அன்பானவர்களே, இன்றைக்கு, "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்" (ஏசாயா 61:7) என்ற வசனத்தின் வாயிலாக கர்த்தர் பேசுகிறார். நம் தேவன் சீர்ப்படுத்தலின் தேவன். இந்த வசனம் தேவன் நம் வாழ்வை எப்படி முற்றிலும் மறுரூபமாக்குவார் என்று கூறுகிறது. வேதம், "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்" (சங்கீதம் 126:5,6) என்று கூறுகிறது. எல்லா வெறுமையையும் தேவன் ஆசீர்வாதங்களால் பூரணமாக நிரப்புவார். நாம், "என் கையில் ஒன்றுமேயில்லை," என்று அழலாம். ஆண்டவரின் கரத்திலிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்காக நெடுங்காலமாக முறையிட்டுக்கொண்டே இருக்கலாம். தேவன் நம் வாழ்வில் எல்லாவற்றையும் இரட்டிப்பாக திரும்ப தருவார் என்பது நிச்சயம்.

தேவன் எப்போதும் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மேலாக கொடுக்கிறார். அவர், அவ்வளவு உதாரகுணமுள்ள தேவன். மனுஷன், அவனுக்கு நாம் தந்ததை திரும்ப தருவான். ஆனால், தேவன் இரட்டிப்பான பங்கை நமக்கு திரும்ப தருவார்.

ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடாவைச் சேர்ந்த அருண் குமார் என்ற சகோதரரின் அழகிய சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவருக்கும் ஷர்மிளா என் பெண்ணுக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1992ம் ஆண்டில் அவரது தாத்தா அவரை இயேசு அழைக்கிறார் இளம் பங்காளராக இணைத்தார். அப்போதிலிருந்து அவர் தன் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் கண்டார். பத்தாம் வகுப்பு தேர்விலும் இன்டர்மீடியட் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். தான் எப்படி தேர்வில் வெற்றி பெற்றேன் என்று அவரே ஆச்சரியப்பட்டார். வேலைக்காக அவர் விண்ணப்பித்தபோது, வாய்ப்புகள் அற்புதவிதமாக திறந்தன. தான் செல்லுமிடங்களிலெல்லாம் தேவனுடைய தயவுக்கு சாட்சியாக விளங்க தொடங்கினார். 2014ம் ஆண்டில் அருண் குமார் வாயு தொல்லையால் அவதிப்பட்டார். ஆனாலும் தினமும் இயேசு அழைக்கிறார் ஊழியத்தைத் தொடர்புகொண்டு ஜெபித்து வந்தார். தேவ கிருபையால் அவர் முற்றிலும் குணமானார். பிறகு, அவர் நிலம் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டார். மார்க்கெட்டிங் மானேஜரிலிருந்து பொது மேலாளராக உயரும் அளவுக்கு அவரது வேலையில் உயர்ந்தார். கோவிட் 19 தாக்கம் வரைக்கும் எல்லாம் நன்றாக நடந்தது. 2020 - 2024க்கு இடைப்பட்ட காலத்தில் அவரது தொழில் தடுமாறியது. குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும், தேவன் தொடர்ந்து அவர் வாழ்வில் செயல்பட்டு வந்தார். 2024 டிசம்பர் 6ம் தேதி என் கணவர் ராஜமுந்திரிக்கு சென்றபோது, அருண் குமார், தன்னார்வ ஊழியராக உதவி செய்தார். என் கணவர், தன்னார்வ ஊழியம் செய்ய யாவருக்காகவும் ஜெபித்தார். அந்த ஜெபமே அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அவரது தொழில் திரும்பவும் வளர்ச்சியடைய தொடங்கியது. ஆசீர்வாதங்கள் பொழிந்தன. அவர் விசுவாசத்தில் உறுதியாக வளர்ந்தார். இவையெல்லாம் தேவ இரக்கத்தினால் நடந்தன. இன்றைக்கு ஓர் இளைஞராக அவர் ஆண்டவருக்கென்று சிறந்து விளங்குகிறார்.

தேவன் உங்களுக்கும் இப்படிச் செய்யமாட்டாரா? இயேசுவிடம் வாருங்கள். உங்கள் இருதயத்தையும் நேரத்தையும் இயேசுவுக்குக் கொடுங்கள். ஒருபோதும் மனந்தளராதிருங்கள். இயேசுவின்மேல் விசுவாசம் கொண்டிருங்கள். ஆண்டவர், உங்களுக்கு இரட்டிப்பாய் தருவார். கர்த்தரை தேடுகிறவர்கள் ஒன்றிலும் குறைவுபடமாட்டார்கள். உங்கள் வாழ்வில் விருத்தியை மட்டுமே காண்பீர்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, என் வெட்கம் எல்லாவற்றையும், முறிந்துபோனவற்றையும் உம்மிடம் கொண்டு வருகிறேன். என் கண்ணீரை கெம்பீர சத்தமாக மாற்றும். ஆண்டவரே, நான் இழந்தவற்றை திரும்ப தந்தருளும். வெறுமையான என் கைகளை உம் ஆசீர்வாதங்களினால் நிறைத்தருளும். நான் பெலவீனமாக உணரும் தருணங்களில் என் விசுவாசத்தை பெலப்படுத்தும். உம் வேளையையும் இரக்கத்தையும் நான் நம்புகிறேன். இரட்டிப்பான ஆசீர்வாதத்தை தருவதாக நீர் வாக்குப்பண்ணியுள்ளதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அதை சந்தோஷமுள்ள இருதயத்துடன் இன்றைக்குப் பெற்றுக்கொள்கிறேன் என்று இயேசுவின் இணையற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.