அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். "நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்," (மீகா 7:7) என்று பக்தன் சொல்லுகிறான். தேவன் நமக்குச் செவிகொடுப்பது எத்தனை இனிமையான அனுபவம்! கர்த்தரிடம் ஜெபித்து நாம் காத்திருக்கும்போது, அவர் நமக்குப் பதில் அளிப்பதால் சந்தோஷம் நம் உள்ளத்தை நிரப்புகிறது. தேவன் நம்மை நிரப்புவதால் நாம் பெலனாகவும் சந்தோஷமாகவும் உணர்கிறோம். வேதம், "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்," என்று அழகாகக் கூறுகிறது (ஏசாயா 40:31).
நம் ஜெபங்கள் கேட்கப்பட சிலவேளைகளில் நாம் நாட்கணக்கில், மாதக்கணக்கில், ஏன் ஆண்டுக்கணக்கிலும் காத்திருக்கவேண்டியதிருக்கும். ஆனால், அப்படி காத்திருப்பதால் கர்த்தர் நம்மை பெலப்படுத்துகிறார். நம்மை பெலப்படுத்துவதற்காகவே ஆண்டவர் காத்திருக்கப்பண்ணுகிறார். உங்கள் ஜெபம் ஒன்றும் வீணாய்ப்போகாது. தேவன் உங்களுக்குச் செவிகொடுப்பார். அவர் உங்கள் கண்ணீரை துடைப்பார்; உங்களுக்கு பலன் கிடைக்கும். வேதம், "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்," (சங்கீதம் 50:15) என்று கூறுகிறது. ஆம், ஆண்டவர்தாமே உங்களுக்குச் செவிகொடுப்பதற்காகக் காத்திருக்கிறார்.
ஆந்திர பிரதேசம், காக்கிநாடாவை சேர்ந்த மங்கா என்ற சகோதரி ஓர் அழகான சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். 2014ம் ஆண்டு முதல் ஈரலில் அவர்களுக்கு தீவிர பிரச்னை இருந்துள்ளது. அவர்களால் எதையுமே சாப்பிட முடியவில்லை; பால் அருந்தினால்கூட உடலில் தங்கவில்லை. தீவிர செரிமான கோளாறாலும் வலியாலும் அவர்கள் வேதனைப்பட்டார்கள். சாப்பிடும் மருந்துகளினால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அவர்கள் உடலுக்கு அவற்றை தாங்க இயலவில்லை. ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே கழிந்தது. 2025ம் ஆண்டில் ஏலூரில் இயேசு அழைக்கிறார் பங்காளர் கூட்டம் நடக்கிறது என்று கேள்விப்பட்டதும் பெரிய விசுவாசத்துடன் அதற்கு வந்தார்கள். என் மகன் சாமுவேல் தினகரன், ஒவ்வொரு பங்காளருக்கும் தனித்தனியே ஜெபித்தார். அவர்கள்மேலும் கையை வைத்தபோது, அவர்கள் உடலிலிருந்த வேதனை உடனடியாக அகன்றது. தனக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்ததை அவர்கள் அறிந்தார்கள். அன்றிலிருந்து அவர்கள் பெலப்படுத்தப்பட்டார்கள்; உணவு சாப்பிட முடிந்தது; பால் அருந்த முடிந்தது; அவர்கள் பூரண குணம் பெற்றார்கள். எவ்வளவு வல்லமையான தேவனை நாம் சேவிக்கிறோம்! அன்பானவர்களே, தேவன் நமக்குச் செவிகொடுப்பது எவ்வளவு அருமையான அனுபவம்! ஆண்டவர் உங்கள் ஜெபங்களுக்கும் பதில் அளிப்பார். நீங்கள் சுகம் பெறுவீர்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, உம்மையே தஞ்சமென நம்பி காத்திருக்கிறேன். இப்போதும் நான் உம் நாமத்தைச் சொல்லி கூப்பிடும்போது என் பெலனை புதுப்பியும். என் கண்ணீரை துடைத்து, என் ஜெபத்திற்கு செவிகொடுத்தருளும். ஆண்டவரே, நாம் காத்திருக்கும்போது உம் பரிபூரண சமாதானத்தினால் என்னை நிரப்பிடும். என் வாழ்க்கையில் உம் ஆரோக்கியம் பாய்ந்து, எல்லா பாரத்தையும் அகற்றுவதாக. ஏற்ற நேரத்தில் எனக்குச் செவிகொடுத்து என்னை கனப்படுத்துவீர் என்று விசுவாசித்து இயேசுவின் இணையற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


