அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்" (யோபு 33:28) என்று கூறுகிறது. ஆமென்! ஆண்டவர்தாமே உங்களை அந்தக் குழியிலிருந்து விடுவிப்பாராக. வாழ்க்கையில் காரியங்கள் தோல்வியடையும்படி செய்து, உடலின் செயல்பாடுகள் பாதிப்புறும்படி பண்ணி, உங்கள் சந்தோஷத்தை எடுத்துப்போட்டு, குடும்பத்தில் இடையூறு ஏற்படுத்தி, உங்கள் நீதியைப் பெலவீனப்படுத்தி, பல்வேறு பகுதிகளில் வெற்றியை தடுத்து உங்களைக் குழியில் தள்ளுவதற்கு பிசாசு முயற்சிக்கலாம். ஆனால், அன்பானவர்களே, தேவன் நீங்கள் ஜீவ வெளிச்சத்தில் வாழ்ந்திருப்பீர்கள் என்று வாக்குப்பண்ணுகிறார். ஆம், நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அவரது வெளிச்சத்தை அனுபவித்து ஆனந்திப்பீர்கள். இயேசு, ஜீவ வெளிச்சமாக உங்கள் வாழ்வில் வருவார். வேதம், இருளில் இருப்பவர்கள் மகத்தான வெளிச்சத்தை கண்டார்கள் என்று கூறுகிறது. இயேசு இந்த உலகிற்கு வந்தபோதும் இப்படியே நடந்தது.
ஒருமுறை இயேசு, பிசாசு பிடித்திருந்த ஓர் இளைஞனை சந்தித்தார். அவன் நிலையைப் பொறுக்கமாட்டாமல் அவனுடைய தந்தை இயேசுவிடம் கொண்டு வந்திருந்தார். அந்தப் பிசாசு, அவனுக்கு வலிப்பையும், வாயில் நுரையையும் வரப்பண்ணி, பேசும் திறனை இழக்கப்பண்ணியது. பிசாசினால் அவன் தனக்கே ஆபத்து உண்டாக்கும்படி நெருப்பிலும் தண்ணீரிலும் விழுந்தான். தகப்பன், உதவி செய்யும்படி ஆண்டவரிடம் மன்றாடினார்.
ஆண்டவர், பிசாசு அவனை மரணக்குழியில் தள்ளி, அவன் வாழ்க்கையை அழித்துப்போட முயற்சிப்பதைக் கண்டு, அந்தப் பையனுக்கு இரங்கினார். அவன்மேல் மனதுருகி, அந்த அசுத்த ஆவிக்கு வாலிபனிடமிருந்து வெளியேறும்படி கட்டளையிட்டார். அந்த வாலிபனை தூக்கியெடுத்து, நிற்கச் செய்து, பிசாசின் கரங்களிலிருந்து பூரணமாய் விடுவித்தார். இயேசு அவனுக்கு புது வாழ்வை கொடுத்து, தம் வெளிச்சத்தை அவனுக்குள் பிரகாசிக்கப்பண்ணினார். நம் வாழ்விலிருந்து இன்று எல்லா இருளும் அகற்றப்படும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்விலிருந்து எல்லா இருளையும் பயத்தையும் அகற்றுவீராக. என் உள்ளத்தை உம் நம்பிக்கையால், சந்தோஷத்தால், சமாதானத்தால் நிறைத்திடும். எல்லா ஆபத்திலிருந்தும் என்னை விடுவிக்கும் இரட்சகராக விளங்கும். என் உடலை சுகமாக்கும்; என் குடும்பத்தை சீர்ப்படுத்தும்; என் வாழ்வில் அற்புதங்களைச் செய்தருளும். நான் மரணக்குழிக்குள் விழுந்துபோகாமல் காப்பாற்றும். உம் ஜீவ வெளிச்சம் எனக்குள் பிரகாசிக்கட்டும்; என்னை பெலப்படுத்தும்; என் அடிகளை வழிநடத்தும். உம் அற்புத வல்லமைக்காகவும் கிருபைக்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


