அன்பானவர்களே, இன்றைக்கு, ஆண்டவர், "நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது" (நீதிமொழிகள் 23:18) என்ற வசனத்தை உங்களுக்கு வாக்குத்தத்தமாக அளிக்கிறார். இந்த வார்த்தையைப் பெற்றுக்கொள்வது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! உங்கள் ஜெபம் ஒன்றும் வீணாய்ப் போகாது என்று அறிந்திருக்கிறேன். ஒருவேளை ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் நெடுங்காலம் காத்திருக்கலாம். ஆனால், ஆண்டவர் இன்று, "நிச்சயமாகவே உனக்கு நம்பிக்கை உண்டு," என்று கூறுகிறார். நாம் தேவனிடமிருந்து ஒரு வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்போது, சந்தோஷம் கிடைக்கிறது. ஆகவேதான் வேதம், "ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது," (நீதிமொழிகள் 24:14) என்று கூறுகிறது. ஏற்றநேரத்தில் தேவனுடைய வார்த்தை வந்து நம் உள்ளங்களைப் பெலப்படுத்தி, நம்மை நம்பிக்கையால் நிரப்புகிறது.

ஒருமுறை நாங்கள் நாகலாந்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஆண்டவர், "இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்" (சங்கீதம் 127:4) என்ற வசனத்தை எனக்குக் கொடுத்தார். அந்த நாட்களில் தேவன் சாமுக்கும் ஷில்பாவுக்கும் ஒரு குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதிக்கவேண்டுமென்று நாங்கள் குடும்பமாக, ஜெபித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறபடியால், எங்கள் அர்ப்பணிப்புக்கான ஈவாக, நாகலாந்தில் ஆண்டவர் ஷில்பாவை ஆசீர்வதித்தார். ஷில்பா அன்றைக்கே கருவுற்றிருப்பாள் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். அன்றிலிருந்து, ஷில்பா சோதனைகளைச் செய்து தான் கருவுற்றிருப்பதை அறிந்துகொண்டாள். சாமும் ஷில்பாவும் அதை எங்களிடம் கூறாமல் இரகசியமாய் வைத்திருந்தனர். ஆனால், ஆண்டவர் அதை எனக்கு வெளிப்படுத்தினார். நாங்கள் நாகலாந்திலிருந்து திரும்பியபோது, மலையின்மேல் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தன. நான் பயந்துபோய், "நாம் ஷில்பாவுக்காக விசேஷமாக ஜெபிப்போம்," என்று என் கணவரிடம் கூறினேன். ஆண்டவர், தாயையும் குழந்தையையும் காத்துக்கொள்ளவேண்டுமென்று நான் ஜெபித்தேன்.

அன்றைக்கு நான் பெற்றுக்கொண்ட அந்த வார்த்தை எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. அது என் ஆத்துமாவுக்கு தேனைப்போல் இருந்தது. தேவ வார்த்தையை நான் முழுவதுமாக விசுவாசித்தேன். ஆண்டவர் ஏற்றநேரத்தில் வார்த்தையைக் கொடுத்து, குழந்தையையும் தாயையும் பாதுகாத்தார். இப்போது ஆண்டவர் எங்களுக்கு இரண்டு அழகான பேரப்பிள்ளைகளைக் கொடுத்திருக்கிறார். ஏற்றநேரத்தில் தேவனிடமிருந்து வார்த்தையைப் பெற்றுக்கொள்வது எவ்வளவு சந்தோஷம்! அன்பானவர்களே, இன்று நீங்களும் தேவனிடம் ஒரு குழந்தையை அல்லது சிறப்பான ஓர் ஆசீர்வாதத்தைக் கேட்கலாம். நிச்சயமாகவே உங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆண்டவர், தம் ஏற்றவேளையில் உங்கள் ஜெபத்திற்கு பதில் அளித்து, உங்கள் இருதயத்தை சந்தோஷத்தால் நிரப்புவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம் கரங்களில் என் எதிர்காலத்தை பாதுகாத்து வைத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். காத்திருக்குதல் கடினமாகும்போது, உம் ஏற்றவேளையின்மேல் நம்பிக்கை வைக்க எனக்கு உதவும். என்மீது நீர் உரைத்திருக்கும் வாக்குத்தத்தத்தங்கள்மேல் நான் ஒருபோதும் நம்பிக்கை இழந்துபோகாதிருப்பேனாக. நீர் எனக்காக திட்டம்பண்ணியிருக்கும் எல்லா ஆசீர்வாதங்களுக்கும் என்னை ஆயத்தப்படுத்தும். என் காத்திருக்குதலுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்றும், என் நம்பிக்கை வீண்போகாது என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.