எனக்கு அருமையானவர்களே, நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையானதும் விலையேறப்பெற்றதுமான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்" (ஏசாயா 65:23) என்ற அருமையான வசனத்தை தியானிக்கும்படியாய் உங்களை அழைக்கிறேன். தேவன் தரும் வாக்குத்தத்தம் எவ்வளவு ஆச்சரியமானது. ஆண்டவரால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படும்போது, அந்த ஆசீர்வாதம், உங்களோடு நின்று விடாது; உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் வரும் சந்ததியின் வாழ்விலும் அது தொடர்ந்திடும். தேவனுடைய ஆசீர்வாதங்கள் ஒருபோதும் தற்காலிகமானவையல்ல; அவை நித்தியமானவை; தலைமுறைகளுக்கானவை. கர்த்தர், ஆபிரகாமிடம், "உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்" (ஆதியாகமம் 13:16) என்று கூறினார். மீண்டும், "உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும்" (ஆதியாகமம் 16:10) என்று வாக்குப்பண்ணினார். தேவன், "உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்" (ஆதியாகமம் 22:17; 26:4) என்றும் கூறியுள்ளார். இந்த பரிபூரணம் நம் அன்பு தேவனின் உள்ளத்தைக் காட்டுகிறது. தம்மேல் அன்புகூர்ந்து, முழு மனதாய் நம்புகிறவர்களுக்கு தம் ஆசீர்வாதங்களைப் பெருகப்பண்ண அவர் பிரியப்படுகிறார்.
கர்த்தர், "தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்" என்று கூறுகிறார். (2 சாமுவேல் 22:51; சங்கீதம் 18:50). இரக்கம் தொடரும் என்பதைக் குறித்த எவ்வளவு மகத்தான வாக்குத்தத்தம் இது! ஆபிரகாமை, ஈசாக்கை, யாக்கோபை, தாவீதை நினைவுகூர்ந்த அதே தேவன் உங்களையும் உங்கள் சந்ததியையும் நினைப்பார். வேதம், "அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்" (சங்கீதம் 25:13) என்று கூறுகிறது. நீங்கள் கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடந்தால், உங்கள் உண்மைக்கான பலனை உங்கள் பிள்ளைகள் அறுவடை செய்வார்கள். கர்த்தர், அவர்களை படிப்பில், வேலையில், குடும்பங்களில் ஆசீர்வதிப்பார். அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் கனி கொடுக்கும்படியும் செழிக்கும்படியும் அவர் செய்வார். வேதம், "ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்" (சங்கீதம் 22:30) என்றும் சொல்கிறது. உங்கள் பிள்ளைகளும் எழுந்து தேவனை தொழுதுகொண்டு அவரது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள் என்பதே இதன் அர்த்தம். இன்று நீங்கள் தேவனோடு நடக்கும்போது உங்கள் குடும்பத்தையும் சந்ததியையும் அவர் ஆசீர்வதிப்பார் என்று அறிவது எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது. அன்பானவர்களே, ஆண்டவரையே தொடர்ந்து பற்றிக்கொள்ளுங்கள். உபத்திரவங்கள் நேரிடும்போது மனந்தளராதிருங்கள். உங்கள் விசுவாசம், உங்கள் பிள்ளைகளின் நாளைய ஆசீர்வாதத்திற்கான விதையாகும்.
அன்பானவர்களே, ஒரு தனிப்பட்ட வாழ்க்கைச் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் இரண்டு பிள்ளைகளை இழந்தேன். அனைவரும், "இப்படி இழப்புகள் ஏற்படுகிறதே, தேவனை தேடுகிறதால் என்ன பயன்?" என்று கூறி கேலி செய்தார்கள். அவர்கள் வார்த்தைகள் என்னை அதிகமாய் வேதனைக்குள்ளாக்கின. ஆனாலும், நான் தேவனுடைய வாக்குத்தத்தங்களை விட்டுவிடவில்லை. நான் அவரை இறுகப்பற்றிக்கொண்டேன். என் துக்கத்தை அவர் சந்தோஷமாக மாற்றுவார் என்று விசுவாசித்தேன். ஆண்டவர், இரண்டு அழகிய பிள்ளைகளைக் கொடுத்து என்னை ஆசீர்வதித்தார். இன்று என் குடும்பம் அவரது உண்மைக்கு ஜீவனுள்ள சாட்சியாக விளங்குகிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப்பிள்ளைகள் எல்லோரும் தேவனுக்கு ஊழியம் செய்து மகிமைப்படுத்தும்வண்ணம் எங்களை பூரணமாய் ஆசீர்வதித்துள்ளார். உண்மையாகவே, கர்த்தரின் ஆசீர்வாதம் ஐசுவரியவானாக்குகிறது; அதனோடே வேதனை கூட்டப்படாது (நீதிமொழிகள் 10:22). அன்பானவர்களே, என்னை உயர்த்திய அதே தேவன், உங்களையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் எவற்றையெல்லாம் இழந்தீர்களோ, எல்லாவற்றையும் அவர் திரும்ப தருவார். நீங்கள் வாஞ்சிக்கிறவற்றை அவர் நிறைவேற்றுவார். ஆண்டவர் உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார் என்று விசுவாசியுங்கள். வேதம், "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்," என்று கூறுகிறது. வாருங்கள், நாம் ஜெபத்தில் ஆண்டவரைப் பற்றிக்கொள்ளுவோம். அவர் உங்களை நினைவுகூர்வார்; உயர்த்துவார்; உங்களையும் உங்கள் சந்ததியையும் பூமியிலே ஆசீர்வாதமாக வைப்பார்.
ஜெபம்:
அன்பின் பரம பிதாவே, என்னையும் என் சந்தானத்தையும் ஆசீர்வதிப்பதாக நீர் வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் உடன்படிக்கையை நித்தியமாய் நினைவுகூர உண்மையுள்ள தேவனாய் நீர் இருக்கிறீர். இன்று உம் முன்னே அழுகிற என்னை நினைவுகூரும். எல்லா வேதனையையும், எல்லா இழப்பையும், என் இருதயத்தின் எல்லா வாஞ்சையையும் நீர் அறிந்திருக்கிறீர். உம் அருமையான கரங்களை என்மீது வைத்து என்னை பூரணமாய் ஆசீர்வதித்தருளும். ஆபிரகாமையும் தாவீதையும் ஆசீர்வதித்ததுபோல என் ஆசீர்வாதத்தையும் பன்மடங்காய் பெருகப்பண்ணும். என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் உம் தயவிலும் கிருபையிலும் நடப்பார்களாக. என் வாழ்வில் காணப்படும் எல்லா துக்கத்தையும் சந்தோஷமாகவும், எல்லா பெலவீனத்தையும் பெலனாகவும் மாற்றும். இப்போதே அப்படிச் செய்வதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


