருக்குள் களிகூர்ந்தான். நீங்களும் எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வீர்கள். கலங்காதீர்கள். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, எல்லாமே தோல்வியான நிலையில் உமக்குள் சந்தோஷமாக இருப்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். எதையும் பலனாக நான் காணாத நிலையில், பெலனே இல்லை என்று உணரும் நிலையில் என் இரட்சிப்பின் தேவனாய் நீர் இருப்பதை மறவாதிருக்க உதவும். பயமும் அவநம்பிக்கையும் என்னை அண்டாமல் காத்துக்கொண்டு உம் தெய்வீக சந்தோஷத்தால் என்னை நிரப்பும். வேதனையான தருணங்களிலும் நான் துதிக்கட்டும். ஆண்டவரே, நீர் மாறாதவராய், உண்மையுள்ளவராய் இருப்பதற்காக முழு மனதுடன் உம்மை நம்புகிறேன். உம்மில் மாத்திரமே நான் களிகூருகிறேன் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


