அன்பானவர்களே, "என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடே கூடவரும்படி சேர்த்துக்கொண்டேன்" (எஸ்றா 7:28) என்று வேதத்தில் வாசிக்கிறோம். எஸ்றா, மார்க்கத்தையும், தேவனுடைய வசனங்களையும் சீர்ப்படுத்தினான். ஓர் ஆசாரியனான அவன் தேவ தயவை அறிக்கையிட்டான். இந்த உலகின் மக்கள், "இந்த ஆசீர்வாதத்தை பெறுவது எனக்கு அதிக அதிர்ஷ்டம்," என்று கூறும்போது, தேவ பிள்ளைகள், "தேவ தயவு என்மேல் உள்ளது," என்று சொல்லுவார்கள். கர்த்தர், தங்களுக்கு தேவனுடைய ஆலயத்தை மறுபடியும் கட்டுவதற்கும், அதன் பாழான ஸ்தலங்களை பழுதுபார்ப்பதற்கும் புது உயிரைக் கொடுத்திருப்பதாக அவன் கூறுகிறான் (எஸ்றா 9:9). இஸ்ரவேல் மக்கள் பாபிலோனில் இருந்த அந்தக் காலகட்டத்தில் அது எவ்வளவு பெரிய தயவு! அவர்கள் திரும்பிய பிறகு, தேவன் இரண்டாவது ஆலயத்தைக் கட்டும் பணியை எஸ்றாவுக்குக் கொடுத்தார். அவன் தேவனுடைய வீட்டைக் கட்டுகிறவனும் பழுதுபார்க்கிறவனுமாக மாறினான்.
அவ்வண்ணமே, Dr. பால் தினகரன் குடும்பத்தினர், 2026ம் ஆண்டை திரும்ப கட்டுவதற்கான ஆண்டாக அறிவித்துள்ளோம். தேவன், " உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்" (ஏசாயா 58:12) என்ற வசனத்தைக் கொண்டு எங்களிடம் தெளிவாகப் பேசியுள்ளார். தேவன், தம் ராஜ்யத்தை மறுபடியும் கட்டுவதற்கான பணியை உங்களுக்குக் கொடுத்துள்ளார். நம் தேவன், இல்லாவற்றை இருக்கிறவைபோல அழைக்கிறவராயிருக்கிறார். அவர் உங்களைக் கட்டுகிறவராக்குவது மாத்திரமல்ல, உங்கள் வாழ்வில் இடிந்துபோன எல்லாவற்றையும் மறுபடியும் கட்டும்படியும் செய்வார். கர்த்தர், உங்களை பெயரையும் மாற்றுவார். நீங்கள் ஒன்றுமில்லாதவன்(ள்) அல்லது பிரயோனஜனமில்லாதவன்(ள்) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், தேவ தயவு உங்கள்மேல் வரும்போது, உங்கள் பெயரை எல்லாவற்றையும் கட்டுகிறவன்(ள்) என்று மாற்றுவார். எத்தன் என்று அர்த்தங்கொண்ட யாக்கோபு என்று பெயரை தேவன், தேவ பிரபு என்று அர்த்தங்கொண்ட இஸ்ரவேல் என்று மாற்றியதுபோல, உங்கள் வாழ்க்கையையும் அவர் திரும்பக் கட்டுவார் (ஆதியாகமம் 32:28).
ஹைதராபாத்தை சேர்ந்த ஜோதி என்ற சகோதரியின் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள், தன் வாழ்க்கை 2021ம் ஆண்டில் எதிர்பாராத, வேதனையான திருப்பத்தை சந்தித்ததாக கூறுகிறார்கள். புற்றுநோயால் மூன்று ஆண்டு காலம் பாடுபட்டார்கள். அவர்களுக்கு புற்றுநோய் நான்காம் கட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது; தீவிரமான மருத்துவ சிகிச்சையின் வழியாக கடந்து சென்றார்கள். எதிர்காலத்தைக் குறித்து அதிகமாய் கவலைப்பட்டார்கள். சரீர வேதனையோடு கூட கடும் பொருளாதார பாரமும் சேர்ந்துகொண்டது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி ஆலோசனை கூறினார்கள். அதற்கு ஏறக்குறைய 2.2 லட்சம் செலவாகும் என்றும் கூறினார்கள். அவர்கள் குடும்பத்தினருக்கு அந்தத் தொகை இயலாத ஒன்றாக தோன்றியது. அவர்கள் குழந்தைக்கு எட்டு மாதமே ஆகியிருந்தது. தன் குடும்பத்தையே அவர்களுக்குக் கவனிக்க இயலவில்லை. சிரமமான இந்த நேரத்தில் அவர்கள் தன் வேதனையையும் போராட்டத்தையும் குறிப்பிட்டு Dr. பால் தினகரனுக்கு ஜெப விண்ணப்பம் ஒன்றை எழுதினார்கள். அவர்களுக்குச் சென்று சேர்ந்த நேர்த்தியான பதிலால் அவர்கள் உள்ளம் நம்பிக்கையாலும் சமாதானத்தாலும் நிரம்பியது. அறுவைசிகிச்சை செலவு உள்பட அத்தனை மருத்துவ செலவுகளையும் கொடுக்குமளவுக்கு பொருளாதார உதவி கிடைத்தது. உண்மையிலேயே தேவ தயவே அதற்குக் காரணம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தொடர் பிரார்த்தனையால் அவர்கள் புற்றுநோயிலிருந்து பூரண குணம் பெற்றார்கள். அந்த நோய்க்கான அறிகுறியே இல்லை. மருத்துவ சிகிச்சையால் முடியாததை, ஜெபத்தாலும் விசுவாசத்தாலும் தேவன் பூரணமாக முடித்துவைத்தார். தற்போது அவர்கள் சாட்சியாக வாழ்கிறார்கள். நம் தேவன் எவ்வளவு நல்லவர்! கர்த்தர், இந்த அன்பு சகோதரியின் வாழ்க்கையை திரும்பவும் கட்டியெழுப்பினார். புற்றுநோயின் நான்காம் கட்டத்தில் இருந்த அவர்களை குணமாக்க மனுஷனால் முடியாத நிலையில் தேவ தயவு அவர்கள்மேல் இறங்கியதால் அற்புத சுகத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அன்பானவர்களே, இதேபோல, ஆண்டவரின் கரம் உங்களோடும் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர்தாமே எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவாராக.
ஜெபம்:
பரம தகப்பனே, என் வாழ்வில் விளங்கும் உம் தயவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எஸ்றாவுடன் நீர் இருந்ததுபோல, உம் கரம் என்மேலும் இருப்பதாக. இடிந்தவற்றை எழுந்து மறுபடியும் கட்டுவதற்கான தைரியத்தை எனக்குத் தந்தருளும். என் வாழ்வில் சத்துரு சேதப்படுத்திய அனைத்தையும் திரும்ப தந்தருளும். ஆண்டவரே, நான் கட்டுகிறவனா(ளா)க, சீர்ப்படுத்துகிறவனா(ளா)க, திறப்பானதை அடைக்கிறவனா(ளா)க இருக்கும்படி என்னை பெலப்படுத்தும். உம் வாக்குத்தத்தங்கள் என் வாழ்வில் உயிர்பெறுவதாக. உம் ராஜ்யத்தை மறுபடியும் கட்டுவதற்கு என்னை பயன்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில் உம் தயவைப் பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


