அன்பானவர்களே, இன்றைக்கு நாம், "பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்" (லூக்கா 8:50) என்று இயேசு கூறிய வசனத்தைத் தியானிப்போம். எந்தச் சூழ்நிலையில் ஆண்டவர் இதைக் கூறினார்? யவீருவின் மகள் இறந்தபோது, "விசுவாசி. நம்பு. அவள் குணப்படுவாள்," என்று ஆறுதலாய் கூறினார். பன்னிரண்டு வயதான தன் மகள் இறந்துகொண்டிருப்பதாகவும், இயேசு வந்து அவளை குணமாக்கவேண்டும் என்றும் யவீரு மன்றாடினான். ஆனால், வழியில் தாமதம் ஏற்பட்டது. இயேசுவை அநேக மக்கள் சூழ்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்தின் நடுவே பன்னிரண்டு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் குணமாக்கப்பட்டாள்; இன்னும் அநேகரும் குணம் பெற்றிருக்கலாம். இயேசு, யவீருவின் வீட்டை அடையும் நேரத்தில், அந்தச் சிறுபெண் மரித்துவிட்டாள். ஜெப ஆலயத் தலைவன் வீட்டிலிருந்து ஒருவர் வந்து, "உம் மகள் மரித்துவிட்டாள். இனிமேலும் போதகரை வருத்தவேண்டாம்," என்று கூறினார். அன்பானவர்களே, நாமும் கூட நம்மைச் சுற்றியிருப்பவர்கள், "ஏன் இயேசுவிடம் போனீர்கள்? உங்கள் வாழ்க்கையில் எல்லாம் அழிந்துபோனது. நீங்கள் அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை. நீங்கள் ஒருபோதும் குணம் பெற முடியாது," என்றெல்லாம் கூறுவதைக் கேட்க முடியும். உங்கள் குடும்பத்தை, உடல்நலத்தை, எதிர்காலத்தை, பிள்ளைகளைக் குறித்து இப்படி வேதனையான வார்த்தைகளைக் கேட்க நேரிடும். யவீருவிடம் கூறப்பட்ட இந்த வார்த்தைகள் இயேசுவின் காதுகளிலும் விழுந்தன. இயேசு இவற்றை கேட்டதோடு மட்டுமல்லாது, கரிசனையும் கொண்டார். நம் நாவிலிருந்து எந்த வார்த்தையும் பிறக்கும் முன்னரே தேவன் அதை அறிந்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 139:4).
"போதகரை வருத்தப்படுத்தவேண்டாம்," என்று மக்கள் கூறியபோதும் இயேசு யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அந்தச் சிறுபெண் மரித்துக் கிடந்த படுக்கையின் அருகே நின்று, "சிறுபெண்ணே எழுந்திரு", அதாவது "தலீத்தாகூமி," என்று கூறினார். உடனே அந்தச் சிறுபெண் தன் படுக்கையில் எழுந்திருந்தாள். அவள் உயிருடன் எழுந்தாள். பெரிய அற்புதம் நடைபெற்றது. அவள் பெற்றோர் ஆச்சரியமடைந்தனர். அழுகையும் காத்திருப்பும் நிறைந்திருந்த அந்த வீடு, இயேசு பிரவேசித்ததால் சந்தோஷத்தால் நிறைந்தது. அன்பானவர்களே, இயேசுவே ஜீவனும் உயிர்த்தெழுதலுமாயிருக்கிறார். நாம் விசுவாசித்தால், தேவனுடைய மகிமையை காணுவோம். நாம் இயேசுவில் விசுவாசமாயிருந்தால், ஜீவனை பெற்றிருப்போம். ஆகவே, கூடாது என்று கூறப்படுகிறவை கூடும் என்று நம்புவோம்.
