அன்பானவர்களே, இன்றைக்கு, "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்" (மத்தேயு 5:6) என்ற வசனத்தை தியானிப்போம். பசிதாகமுள்ளவர்கள் திருப்தியாக்கப்படுவார்கள் என்று இயேசு வாக்குப்பண்ணுகிறார். வாஞ்சையுள்ள எல்லா இருதயத்தையும் அவரே திருப்தியாக்குகிறவராயிருக்கிறார். இயேசு, "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோவான் 6:35) என்றும், " நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" (யோவான் 4:14) என்றும் கூறியிருக்கிறார். வலிமையான சிங்கங்கள்கூட சிலவேளைகளில் பசியாயிருக்கும். ஆனால், கர்த்தரை நம்புகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. மெய்யாகவே நம் தேவன் பரிபூரணத்தின் தேவனாயிருக்கிறார். நிரப்பப்பட்டிருக்கும் பாத்திரம் ஒருபோதும் அசைக்கப்படாது. நீங்கள் இயேசுவின்பேரில் தீவிர வாஞ்சையாயிருக்கும்போதும், அவரை சார்ந்திருக்கும்போதும் எப்போதும் நிறைவாக உணர்வீர்கள்.

வேதம், "தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்" (சங்கீதம் 46:5) என்று கூறுகிறது. தேவன்பேரில் தீவிர வாஞ்சையோடிருப்பீர்களென்றால் அவர் உங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகித்து, உங்கள் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்வார். தாவீது இந்தப் பரிபூரணத்தை அனுபவித்தான். அவன், "என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்" (சங்கீதம் 40:5) என்று கூறுகிறான். ஆம், அன்பானவர்களே, நாம் தேவனிடம் கேட்கும்போது, அவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, தம் ஆசீர்வாதங்களை நம்மேல் பொழிந்தருளுவார். நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியாவார்கள். ஆகவே, அன்பானவர்களே, நீங்கள் திருப்திப்படுத்தப்படுவீர்கள்.

பவுல், "எப்போதும் ஆவியினால் நிரம்பியிருங்கள்," என்று நமக்கு நினைவுப்படுத்துகிறார். நீங்கள் தேவ ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும்போது, உபத்திரவத்தின் மத்தியிலும் கடினமான நேரங்களிலும்கூட ஆண்டவர் சந்தோஷமான ஆவியினால் உங்களை நிரப்புவார். பரிபூரணத்தின் தேவன் உங்களோடிருந்து தாங்கி பெலப்படுத்துவதால் ஒருபோதும் நீங்கள் தனிமையாக உணரமாட்டீர்கள். கர்த்தரின் சந்தோஷமே உங்கள் பெலனாயிருக்கும். தேவ ஆவியினால் நிரம்பியிருக்கும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள். இன்றும் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவரது தெய்வீக பரிபூரணத்திலும், நிரம்பி வழியும் சந்தோஷத்திலும் தினமும் வாழும்படி உங்களை அவரது ஆவியினால் நிரப்பும்படி கேளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பசி தாகமுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். ஆண்டவரே, என்னை உம் நீதியினாலும் சமாதானத்தினாலும் நிரப்பும். என் ஆத்துமா உம்மீதும் உம் சமுகத்தின் மீதும் மாத்திரமே தாகமாயிருப்பதாக. உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரம்பி வழியும் பாத்திரமாக என்னை மாற்றுவீராக. ஆண்டவரே, என் பெலவீனத்தில் உம் பெலத்தினால் என்னை நிரப்புவீராக. என் வெறுமையை உம் சந்தோஷத்தினால் நிரப்பும். உம் ஜீவத்தண்ணீர் அனுதினமும் என் வழியாக பாய்வதாக. வாழ்க்கையின் எல்லாக் காலத்திலும் உம்மையே சார்ந்திருக்க எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். நித்தியமாய் என் ஆத்துமாவை திருப்திப்படுத்தும் ஜீவ அப்பமாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னை பரிபூரணப்படுத்தும் தேவனாயிருப்பதால் எனக்குண்டான எல்லாவற்றையும் உமக்கு அர்ப்பணித்து ஜெபிக்கிறேன், ஆமென்.