"என் கிருபை உனக்குப் போதும், பெலவீனத்திலே என் பெலன் உனக்கு பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் 12:9) என்று ஆண்டவர் சொல்லுகிறார். பிரியமானவர்களே,"என் மாமிசத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை என்னைவிட்டு எடுத்துப்போடும்" என்று பவுல் மூன்றுதரம் கர்த்தரிடத்திலே வேண்டிக்கொண்டான். ஆனால், ஆண்டவரிடத்திலிருந்து அவனுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் ஆண்டவர், "என் கிருபை உனக்குப் போதும்; பெலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும்" என்று சொல்லுகிறார்.
"வலியில்லாமல் ஆதாயம் இல்லை" என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு உபத்திரவங்கள் வரும்பொழுது, சில வேளைகளில் ”ஏன் எனக்கு இப்படி நடக்கிறது?" என்று ஆண்டவரிடத்தில் நாம் கோபித்துக்கொள்கிறோம். இந்த முள்ளை என்னைவிட்டு எடுத்துப்போடும் என்று சொல்லுகிறோம். சில வேளைகளில், நீர் எனக்கு உதவி செய்யாவிட்டால், என்னுடைய வலியை எடுத்துப்போடாவிட்டால், நான் உமக்கு ஊழியம் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறோம். அதினிமித்தம் என்ன நடக்கிறது? நாம் மனஅழுத்தத்திற்கு போய்விடுகிறோம். பிசாசு நம்மை இருளுக்குள் கிடத்தி விடுகிறான். அப்படியில்லை பிரியமானவர்களே! நாம் அநேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றுதான் வேதம் சொல்லுகிறது. நாம் உபத்திரவத்தை பொறுமையோடு சகிக்கும்பொழுது, ஆண்டவருடைய கிருபை நம்மை தாங்குகிறது. "என் கால் சருக்குகிறது என்று நான் சொல்லும்பொழுது, உம்முடைய கிருபை என்னை தாங்குகிறது" என்று தாவீது சொல்லுகிறான். அதுபோலவே, "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது" என்று நாமும் சொல்லும்பொழுது, கர்த்தருடைய கிருபை நம்மை தாங்குகிறது.
பிரியமானவர்களே, இன்றைக்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற முள், சரீரப்பிரகாரமாக, மனதளவிலே, ஆன்மீக வாழ்க்கையில் ஏற்படுகிற ஒரு காரியமாக இருக்கலாம். ஆனால், தேவன் எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். ஆகவேதான், என் கிருபை உனக்குப் போதும் என்று அவர் சொல்லுகிறார். அவருடைய கிருபையானது, எப்பேர்ப்பட்ட காரியத்தையும் ஆற்றக்கூடிய மிகுந்த வல்லமையுள்ளதாயிருக்கிறது. அவருடைய கிருபையானது நம்மை சுமந்துசெல்கிறது. நம்மை கர்த்தருக்கு தகுதியுள்ள பிள்ளைகளாக மாற்றுகிறது. ஆகவேதான், எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்று பவுல் சொல்லுகிறார் (2 கொரிந்தியர் 3:5). ஒரு ஜாமக்காரன், எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்காக காத்துக் கிடக்கிறான் (சங்கீதம் 130:6). அதுபோலவே, நாமும் ஆண்டவருடைய கிருபைக்காக காத்திருப்போம். நமக்கு வருகிற உபத்திரவங்கள் எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்து, கர்த்தருடைய கிருபைக்காக அவருடைய பாதத்திலே விழுந்து கிடப்போம். அப்பொழுது அவருடைய கிருபை நமக்கு போதுமானதாய் இருக்கும். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவ்வளவு அதிகமாய் கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு அவருடைய கிருபை அதிகமாய் இருக்கிறது. அப்படிப்பட்ட தெய்வீக கிருபையை கர்த்தர் நமக்காக வைத்திருக்கிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய கிருபை எனக்கு போதுமானதாய் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய வேதனைகள், பாடுகள் மத்தியில் நான் வழுக்கி விழாதபடி உமது கிருபை என்னை தாங்கிக்கொள்ளட்டும். உம்முடைய கிருபையினால் என்னை சூழ்ந்துகொள்வீராக. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். கர்த்தரோ, இவைகள் எல்லாவற்றிலிருந்தும் அவர்களை விடுவிப்பார் என்று வேதம் சொல்லுகிறபடி, என்னுடைய வேதனைகள் யாவற்றினின்றும் எனக்கு விடுதலையைக் கட்டளையிடுவீராக. பெரிய வெளிச்சத்தைக் காணும்படி செய்யும். என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில் உம்முடைய ஆறுதல்கள் என்னை தேற்றுகிறது என்று தாவீது சொன்னதுபோல, உம்முடைய ஆறுதல் என்னைத் தேற்றுவதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.