அன்பானவர்களே, இன்று தேவனில் உங்களுக்கு புது நம்பிக்கை உண்டு. தினமும் அவர் இரக்கங்கள் புதியவையாயிருக்கின்றன. இன்று நாம், "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்" (ஏசாயா 40:31) என்ற வசனத்தைத் தியானிப்போம். ஆண்டவர் நமக்கு எவ்வளவு அருமையான வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார்! இந்த உலகில் அநேகர் தங்கள் பணத்தையும் பெலத்தையும் சார்ந்திருக்கிறார்கள். சிலர், பாதுகாப்புக்காக தங்கள் பொறுப்புகளையும் பதவிகளையும் சார்ந்திருக்கிறார்கள். வேறு சிலரோ தங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களை பெலனாக கருதுகிறார்கள். ஆனால், இவை எல்லாமே கடந்துபோகும். கர்த்தரே என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்.
இன்று ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதை தெரிந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் புதுப்பெலன் பெறுவீர்கள் என்று அவரது வார்த்தைக் கூறுகிறது. காத்திருந்து, உபவாசித்து ஜெபிப்பதின் மூலமாக அவரது பெலனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஒரு வழியை ஆண்டவர் எனக்குக் காட்டினார்.
நான் சிறுபையனாக இருந்தபோதே உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்து விட்டேன். என் அம்மாவும் அப்பாவும் ஆவிக்குரிய ஒழுக்கத்தில் என்னை வழிநடத்தினார்கள். முதல் முறை நான் உபவாசித்தபோது, மிகவும் பசித்தது. ஒரு மணி நேரத்தைக் கடப்பதும் பெரிய சாதனைபோல் தெரிந்தது. என் வயிறு உருண்டு புரள ஆரம்பித்தது; என் எண்ணத்தில் தோசையும் சட்னியும் வந்தன. பசி தாள முடியாமல் என் அம்மாவிடம் சென்று, "எனக்கு தோசை வேண்டும். என்னால் இதற்குமேல் உபவாசம் இருக்க முடியாது," என்றேன். மறுமுறை உபவாசித்தபோது, எனக்கு பசித்த நேரத்தில் என் அம்மா, "சரி. குடிப்பதற்கு ஏதாவது தருகிறேன். ஹார்லிக்ஸ் போடுகிறேன்," என்றார்கள். ஆகவே, இரண்டாவது முறை உபவாசம் இருக்க முயற்சித்தபோது, அது ஹார்லிக்ஸ் உபவாசமாகிப் போனது. ஆனால், தொடர்ந்து நான் உபவாசித்து ஜெபித்தபோது ஆச்சரியமானது நடந்தது. தேவ சமுகத்தை உணர்ந்தேன்; அவரது வசனத்தை வாசித்தேன்; அவரது வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டேன்; புதிதான ஒன்று என் உள்ளத்தை நிரப்ப தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக உலகப் பிரகாரமான கவலைகள் அகல தொடங்கின. உணவு, தண்ணீர் இவற்றின்பேரிலான பிரியம், முக்கியம் இழந்து, ஆவிக்குரிய காரியங்களை என் இருதயம் வாஞ்சித்தது.
பரிசுத்த ஆவியானவர் எனக்குள் கிரியை செய்ய தொடங்கினார். வேதத்தை வாசிக்கும்போது பெரிய சமாதானத்தை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் தாம் செய்யப்போகும் காரியங்களை ஆண்டவர் காண்பிக்க தொடங்கினார்; புதிய காரியங்களுக்குள் என்னை வழிநடத்தினார். என் உள்ளம் உறுதியடைந்தது; சில நாட்களுக்குள் என்னால் முன்னேறிச் சென்று வெற்றியை பெற முடிந்தது. அன்பானவர்களே, புதுப்பெலனை தந்து முதலாவது ஆண்டவர் உங்களை ஆயத்தம் பண்ணுகிறார். கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து பறக்கப்பண்ணுகிறார்; நீங்கள் காத்துக்கொண்டிருக்கும் அற்புதங்களைப் பெற்றுக்கொள்ள உங்களை ஆயத்தப்படுத்துகிறார். ஆண்டவருக்குள் நமக்கு நம்பிக்கை இருப்பதை எண்ணி அவரை ஸ்தோத்திரிப்போம். அவரில் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் எங்களுக்கு தந்திருக்கும் நம்பிக்கைக்காகவும் விசுவாசத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எங்களோடு இருப்பதால் எங்கள் வாழ்க்கை தோற்றோ, அழிந்துபோகாதோ என்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் இனிய சமுகத்தை அனுபவிக்கவும், உம்மிடமிருந்து வரும் நன்மையான எல்லா ஈவையும் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்யும். உம் வழிகாட்டுதலை நாடாமல் துரிதப்படாமல் காத்திருப்பதற்கு எங்களுக்குக் கற்றுத் தந்தருளும். உம்மையே முழுவதுமாக சார்ந்திருக்கும் இருதயத்தை எங்களுக்கு அளித்தருளும். உமக்காக காத்திருக்கும் உம் பிள்ளைகளை பெலப்படுத்தியருளும். அவர்களை உம் பரிசுத்த ஆவியினாலும், உம் வசனத்தினாலும் நிறைத்து, அவர்கள் உள்ளங்களையும் ஆத்துமாக்களையும் புதுப்பித்தருளும். தங்கள் வாழ்வில் உம் அற்புதங்களைக் கண்டு அவர்கள் களிகூருவார்களாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


