எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவர்தாமே எல்லா இக்கட்டுகளிலிருந்தும் உங்களை விடுவித்து ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கு, தேவன், "இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன்" (யோசுவா 5:9) என்ற வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுத்திருக்கிறார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தியரால் பாடுகளை அனுபவித்தனர். அவர்கள் அடிமைகளாக கடும் வேலைகளை செய்ய நேரிட்டது. ஆகவே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அந்த சமயத்தில் கர்த்தர் மோசேயை அனுப்பி அற்புதமான வழியில் அவர்களை விடுவித்தார். அவ்வண்ணமாக, தேவ பிள்ளையாகிய நீங்களும் இவ்வுலகில் உபத்திரவங்கள், பாடுகளின் வழியாக கடந்து செல்லலாம். எல்லாவிதமான நிந்தைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
வேதாகம காலத்தில் யாக்கோபின் மனைவியாகிய ராகேல், தனக்கு பிள்ளையில்லாததினால் நிந்தையை அனுபவிப்பதாகக் கூறி அழுதாள். தேவன் அவளுடைய அழுகையைக்கு செவிகொடுத்து இரண்டு பிள்ளைகளைக் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார். புதிய ஏற்பாட்டில் தேவ பக்தியுள்ள சகரியா என்ற மனிதனை பார்க்கிறோம். அவனுடைய மனைவிக்கும் பிள்ளையில்லாதிருந்தது. ஒருவேளை, நீங்களும் குழந்தை பாக்கியமில்லாமல், வேலையில்லாமல், வியாபாரத்தில் லாபமில்லாமல் இருப்பதால் நிந்தை அடைந்திருக்கலாம். ஆண்டவர் இயேசு தாமே நிந்தையை சகித்த சிலுவையை எப்போதும் நோக்கிப் பாருங்கள். அவர் பிதாவுக்கு முன்பாக தன்னை தாழ்த்தினார்; சிலுவையில் தொங்கினார்; சொந்த ஜீவனையே கொடுத்தார்; எல்லாவற்றையும் தியாகம்பண்ணினார். அவர் நமக்காக சிலுவையில் எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட்டார். பிறகு நாம் ஏன் நிந்தையை அனுபவிக்கவேண்டும்? இயேசுவை நோக்கிப் பார்த்து, "ஆண்டவரே, நீர் நிந்தையின் வழியே கடந்துசென்றீர். இப்போது நான் நிந்தையின் வழியே செல்கிறேன். ஆண்டவரே, தயவாய் என்னை விடுவியும். தகப்பனே, என்னோடு கூட இரும். நிந்தையிலிருந்து வெளியே வர உதவி செய்யும்," என்று கூப்பிடுவோம்.
நிந்தைகள் வரும். உலகம் இருளால் நிறைந்திருக்கிறது. இது நன்றியில்லாத உலகம். சிலவேளைகளில் நாம் யாருக்கு உதவிசெய்து, பராமரித்தோமோ அவர்களிடமிருந்து நிந்தை வரும். அதுபோன்ற நேரங்களில் நாம் என்ன செய்யவேண்டும்? சிலுவையை நோக்கி பார்க்கவேண்டும். முழங்காற்படியிட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, "தகப்பனே, என்னை இந்த நிந்தையிலிருந்து, எல்லாவித பலவீனங்களிலிருந்து, பாடுகளிலிருந்து விடுவியும்," என்று கூப்பிடுவோம். நாம் அப்படி கூப்பிடும்போது, தாம் ஏற்கனவே நிந்தையை அனுபவித்ததால், நம்முடைய வேதனையை ஆண்டவர் பூரணமாக புரிந்துகொள்வார். இப்போதும் அன்பானவர்களே, ஜெபத்தில் ஆண்டவரை நோக்கிப் பார்ப்போமா? எவ்வித நிந்தையாக இருந்தாலும் தேவனால் உங்கள் வாழ்க்கையிலிருந்து அதை அகற்ற முடியும். ஆண்டவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி ஜெபியுங்கள். அவர் எல்லா நிந்தையிலிருந்தும் உங்களை விடுவிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் கண்ணீரைக் காண்கிறவராக, என்னுடைய எல்லா நிந்தையையும் புரிந்துகொண்டவராக இருக்கிறீர். நிந்தையால், துக்கத்தால், நிராகரிப்பால் பாரப்பட்ட இருதயத்துடன் உம் முன்னே இன்றைக்கு வருகிறேன். எகிப்தில் உம் பிள்ளைகளின் நிந்தையை புரட்டிப்போட்டதுபோல, என் வாழ்விலிருந்து எல்லா பாரத்தையும் அகற்றும். ஆண்டவரே, எனக்காக சிலுவையில் எல்லா நிந்தையையும் நீர் சகித்தீர். ஆகவே, என்னை முழுவதுமாக புரிந்துகொள்வீர் என்று அறிந்திருக்கிறேன். தகப்பனே, இப்போது என் வெட்கத்துக்கு, தோல்விக்கு காரணமான எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் என்னை விடுவிக்கும்படி மன்றாடுகிறேன். நீர் மாத்திரமே எனக்கு சகாயரும் நம்பிக்கையுமாயிருக்கிறீர். உம் பரிசுத்த ஆவியானவர் சமாதானத்தினாலும் பெலத்தினாலும் என்னை நிரப்பி சீர்ப்படுத்துவாராக. என் துக்கத்தை சந்தோஷமாகவும் நிந்தையை கனமாகவும் மாற்றுவீர் என்று நம்புகிறேன். என்னை அதிகமாய் நேசிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.