அன்பானவர்களே, இன்றைக்கு, "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்" என்று கூறும் வசனம் தொடர்ந்து, "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10) என்றும் கூறுகிறது. அந்த வசனத்தைத் தியானிப்போம். கர்த்தர் உங்களைச் சோதிப்பதாக நீங்கள் நினைக்கலாம். வேலைக்காக காத்திருக்கலாம்; மற்றவர்கள் உங்களைக் குறை கூறிக்கொண்டிருக்கலாம்; உங்களுக்கு இல்லாதவற்றைக் குறித்து கேலிக்குள்ளாக்கியிருக்கலாம். ஆரோக்கியத்தை அல்லது சந்தோஷத்தை இழந்திருக்கலாம். யோபைப்போல, ஆஸ்திகளை, மகிழ்ச்சியை அல்லது உங்களுக்குப் பிரியமான ஏதோ ஒன்றை நீங்கள் இழந்திருக்கலாம். யோபைப்போல, இன்று இக்கட்டான சூழலின் வழியாகக் கடந்து சென்றுகொண்டிருக்கலாம்.

இந்த வசனத்தை வாசித்தபோது, ஒரு கதை எனக்கு நினைவுக்கு வந்தது. விவசாயி ஒருவர் தன் நிலத்தில் விதைத்திருந்தார். அதற்கு நீர்ப்பாய்ச்சி, அது வளருவதற்காகக் காத்திருந்தார். அந்த இடத்தைக் கடந்து சென்றவர்கள், "செடி எங்கே? மணல் மாத்திரமே தெரிகிறது. வளர்வதற்கான அறிகுறி எதுவும் இல்லையே," என்று கூறினர். ஆனால், அந்த விவசாயி, தினமும் நிலத்தைத் தோண்டி விதையைச் சோதிக்கவில்லை. மணலின் ஆழத்தில், விதை மெதுவாக வேர்விட்டது. தண்ணீரும் சூரிய வெளிச்சமும் கிடைத்ததால், அது மெதுவாக மணலுக்கு மேலே வளர்ந்தது; கனியும் கொடுத்தது.

அவ்வண்ணமே, உங்களைப் பார்க்கும் மக்கள், "எதுவும் நடக்கவில்லை," என்று கூறலாம். அவர்களால் தேவன் உள்ளாகக் கிரியை செய்வதைக் காணமுடியாது. உடல் ஆரோக்கியத்திலும், வேலையிலும், குடும்பத்திலும் குறைவுகள் இருந்தாலும் நீங்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி, அவரது சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், தேவன் உங்கள் விசுவாசத்தைக் கட்டியெழுப்புவார்; உங்களை உருவாக்குவார்; உறுதிப்படுத்துவார். உங்கள் சிந்தையை, உடலை, ஆவியை அவர் பெலப்படுத்துவார். வேதம், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10) என்று கூறுகிறது. பொன்னானது அக்கினியினால் சுத்திகரிக்கப்படும். அதன் அழுக்குகள் அகற்றப்படும்; அது சுத்தமானதாகவும் பிரகாசத்துடனும் அக்கினியிலிருந்து வெளிவரும்.

அவ்வண்ணமே, இக்கட்டான தருணங்களை நீங்கள் கடந்துசெல்லும்போது, தேவையற்றவற்றை தேவன் உங்கள் வாழ்விலிருந்து அகற்றுவார். தம் சித்தத்திற்கேற்ப அவர் உங்களை உருவாக்குவார்; வனைந்திடுவார். நீங்கள் நெருப்பைக் கடந்து வரும்போது, சுத்தமானவராக, பரிசுத்தமானவராக, அவரது பார்வைக்கு ஏற்றவராக பொன்னைப்போல் பிரகாசிப்பவராக வருவீர்கள். நீங்கள் அக்கினியை கடக்கும் இன்றும் கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்திடுங்கள். அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவரது சித்தத்தின்படி நடந்திடுங்கள். இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சக்காலம் பாடனுபவித்தாலும் பொன்னாக விளங்குவீர்கள் (1 பேதுரு 1:6-7). இன்றைக்கு தைரியமாயிருங்கள். கர்த்தர்மேல் உங்களை நம்பிக்கையை வைத்திடுங்கள்; அவர் பொன்னாக விளங்கும்படிச் செய்வார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஆச்சரியமான உம் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் பிள்ளைகள் இக்கட்டான தருணங்களைக் கடந்து செல்லும்போது, அவர்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தும்; அவர்கள் இழந்தவற்றைத் திரும்ப கொடுத்தருளும். உம்மை நம்புவதற்கும், உம் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்கும், தங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்வதற்கும் வேண்டிய சமாதானத்தை, கிருபையை அவர்களுக்கு அருளிச்செய்திடும். அவர்கள் அக்கினியின் வழியாக கடந்துசெல்லும்போது, எல்லா அழுக்கையும் அகற்றி, உம் சித்தப்படியே அவர்களை வனைந்திடும். உம் வார்த்தையில் வேரூன்றவும், உம் சத்தத்தைக் கவனிக்கவும், கீழ்ப்படிந்து நடக்கவும் அவர்களுக்கு உதவும். அவர்கள் மனதை, உடலை, ஆவியை பெலப்படுத்தும். இக்கட்டான காலகட்டத்தை கடந்து அவர்கள் பொன்னாக விளங்கவும், உம் நாமத்திற்கு துதியையும் மகிமையையும் கனத்தையும் செலுத்தவும் அருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.