ஒருமுறை நாக்பூரில் நாங்கள் காலை கூட்டத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஆண்டவர் அநேகரை விட்டு பிசாசுகளை துரத்திக் கொண்டிருந்தார். அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டு, பிசாசின் வல்லமையால் தரையில் உருண்டு புரண்டுகொண்டிருந்த பெண்மணிகளைப் பார்த்து நான் இரக்கம் கொண்டேன். ஜெப நேரத்தில் ஆண்டவர் அவர்களை எல்லாம் விடுவித்தார்; தேவன் செய்த நன்மையை நான் கண்டு சந்தோஷமடைந்தேன். கூட்டம் முடிந்து நான் மைதானத்தை விட்டு புறப்பட்டபோது, ஒரு பெண்மணி என் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, "சகோதரி, எனக்காக ஜெபிப்பீர்களா?" என்று முறையிட்டார்கள். என்னைச் சுற்றிலும் கூட்டமாக இருந்ததால், அவர்கள் கூறியது என் காதுகளில் சரியாகக்கூட விழவில்லை. ஆனால், நான் கண்களை மூடி, ஒரு கணம் அவர்களுக்காக ஜெபித்தேன். மறுநாள் காலையிலே அந்த பெண்மணி வந்து சாட்சி கூறினார்கள். அவர்கள், "சகோதரி இவாஞ்சலின் அருகே சென்று எல்லாவற்றையும் கூற முடியவில்லை. ஆனால், அவர்களை நான் தொட்டால், குணமாவேன் என்று விசுவாசித்தேன்," என்று கூறினார்கள். பல ஆண்டுகளாக கடும் இரத்தப்போக்கினால் அவர்கள் அவதிப்பட்டார்கள். ஆனால், அந்தத் தருணத்திலே ஆண்டவர் அவர்களைத் தொட்டு பூரணமாக குணமாக்கினார். இந்தச் சாட்சியை நான் கேட்டபோது, மிகுந்த ஊக்கம் பெற்றேன்; அவர்கள் விசுவாசத்திற்காக தேவனை துதித்தேன்.
அன்பானவர்களே, நாம் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அற்புதங்கள் நடக்கும். ஆண்டவர் நம்மை தொடுவார்; குணமாக்குவார்; நம் வாழ்வில் கூடாதவையாக இருந்த காரியங்களை செய்வார் என்று நாம் உண்மையாய் விசுவாசிக்கும்போது, நமக்கான அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம். இயேசுதாமே, "நீங்கள் விசுவாசித்து ஜெபத்தில் எவற்றைக் கேட்டுக்கொள்கிறீர்களோ அவற்றை பெற்றுக்கொள்வீர்கள்," என்று கூறியிருக்கிறார். ஆகவேதான் அவர், யவீருவிடம், "பயப்படாதே, விசுவாசி, நம்பு," என்று கூறினார். உங்களை குணமாக்கும், சீர்ப்படுத்தும், செத்துப்போனதாய் காணப்படுகிறவற்றை உயிர்ப்பிக்கும் இயேசுவின் வல்லமையை விசுவாசித்திடுங்கள். அவரை விசுவாசிக்கும்போது, நீங்களும் அற்புதத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, இன்று இயலாத எல்லா சூழ்நிலையையும் உம் முன்னே கொண்டு வருகிறேன். பயமும் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் என்னை சூழ்ந்துகொள்ளும்போது, உம்மை நம்புவதற்கும் விசுவாசிப்பதற்கும் உதவி செய்யும். உம் வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இருக்கும்படி என் விசுவாசத்தைப் பெலப்படுத்தும். என் வாழ்வில் செத்துப்போய் காணப்படும் எல்லா பகுதியின்மேலும் ஜீவனை உரைத்து, மீண்டெழும்ப பண்ணும். என் உடலை, மனதை, குடும்பத்தை, எதிர்காலத்தை உம் மிகுந்த வல்லமையால் குணமாக்குவீராக. உம் சமுகம் எல்லா துக்கத்தையும் அகற்றி, என் உள்ளத்தை சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் நிரப்புவதாக. ஆண்டவரே, உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று விசுவாசித்து இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


