அன்பானவர்களே, தேவன் நம்மோடிருப்பதால் இது அருமையான நாளாகும்; அவரில் நமக்கு நம்பிக்கை உண்டு. வேதம், "அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 62:6) என்று நினைவுப்படுத்துகிறது. ஆகாய விமானங்களைப் பொறுத்தமட்டில் இப்போதைய காலங்களில் பயங்கரமான காரியங்களைக் கேள்விப்படுகிறோம். சில விமானங்கள் வானத்திலேயே நொறுங்குகின்றன; இன்னும் சில தீப்பற்றி வெடிக்கின்றன. பல அழிவு சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. நாம் வானத்தில் உயரே சென்று கொண்டிருக்கும்போது, வானிலை காரணமாக திடீரென விமானம் குலுங்கும்; அப்போது பயம் எழும். "விமானம் விழப்போகிறதா? நொறுங்கப்போகிறதா? என்ன நடக்கப்போகிறது?" என்று நாம் திகைப்போம். சிறிய அதிர்வும் நம்மை பயப்படுத்தும்.
ஆனாலும், அன்பானவர்களே, ஆண்டவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்தப் பயணத்தை மேற்கொள்வதால் எனக்கு பயம் இருக்காது; திடநம்பிக்கையாயிருப்பேன். அவர் என்னை பாதுகாப்பார்; பராமரிப்பார்; எனக்கு நியமித்த இடத்திற்கு பத்திரமாக என்னை கொண்டு சேர்ப்பார் என்று நம்புவேன். ஆண்டவர் நம் கன்மலையாயிருப்பதால், பயப்படுவதற்கேதுவான சூழல்களிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இப்படியே அவர் நம்மை நிலைப்படுத்துகிறார்; அசைக்கப்படாமல் பாதுகாக்கிறார். ஆண்டவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, பயமின்றி நடக்க முடியும். அவரது நோக்கத்தை நிறைவேற்ற நாம் தீர்மானமாயிருந்தால், பயம் நம்மை பிடிக்காது.
விமான பயணத்தைப் போன்றே, நம் வாழ்க்கைப் பயணத்திலும் பல தடைகள் வரலாம். நாம் முன்னேறுவதை தடுக்கும்படியாக சிலர் தடைகளை போடலாம். ஏதாவது ஒன்றை உருவாக்கும்போது மக்கள் நம்மை தாக்கும் பயங்கரமான சூழலை, எதிர்பாராத சவால்களை சந்திக்க நேரிடலாம்.
ஆனால் இன்று ஆண்டவர், "நீ என் சித்தத்தை செய்வதால் நானே உனக்கு கன்மலையாயிருப்பேன். நீ அசைக்கப்படும்படி நான் விடமாட்டேன்," என்று கூறுகிறார். ஆகவே, உங்கள் உள்ளம் முழுவதும் அவர்மேலேயே கவனமாக இருக்கட்டும். நாம் ஏன் பயப்படவேண்டும்? கர்த்தர் நம் கன்மலையாயிருக்கிறார். அவரது சித்தத்தை செய்வதற்கு நாம் நம்மை அர்ப்பணித்திருக்கிறோம். அவரே நம் அஸ்திபாரமாயிருப்பார்; வசனம் கூறுகிறபடி இரட்சிப்பாயிருப்பார். பயங்கரங்கள் நடக்கும்போது, கர்த்தரே நம்மை மீட்கும்படி விரைந்து வருவார்; பலத்த அற்புதங்களைச் செய்து நம்மை விடுவிப்பார்.
வேலை, ஊழியம், வாழ்க்கை, தொழில், அழைப்பில் இன்று ஆண்டவரின் சித்தத்துக்கு உங்களை முழுமையாய் ஒப்புக்கொடுங்கள். "ஆண்டவரே, என் விருப்பத்தை செய்திடாமல் இருக்க எனக்கு உதவும்," என்று ஜெபியுங்கள். பொருளாதார லாபத்துக்காகவோ, தனிப்பட்ட பெருமைக்காகவோ, மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவோ எதையும் செய்யாதிருங்கள். மாறாக, தேவ நோக்கத்திற்கு உங்களை தீவிரமாய் அர்ப்பணித்திடுங்கள். நீங்கள் அவரது சித்தத்தை செய்யும்போது, உங்கள் இருதயம் ஒருபோதும் பயப்படாது. "கர்த்தர் என் கன்மலையும் இரட்சிப்புமாயிருக்கிறார்," என்று நீங்கள் திடநம்பிக்கையோடு கூறலாம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் சித்தத்தை செய்வதற்கு என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் என் கன்மலையாக, இரட்சிப்பாக, கோட்டையாக விளங்கிடும். எல்லா பயத்தையும் என் இருதயத்திலிருந்து எடுத்துப்போட்டு உம் சமாதானத்தாலும் திடநம்பிக்கையாலும் நிரப்பிடும். எல்லா ஆபத்து, தாக்குதல், தடை, இழப்பு, உபத்திரவத்திலிருந்தும் என்னை பாதுகாத்தருளும். வேலை, ஊழியம், தொழில், அழைப்பு என்று வாழ்வின் எல்லா பகுதியிலும் உம் நோக்கத்தின்படியே என்னை வழிநடத்தும். எனக்கு முன்பாக உம் வழியை திறந்தருளும்; உண்மையாய் அதில் நடப்பதற்கு எனக்கு உதவும். பலத்த அற்புதங்களை நடப்பியும்; எல்லா ஒடுக்குதல்களிலும், தடையிலுமிருந்தும் என்னை விடுவித்தருளும்; ஜெயமாக என்னை வழிநடத்தும். உம் அழைப்பு என் வாழ்வில் தங்குவதாக; உம்மோடு சஞ்சரிக்கும் சந்தோஷமான அனுபவத்தை நான் பெறச் செய்யவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


