அன்பானவர்களே, இயேசு அழைக்கிறார் செயலியையோ, காலண்டரையோ நீங்கள் பார்த்தால் இன்றைக்கான வாக்குத்தத்தத்தைக் காணலாம். தேவன் அதை உங்களுக்கு நிறைவேற்றுவார். நாம், "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்" (யாத்திராகமம் 16:4) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவனின் இந்த அற்புத அருட்கொடைக்காக நீங்கள் காத்துக்கொண்டிருக்கலாம். அன்பானவர்களே, அது வருகிறது. விசுவாசத்தில் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனை நம்பியிருக்கிறீர்கள்; அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்; அவரது கட்டளைகளைக் கைக்கொண்டிருக்கிறீர்கள்; பாதை கடினமாக தோன்றினாலும் அவரோடு நடக்கிறீர்கள். அது வனாந்தரத்தின் வழி, வறண்ட பாதை என்று நீங்கள் அறிந்திருந்தாலும், பயணத்திற்கான பணம் உங்களிடம் இல்லாவிட்டாலும், நீங்கள் கீழ்ப்படிந்து, நம்பி, ஆண்டவரைப் பின்பற்றுகிறீர்கள். இன்று, தேவன் உங்கள் பெரிய தேவையின் நடுவில் உங்களைக் கனம்பண்ணுவார். அவர் அற்புதவிதமாக உங்களுக்கு வேண்டியதை அருளிச்செய்வார். இன்றிலிருந்து எப்போதும் உங்களுக்கு அருளுகிறவராக இருப்பார்.

இஸ்ரவேலர் வனாந்தரத்தில் பரலோகத்திலிருந்து அப்பத்தைப் பெற்றதுபோல, எப்படி ஏற்றநேரத்தில் கொடுப்பது என்பதை தேவன் அறிந்திருக்கிறார். ஒரு குடும்பத்தினர் ஆதரவற்றோர் இல்லத்தை நடத்திவந்தனர். மிகவும் எளிய பின்னணியைக் கொண்ட அவர்கள், அந்த இல்லத்தை நடத்துவதற்கு தேவனையே பெரிதும் சார்ந்திருந்தனர். ஒருநாள் காலையில், அநேக பிள்ளைகள் மிகுந்த பசியோடு காலை உணவுக்காகக் காத்திருந்தனர். ஆனால், உணவோ, அதை வாங்குவதற்கான பணமோ இல்லை. என்ன செய்வதென்று தெரியாத நிலையில், "ஆண்டவரே, நீரே எங்களுக்கு அருளிச்செய்கிறவர். நீரே தரிசனம் கொடுத்தீர். தயவுசெய்து எங்களுக்குத் தந்தருளும்," என்று ஜெபித்தார்கள். அதே தருணத்தில், அழைப்பு மணி ஒலித்தது. அந்த இல்லத்தின் வாசலிலேயே ஒரு பால் வண்டி நின்றிருந்தது. அதன் ஓட்டுநர், "வண்டி பழுதடைந்துவிட்டது. இவ்வளவு பாலையும் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. வண்டியை பழுது பார்க்க பல மணி நேரம் ஆகும்போல் தெரிகிறது. அவ்வளவு நேரம் கடந்தால் பால் கெட்டுப்போகும். நீங்கள் இந்தப் பாலை எடுத்துக்கொள்ள முடியுமா?" என்று கேட்டார். அதை எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சினார். அவர்கள் ஆண்டவரை துதித்தனர். அன்று தேவன் பிள்ளைகளின் வயிற்றை பாலினால் நிரப்பினார்.

அன்பானவர்களே, ஆண்டவர் உங்களைப் பார்க்கிறார். அவரே உங்களுக்கு வேண்டியவற்றை அருளுகிறவராகவும் இருக்கிறார். உங்களுக்குச் சொந்த வீட்டைக் கொடுப்பார்; கடனின் மத்தியிலும் உங்களுக்குக் கொடுப்பார்; மிகுந்த தேவையின் சமயத்தில் வேண்டியவற்றை அருளிச் செய்வார். நீங்கள் தேடும் அனுமதி வந்துகொண்டிருக்கிறது. நீங்கள் காத்திருக்கும் பதில் வந்துகொண்டிருக்கிறது. தம்மை நம்புகிறவர்களை தேவன் ஒருபோதும் கைவிடுகிறதில்லை. பரலோகத்திலிருந்து அப்பத்தை வருஷிக்கப்பண்ணின தேவன் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் இன்று சந்திப்பார் என்று நம்புங்கள்; அவரையே விசுவாசித்திடுங்கள். நாம் ஜெபிப்போமா?

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, எனக்கு அருளுகிறவராக, வாழ்வின் எல்லா காலத்திலும் என் ஒரே ஆதாரமாக விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன். விசுவாசத்தினால் உம்மோடு நடக்கவும், பாதை தெரியாதபோதும் உம் சத்தத்துக்குக் கீழ்ப்படியவும் தீர்மானித்துள்ளேன். நீரே என் வழி. ஆகவே, வழியில்லாததுபோல் தோன்றும் இடத்தில் எனக்காக ஒரு வழியை உண்டாக்கும். இப்போது எனக்குத் தேவையானவற்றை, பொருளாதார ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உதவும். ஆண்டவரே, நான் எழுந்து உம் சித்தத்தை பெலத்தோடும், சந்தோஷத்தோடும் செய்யும்படி என் உடலுக்குச் சுகத்தை அருளும். எல்லா தடைகளும் அகற்றப்பட்டு, உம் கிருபை எனக்கு முன் செல்வதாக. என் விசுவாசத்தைக் கனப்படுத்தி, என் தேவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்வதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.