"மிகுந்த பலன் உண்டு" (சங்கீதம் 19:11). இதுவே, தேவன் நமக்கு தரும் இன்றைய வாக்குத்தத்தம். நாம் தேவனுடைய கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளும்போது இந்த பலனை பெற்றுக்கொள்ளலாம். மேலும், "தேவனுடைய நியாயங்களை கைக்கொள்வதினால் நமக்கு மிகுந்து பலன் உண்டென்று" சங்கீதம் 19:8,9 கூறுகிறது. நாம் நமது இருதயத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, நீதியோடும், பயபக்தியோடும் வாழும்போது, அவரது நீதியினால் நமக்கு இந்த பலன் கிடைக்கிறது. வெறும் பலனை அல்ல. மிகுந்த பலனை தேவன் நமக்கு கொடுக்கிறார். நீங்கள் தேவனிடமிருந்து மிகுந்த பலனை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். கண்ணீரோடு விதைக்கும் நீங்கள், கெம்பீரத்தோடு அறுப்பீர்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும், தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான். ஆனந்தத்தோடேகூடிய மிகுந்த பலனை கொடுப்பதே உங்களுக்கான தேவ திட்டமாயிருக்கிறது.
தேவன் உங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நீங்கள் அளவில்லாமல் அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறார். ஆசீர்வாதத்தையோ, வருமானத்தையோ, உங்கள் மேலதிகாரியிடமிருந்து வரும் நன்றியையோ, பிறரிடமிருந்து வரும் புகழ்ச்சியையோ, பலநாள் உழைப்பிற்குப்பின் கிடைத்த வீட்டையோ மாத்திரமல்ல. தேவன் சொல்லுகிறார், "கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" என்று. தேவனால் மட்டுமே உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடியும். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன். தேவன் உங்களுக்கு மிகுந்த பலனை கொடுக்க ஆவலாயிருக்கிறார். மத்தேயு 19:29,30 கூறுகிறது, "என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரியையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்". அந்த நித்திய ஜீவனே தேவ இராஜ்ஜியம். தேவ இராஜ்ஜியமானது நீதியும், பரிசுத்த ஆவியினால் ஆன தேவ சமாதானமும், சந்தோஷமுமே ஆகும். இதையே நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென தேவன் விரும்புகிறார். உங்கள் கையின் பிரயாசத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றும், அன்பையும், சந்தோஷத்தையும் எல்லா இடங்களிலும் நீங்கள் உணர வேண்டுமென்றும், அனைவருடனும் சமாதானமாயிருந்து, சமாதானத்தோடு படுக்கைக்கு சென்று, சமாதானத்தோடு எழுந்திருந்து, சமாதானத்தால் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு, எல்லாவற்றிற்கும் மேலாக நீதியின் வாழ்க்கை வாழவேண்டுமென தேவன் விரும்புகிறார்.
ஆம், அனைவரும் உங்களை நீதிமான் என்பார்கள். சாத்தான்கூட உங்களை "இவன் நீதியின் மனிதன்", இவள் "நீதியின் மனுஷி" என்பான். பொல்லாத மனிதர்களும்கூட இவ்வாறு உங்களைப் பற்றி அறிக்கையிடுவார்கள். உங்களை நீதியில் வழிநடத்துகிறவரும், உங்கள் நீதியில் பிரியப்படுகிறவருமாகிய கிறிஸ்துவிலே நீங்கள் முற்றிலும் ஜெயம்கொள்ளுகிறவர்களாவீர்கள். தேவன் இன்று உங்களுக்கு இந்த ஆசீர்வாதத்தைக் கொடுத்து, உங்களை மிகுந்த பலனால் நிரப்புவாராக. தேவன் ஆபிரகாமுக்கு முன்பாக தோன்றி, "நான் உனக்கு மகா பெரிய பலனாயிருக்கிறேன், எனக்கு முன்பாக மனத்தாழ்மையுடனும், நீதியுடனும் நடந்துகொள். நானே உன்னோடு இருந்து, உன் பலனாயிருப்பேன்" என்றார். என்ன ஒரு பாக்கியம்.
ஜெபம்:
அன்பின் தேவனே, உம்முடைய வழியில் நடப்பவர்களுக்கு நீர் கொடுக்கும் இந்த ஆசீர்வாதத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நான் மனத்தாழ்மையோடும், பயபக்தியோடும், உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய உம்மிடம் வருகிறேன். நீதியினாலும், சமாதானத்தினாலும், பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தினாலும் என் வாழ்வை நிறைத்தருளும். நீர் எனக்கு ஆனந்தமான அறுவடையைத் தருவீர் என்ற விசுவாசத்தில் கண்ணீரோடு நான் விதைக்க எனக்கு உதவி செய்யும். நீர் கொடுக்கும் ஆசீர்வாதத்தை அனுபவிக்க, உம்முடைய பிரசன்னதினால் கிடைக்கும் மகிழ்ச்சியினால் என்னை நிரப்பும். எல்லா காலத்திலும், நன்றியோடும், சமாதானத்தோடும் என் இருதயம் நிரம்பி வழிய எனக்கு உதவி செய்யும். அனைவரும், என்னில் உம்முடைய நீதியைக் காண உதவி செய்யும். நீர் ஆபிரகாமிடம், "நான் உனக்கு மகா பெரிய பலனாயிருக்கிறேன்" என்று சொன்ன வார்த்தையை நான் எனக்கென்று எடுத்துக்கொள்ளுகிறேன். நீரே எனது பலன். நான் எப்போதும் உமக்கு கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!