அன்பானவர்களே, இன்று, "நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை" (நீதிமொழிகள் 4:12) என்ற வாக்குத்தத்தத்தைத் தியானிப்போம். ஆண்டவர், நம் நடைகளை உறுதிப்படுத்துகிறார்; நம் வழிகளில் பிரியமாயிருக்கிறார். வேதம், "என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்," என்று கூறுகிறது (சங்கீதம் 18:36). நம் தேவன் எவ்வளவு அன்பானவர்! நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் ஆண்டவர் கவனிக்கிறார். அவர் நம்மேல் அதிக அக்கறையாயிருக்கிறார். நாம் சிறுபிள்ளைகளை அழைத்துச் செல்லும்போது, தடுமாறவோ, விழுந்துவிடவோ கூடாது என்பதற்காக அவர்களை இறுகப் பற்றிக்கொள்வோம் அல்லவா? ஒருமுறை, சாலையைக் கடந்தபோது, என் பேத்தி கேட்டியின் கையை நான் பிடித்திருந்தேன். அவள் என் கையைப் பிடித்தால், பிடி வழுக்கி விழுந்துவிடுவாள் என்பதற்காக, நான் அவளைப் பிடித்துக்கொண்டேன்.

அவ்வண்ணமே, ஆண்டவர் நம் கரங்களைப் பிடித்து நம் நடைகளை உறுதிப்படுத்துகிறார். சாலொமோன் தன் மகனைக் குறித்து அதிக அக்கறையாயிருந்தான். ஆகவேதான் அவன், "என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்" என்று கூறினான் (நீதிமொழிகள் 4:10-13). தேவனுடைய கட்டளைகள் நமக்கு ஞானத்தை அருளும் என்பதால் அவற்றைச் செய்யும்படி கூறுகிறான். அப்போது கர்த்தர் நம் பாதைகளை செவ்வையாக்குவார்; விசாலமாக்குவார். நாம் சறுக்கி விழமாட்டோம். ஆம், அன்பானவர்களே, ஞானம், மறைவான கண்ணிகளுக்கு நம்மை விலக்கிக் காக்கும். உலகம் முழுவதும் பொல்லாங்கினால் நிறைந்திருக்கிறது; நாம் சறுக்கி விழுவதைக் காண உலகில் மக்கள் ஆவலாயிருப்பார்கள். ஆனால் தேவன் நம் பாதைகளை, நம் அடிகளை பாதுகாக்கிறார். அவர் நமக்கு செவ்வையும் விசாலமுமான பாதையை தருகிறார். நாம் அவரது கட்டளைகளைப் பின்பற்றும்போது, அவர்  திடநம்பிக்கையுடன் நடக்கும்படி அனுதினமும் நமக்கு வாக்குத்தத்தங்களையும் அருளுகிறார்.

வேதம், "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்" என்று கூறுகிறது (நீதிமொழிகள் 4:18). ஆம், நம் பாதைகள் நாளுக்கு நாள் பிரகாசமாகும். ஆண்டவர் நம்மை வழிநடத்துவதால் சறுக்கிவிடுவோமோ, விழுந்துவிடுவோமா என்று பயப்பட தேவையில்லை. இன்னொரு பக்கம் தாவீது, "உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்," என்று கூறியிருக்கிறான் (சங்கீதம் 18:29). நாம் கீழாவதில்லை; மாறாக, உயரே உயரே செல்வோம். தொடர்ந்து முன்னேற்றத்தைக் காண்போம். முயல் - ஆமை கதையைக் கேள்விப்பட்டிருப்போம். ஆமை, தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தது. அது நிற்காமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருந்தது. ஆம், நமக்கு தேவ ஞானம் இருந்தால், நாமும் நின்றுவிடாமல் முன்னேறுவோம். தேவனுடைய உதவியால், நீங்களும் முன்னேற முடியும். நாளுக்கு நாள் வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தைக் காண முடியும். ஆம், அன்பானவர்களே, இன்று கர்த்தரின் கரம் உங்கள்மேல் வந்து, மகா உயரங்களுக்கு உங்களைத் தூக்கும். நீங்கள் நடக்கும்போது, உங்கள் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை. சத்துரு வெள்ளம்போல வரும்போது, கர்த்தர் அவனுக்கு விரோதமாக கொடியேற்றுவார் (ஏசாயா 59:19). ஒரு சத்துருவும் உங்களுக்கு விரோதமாக வந்து, முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது. நீங்கள் கீழாகவே இருப்பதில்லை; உயரே உயர்த்தப்படுவீர்கள். அன்பானவர்களே, சந்தோஷமாயிருங்கள். தேவ கரம் உங்களை உயர்த்துவதற்கு வருகிறது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பலத்த கரம் என்மேல் வந்து, என்னை மகா உயரங்களுக்கு உயர்த்துவதாக. என் கையைப் பிடித்து, இடறவோ, விழவோ விடாமல் முன்னேறும்படி நடத்தும். என்னை தொட்டு, என் உடலிலுள்ள எல்லா சுகவீனத்தையும் சுகமாக்குவீராக. செயலிழந்த உறுப்புகளை மீண்டும் செயல்பட வைப்பீராக; எனக்கு நற்சுகத்தை அருளிச்செய்வீராக. எல்லா தோல்வியிலிருந்தும் என்னை தூக்கி, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படச் செய்வீராக. போட்டித் தேர்வுகளில் நான் வெற்றிபெறும்படி ஆசீர்வதித்து ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ். அதிகாரியாவதற்கு உதவுவீராக. வேலையில் எனக்கு உயர்வையும், வியாபாரத்தில் வளர்ச்சியையும் அளித்து என் குடும்பத்தைக் கனப்படுத்துவீராக. எல்லா வெட்கத்தையும் அவமரியாதையையும் அகற்றி, தலையை உயர்த்தி நடப்பதற்கு உதவவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.